Published:Updated:

விநாயகர் சதுர்த்தியன்று இறைச்சிக்கடைகளுக்கு விடுமுறையா... அரசுத் தரப்பில் சொல்வது என்ன?

இறைச்சிக்கடை
இறைச்சிக்கடை

`விநாயகர் சதுர்த்தியன்று கடைகளை அடைக்க வேண்டும்’ என்று எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இந்தநிலையில், அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

மகாவீரர் தினம் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு இறைச்சிக்கடைகளை அடைக்க அரசு முடிவெடித்திருப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

`மதுரை வட இந்தியர் நலச்சங்கம்’ எனும் அமைப்பு, `விநாயகர் சதுர்த்தி மற்றும் ஜெயின் பண்டிகையான `பரூஷண் பர்வா’வை முன்னிட்டு பத்து நாள்கள் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை அடைக்க வேண்டும்’ என உயர்நீதி மன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுமீதான விசாரணை, கடந்த 14-ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு 18-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி
Vikatan Team

அப்போது தமிழக அரசின் சார்பாக ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன்,``டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. மதுக்கடையை 10 நாள்கள் மூட முடியாது. அதேநேரம், விலங்குகள் நலவாரியம் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந்தேதி `மதரீதியான திருவிழாக் காலங்களில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகளை மூட வேண்டும்’ என்று பிறப்பித்த உத்தரவை 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ந்தேதி திரும்பப் பெற்றுவிட்டது. அந்த விவரத்தை மனுதாரர் தெரிவிக்காமல், ஆகஸ்ட் 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். எனவே, இதை ஏற்க முடியாது. மேலும், மகாவீரர் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிக்கூடம், இறைச்சிக்கடை ஆகியவை மூடப்படுவதால், `பரூஷண் பர்வா’ பண்டிகைக்காக 10 நாள்கள் இவற்றை மூட வேண்டிய அவசியம் இல்லை” என்று பதிலளித்திருந்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவைப் பிறப்பிப்பதாகக் கூறினர்.

``இறைச்சிக்கடைகளை மூட முடிவெடுத்தால் பொது இடங்களில் கறி சமைத்து சாப்பிடுவோம்!'' - சீமான் எச்சரிக்கை

`மகாவீரர் ஜெயந்தி, வள்ளலார் பிறந்த தினம் உள்ளிட்ட நான்கு நாள்கள் தமிழகத்தில் இறைச்சிக் கடைகளை அடைக்க வேண்டும்’ என்று அரசின் உத்தரவு இருக்கிறது. ஆனால், `விநாயகர் சதுர்த்தியன்று கடைகளை அடைக்க வேண்டும்’ என்ற உத்தரவு எந்த வருடத்திலும் பிறப்பிக்கப்படவில்லை. இந்தநிலையில், அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறு கருத்து (விநாயகர் சதுர்த்தி) தெரிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

இது குறித்துப் பேசும், தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் முனீர்,

``இதுவரை எந்த வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு இறைச்சிக் கடைகளை அடைத்ததில்லை. மகாவீரர் ஜெயந்தி, மகாவீரர் நிர்வாண் தினம், ராமலிங்க அடிகளார் பிறந்ததினம், திருவள்ளுவர் தினம் ஆகிய நான்கு நாள்கள் கடைகளை அடைக்கச் சொல்லித்தான் அரசாணை இருக்கிறது. இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு கடைகளை அடைக்கச் சொல்லி எந்த உத்தரவும் எங்களுக்கு இன்னும் வரவில்லை. நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா. அப்படி ஓர் உத்தரவிருந்தால் இந்நேரம் அரசாணை எங்கள் கைகளுக்கு வந்திருக்கும்'' என்றார் அவர்.

ஜெயகுமார்
ஜெயகுமார்

இந்தநிலையில் இது குறித்து விளக்கம் கேட்க, அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயணனை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டோம்.``விநாயகர் சதுர்த்திக்கு கடை அடைக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. அட்வகேட் ஜெனரல் ஏன் அப்படிச் சொன்னார் எனத் தெரியவில்லை. மகாவீரர் ஜெயந்தி போன்ற விழாக்களைப் பட்டியலிடும்போது வாய் தவறிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தமிழக அரசின் சார்பாக அப்படி ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு