Published:Updated:

ஆப்பிள் தேசத்தின் ஆட்சி யார் கையில்... வெற்றியைத் தீர்மானிக்குமா தேர்தல் வாக்குறுதிகள்?!

இமாச்சல் ( Twitter/ @bistsanjay1961 )

8 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை, பெண்களுக்கு மாதம் ஊக்கத்தொகை என இமாச்சல் தேர்தல் களைகட்டிவருகிறது. தேர்தல் களத்தில் முந்துவது யார்?

ஆப்பிள் தேசத்தின் ஆட்சி யார் கையில்... வெற்றியைத் தீர்மானிக்குமா தேர்தல் வாக்குறுதிகள்?!

8 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, இலவச மின்சாரம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை, பெண்களுக்கு மாதம் ஊக்கத்தொகை என இமாச்சல் தேர்தல் களைகட்டிவருகிறது. தேர்தல் களத்தில் முந்துவது யார்?

Published:Updated:
இமாச்சல் ( Twitter/ @bistsanjay1961 )

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் 68 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைப்பெறவிருக்கிறது. அங்கு புதிதாக ஆம் ஆத்மி களம் கண்டாலும், பாஜக -காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டியே நிலவிவருகிறது. அந்த மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துகணிப்புகளில் பெருவாரியான இடங்களில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையால் இந்தக் கருத்துகணிப்பு முடிவுகளில் மாற்றம் ஏற்படுமா?

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

இமாச்சலைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி ஆட்சி அமைத்துவருகின்றன. இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சிசெய்யும் பாஜக-வால் மக்கள் அங்கு பிரச்னைகளைச் சந்தித்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. இந்த நிலையில் அங்கு பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள்...

 1. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது.

 2. 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

3.  பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500.

4. 300 யூனிட் மின்சாரம் இலவசம்.

 5. இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கு ரூ.680 கோடி ஒதுக்கீடு.

 6. ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் திறப்பு.

7. இலவசமாக மருத்துவம் வழங்குவதற்கு நடமாடும் மருந்தகங்கள்.

மின்சாரம்
மின்சாரம்

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அவர்களின் அறிக்கைதானா எனச் சந்தேகத்தையே கிளப்பியிருக்கிறது. காரணம், இலவசங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கட்சி, தற்போது பல இலவசங்களை வாரி வழங்கியிருக்கிறது. பாஜக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலுள்ள முக்கிய அறிவிப்புகள்...

1. புதிய தொழில் உருவாக்க `ஹிம் ஸ்டார்ட் அப்’ திட்டத்தின்கீழ் ₹900 கோடி ஒதுக்கீடு.

 2. 8 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

3. ஐந்து மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்படும்.

4. 6-12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள், கல்லூரி மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம்.

 5. `சக்தி’ என்னும் திட்டத்தின்கீழ் ரூ.12,000 கோடி ஒதுக்கப்பட்டு வரும் 10 ஆண்டுகளில் ஒவ்வொரு கோயில் ஸ்தலங்களை இணைக்க போக்குவரத்து சீர்செய்யப்படும்.

6.  `பி.எம் கிஷான் நிதி யோஜனா’ திட்டத்தின்கீழ் ரூ.3,000 கூடுதலாக ஒதுக்கப்பட்டு, 10 லட்சம் விவசாயிகளுக்கு மாதம்தோறும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

 7. ஆப்பிள் ஏற்றுமதிக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி குறைக்கப்படும்.

ஆப்பிள்
ஆப்பிள்
Photo by Towfiqu barbhuiya on Unsplas

வேலையில்லா பிரச்னை!

அந்த மாநிலத்தின் முக்கியப் பிரச்னையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை. அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அவர்களில் 1.7 லட்சத்தினர் 20-29 வயதுக்கு உட்பட்டவர்கள். இமாச்சல் பிரதேசத்தில் 9.5% சதவிகிதத்தினர் வேலை இல்லாமல் இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இது நாட்டின் சராசரி 7.8 சதவிகிதத்தைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அரசுதான் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அவர்களது முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.

 2004-ம் ஆண்டு மாநிலத்திலுள்ள வேலைவாய்ப்புகளில் 70% இடங்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக்கொண்டு நிரப்ப வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அது 2019-ம் ஆண்டு 80 சதவிகிதமாக மாற்றப்பட்டதைக் கண்காணிக்காமல் இருந்ததே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கக் காரணமாகவும் கூறப்படுகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம்!
வேலையில்லாத் திண்டாட்டம்!

கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும் இந்த வேலையில்லாத் திண்டாடத்தைத் தீர்க்க, தங்களின் தேர்தல் அறிக்கையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் பாஜக அரசு எட்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாகவும், காங்கிரஸ் அரசு ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும் மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் புதிய தொழில்களை உருவாக்கும் வகையில் 10 கோடி நிதியை ஒதுக்க திட்டங்களைத் தீட்டும் என்பதைத் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றன.

ஆப்பிள் தேசத்தின் ஆட்சி யார் கையில்?

இமாச்சல் பிரதேசத்தில் 1,14,646 ஹெக்டெர் அளவில் ஆப்பிள் உற்பத்தி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ரூ.5,000 கோடி மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கியத் தொழிலாக ஆப்பிள் விவசாயம் இருந்துவருகிறது. சுமார் இரண்டு லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலைச் சார்ந்து இருக்கின்றன.

ஆனால், கடந்த ஆண்டுகளில் ஆப்பிள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துவந்தனர். குறிப்பாக, ஜி.எஸ்.டி உயர்த்தப்பட்டது, தனியார் நிறுவனம் ஆப்பிள் விலை நிர்ணயம் செய்த காரணங்களுக்காக ஆளும் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்திலும் இறங்கினர். இந்த எதிர்ப்பை கருத்தில்கொண்டுதான் தற்போது வரும் தேர்தலில் வெற்றிபெற்றால் 18%-ஆக இருக்கும் ஜி.எஸ்.டி-யை 12%-ஆகக் குறைப்போம் என்ற தேர்தல் அறிவிப்பை பாஜக வெளியிட்டிருக்கிறது. இதனால் மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் இவர்களுக்கு ஆதரவாக ஆப்பிள் ஏற்றுமதியாளர்கள் வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

இவ்வாறு தேர்தல் அறிக்கையின் வாயிலாக கட்சிகள் முன்னால் செய்த தவறுகளைச் சரிசெய்துகொள்ளும் அறிவிப்புகளும், அதே நேரம் ஆளுங்கட்சி செய்த தவற்றைச் சுட்டிக்காட்டி அதைச் சரிசெய்வோம் என்று எதிர்த் தரப்பில் கூறப்பட்டு தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலத்தைப் பொறுத்தவரையிலும் தொடர்ந்து காங்கிரஸ் - பாஜக  மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றன. இது தொடரும் வகையில் மீண்டும் காங்கிரஸ் வெல்லுமா அல்லது அந்த வரலாற்றை உடைத்து தொடர்ந்து ஆட்சியை  பாஜக கைப்பற்றுமா... இப்படியான கேள்விகளுடன் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.