Published:Updated:

`மூடப்படுகிறதா சத்துணவு மையங்கள்?' - அரசின் புதிய உத்தரவால் அச்சத்தில் சத்துணவு ஊழியர்கள்!

சத்துணவு

தமிழ்நாட்டிலுள்ள சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியிருப்பதாகவும், ஒரே பள்ளி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையங்கள், 3 கி.மீ. சுற்றளவில் செயல்படும் சத்துணவு மையங்களின் விவரங்களை கணக்கெடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

`மூடப்படுகிறதா சத்துணவு மையங்கள்?' - அரசின் புதிய உத்தரவால் அச்சத்தில் சத்துணவு ஊழியர்கள்!

தமிழ்நாட்டிலுள்ள சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியிருப்பதாகவும், ஒரே பள்ளி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையங்கள், 3 கி.மீ. சுற்றளவில் செயல்படும் சத்துணவு மையங்களின் விவரங்களை கணக்கெடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Published:Updated:
சத்துணவு

தமிழ்நாட்டிலுள்ள சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு இறங்கியிருப்பதாகவும், ஒரே பள்ளி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையங்கள், 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள்ளாக செயல்படும் சத்துணவு மையங்களின் விவரங்களை விரைந்து கணக்கெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து, அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்துக்கும் ஆயத்தமாகி வருகின்றனர்.

சத்துணவு
சத்துணவு

சத்துணவுத் திட்ட சீரமைப்பு:

கடந்த டிசம்பர் 3-ம் தேதி சென்னையில், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் இணை இயக்குநர் தலைமையில் சத்துணவுத் திட்ட அதிகாரிகள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காணொலிக் காட்சி மூலமாக அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதில் பேசிய இணை இயக்குநர், ``ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள், ஒரு குறிப்பிட்ட சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்களின் விவரங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் என இவற்றுக்குப் பொதுவான இடத்தில் 3 கி.மீ. சுற்றளவுக்குள்ளாக பொது சத்துணவு மையம் அமைப்பதற்கு ஏற்ற இடங்கள் குறித்தான விவரங்களை வரைபடங்களுடன் திரட்ட வேண்டும். அவை அனைத்தையும் டிசம்பர் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்!" என ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சிகள், நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று (டிசம்பர் 5) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் பொது சத்துணவு மையம் அமையும் இடத்தை வரை படமாக தயாரித்து அனுப்பியிருக்கின்றனர்.

சத்துணவு ஊழியர்கள் கொந்தளிப்பு:

இந்த விவகாரம் சத்துணவு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ``தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், சத்துணவு காலிப்பணியிடங்களை நிரப்புவதாகக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, சத்துணவு மையங்களை மூடி ஆட்குறைப்பு செய்து, பணியில் இருக்கும் எஞ்சிய சத்துணவு ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறது!' என குற்றம்சாட்டியிருக்கின்றனர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்.

சத்துணவு ஊழியர்கள்..!
சத்துணவு ஊழியர்கள்..!

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் மலர்விழியிடம் பேசியபோது, ``தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தற்காலிகப் பணியிலிருக்கும் சத்துணவு ஊழியர்களை அரசு பணியாளராக்கி ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்படும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகிவிட்ட நிலையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்தநிலையில், ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்கள், 3 கி.மீ சுற்றளவில் உள்ள சத்துணவு மையங்களை கணக்கிட அரசு உத்தரவிட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும் மிகுந்த ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் மலர்விழி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் மலர்விழி

தமிழ்நாட்டில் 43,000 பள்ளி சத்துணவு மையங்களில் 1,29,000 சத்துணவு ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தமிழ்நாடு அரசு தற்போது எடுத்துள்ள முடிவின்படி 85,000 பணியிடங்கள் காலியாகும் நிலை ஏற்படும். எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஒழிந்துவிடும். எனவே அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை, சத்துணவு திட்டம் தற்போது உள்ள நிலையிலேயேத் தொடரவேண்டும். மாறாக திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு திட்டத்தை சீர்குலைக்க முயற்சித்தால் ஊழியர்கள் வெகுண்டெழுந்து போராடுவார்கள். அரசு ஊழியர் விரோதப் போக்கை கைவிட்டு காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எங்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவைக் கூட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்!" என தெரிவித்தார்.

`28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிவரும்!' - அன்புமணி

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``சத்துணவுத் திட்டத்தின் முதன்மையான நோக்கங்களில் குறிப்பிடத்தக்கது மாணவர்களுக்கு சூடான உணவை, சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்பது தான். பள்ளி வளாகத்தில் சமைத்து வழங்குவதன் மூலம் மட்டும் தான் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும். உணவை சூடாக உட்கொள்ளும் போது அது செரிமானத் திறனை அதிகரிக்கிறது; உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது; உணவில் உள்ள நுண்ணூட்டச் சத்துகள் உடலில் முழு அளவில் கலப்பதை உறுதி செய்கிறது; உணவில் பாக்டீரியா போன்றவை உருவாவதைத் தடுக்கிறது. ஆனால், ஏதோ ஓரிடத்தில் உணவை தயாரித்து பல கி.மீ தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் போது உணவு ஆறி விடக்கூடும். ஆறிய உணவு சத்துணவின் நோக்கத்தை நிறைவேற்றாது. அதுமட்டுமின்றி, ஓரிடத்தில் தயாரித்து பல இடங்களுக்கு உணவை கொண்டு செல்லும் போது சுகாதாரத்தை பேணுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

சத்துணவு பணியாளர்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும் போது, ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால், சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படும். இது மோசமான பணியாளர் விரோத நடவடிக்கையாகவே அமையும். எனவே, சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூகநலத் துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க-வின் பதில்:

இந்த விகாரம் குறித்து விளக்கம் கேட்டு தி.மு.க செய்தித்தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனைத் தொடர்புகொண்டோம். ``ஒருங்கிணைந்த பொது சத்துணவு மையங்கள் அமைக்கும் திட்டம் குறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு பரிந்துரையைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அது பயனுள்ளதாக இருக்குமா என்பதை ஆய்வு செய்வதற்காகத்தான் கணக்கெடுப்பு நடத்த மட்டுமே உத்தரவிட்டிருக்கிறார்கள். இன்னும் எந்தவித முடிவையும் எடுக்க வில்லை; அதற்கான அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை! மக்களுக்கும், ஊழியர்களுக்கும் எது நல்லதோ அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுப்பார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மேலும், முதலமைச்சர் சொன்னதுபோல, எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விட மாட்டோம். ஆனால் அதை உடனடியாகச் செய்யமுடியாது. நிதிநிலை இருந்தால்தான் எல்லா வாக்குறுதிகளையும் எங்களால் நிறைவேற்ற முடியும். கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 2-வது இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். இந்த ஐந்து ஆண்டுகளுக்குள் படிப்படியாக சத்துணவு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உள்பட எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்!" என்றார்.