Published:Updated:

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா? - ஒரு விரிவான அலசல்!

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த பத்தாண்டு காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்ததா, சமூகச் செயற்பாட்டாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா? - ஒரு விரிவான அலசல்!

எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த பத்தாண்டு காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்ததா, சமூகச் செயற்பாட்டாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

Published:Updated:
எம்.ஜி.ஆர்

அரசியலுக்கு வரும்போதே `கறுப்பு எம்.ஜி.ஆர்' என்கிற அடைமொழியோடுதான் வந்தார் நடிகர் விஜயகாந்த். 2005-ல் கட்சி ஆரம்பித்த நாளன்று, ஜானகி அம்மாவிடம் பரிசாகப் பெற்ற எம்.ஜி.ஆரின் பிரசார வாகனத்தில்தான் மேடைக்கே வந்தார். அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கொஞ்ச நாளில், சென்னை வேலப்பன் சாவடியிலுள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்துவைத்தார் நடிகர் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல், ``எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்'' என்றும் அப்போது பேசினார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மதுரையில் பிரசாரத்தைத் தொடங்கிய நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் `எம்.ஜி.ஆரின் நீட்சி நான்' என்கிறார். திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த இவர்கள் மட்டுமல்ல, வேல் யாத்திரைக்காகத் தயார் செய்யப்பட்ட பாடலில், எம்.ஜி.ஆரின் படத்தையும், `பொன்மனச்செம்மலின் அம்சமாக மோடியைக் கண்டோமடா...’ என்கிற வரியையும் இடம்பெறச் செய்திருந்தது தமிழக பா.ஜ.க. இப்படி மாற்றத்தை முன்வைத்துவருகிறோம் எனச் சொல்லிக்கொள்பவர்கள் குறிப்பாக எம்.ஜி.ஆரைத் தங்களின் அடையாளமாக முன்னிறுத்துவது ஏன்...

அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி செய்த காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்ததா, சமூகச் செயற்பாட்டாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுப.உதயகுமாரன் (எழுத்தாளர்,சிந்தனையாளர்)

``எம்.ஜி.ஆர் ஆட்சியைப்போல என்று சொல்லுமளவுக்கு அவர் அப்படி என்ன புரட்சி செய்தார், என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. அவரின் வழியில் ஆட்சி அமைப்போம் என்று சொல்பவர்கள் அவர் செய்த சாதனைகள் இவைதான் என ஐந்து விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லட்டும். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதற்கு அதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்துகின்றனர். தங்களின் அரசியல் வருகையை நியாயப்படுத்தவே அவரைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், அந்த ஒப்பீட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், எம்.ஜி.ஆர் பெரியார், அண்ணா காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர். எம்.எல்.ஏ-வாக, தி.மு.க-வின் பொருளாளராக இருந்தவர். கட்சி ஆரம்பித்த பிறகும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழகம் முழுக்க அறியப்பட்டிருந்தவர். பல காலம் களப்பணியாற்றிய பிறகுதான் ஆட்சிக்கு வந்தார்.

சுப.உதயகுமாரன்
சுப.உதயகுமாரன்

ஆனாலும், அவர் எந்தவிதமான சமூக மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவரது ஆட்சியில்,சமூக, பொருளாதார, அரசியல் மாற்றம் என்று எதுவும் நிகழவில்லை. தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார். ஆனால் அது என்ன என்பதை விளக்கமாகச் சொல்லவேயில்லை. அவருக்கு எந்தப் பொருளாதாரச் சித்தாந்தமும் கிடையாது. சினிமா கவர்ச்சியை மட்டுமேவைத்து ஆட்சியைப் பிடித்தார். அதையே மூலதனமாகவைத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார், இந்தியாவில் வேறெங்கும் நடக்காத ஒரு நிகழ்வாக, தொடர்ச்சியாக மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். மக்கள் அவருக்கு விசுவாசமாக இருந்த அளவுக்கு அவர் இருந்தாரா என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன. காமராஜர் கல்வியில், நிர்வாகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆனால், எம்.ஜி.ஆர் என்ன செய்தார்... விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்பார்கள். ஆனால், அது குறித்து ஒரு புரிதல் அவருக்கு இருந்ததா என்பதே கேள்விக்குறிதான். மீண்டும் சினிமா சார்ந்து அரசியல் களத்தை மாற்ற முயற்சிக்கும் ஒரு ஏமாற்று வேலையாகவே எம்.ஜி.ஆரின் ஆட்சி என்று சொல்வதை நான் பார்க்கிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோழர் தியாகு (எழுத்தாளர், சிந்தனையாளர்)

``எம்.ஜி.ஆர் ஏழைகளுக்குச் சில நன்மைகள் செய்திருக்கிறார். மனிதாபிமானத்தோடு சில விஷயங்களில் நடந்துகொண்டார். ஆனால், இவர் ஆட்சியில்தான் சாராயக் கடைகளில் தினமும் வசூல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் தனியார் ஆங்கிலக் கல்வி வணிகம் பெருகியது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சுயநிதிக் கல்வி நிலையங்களை பன்மடங்காகப் பெருக்கினார். எம்.ஜி.ஆரிடம் அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் கொடுத்த ஊழல் புகார்களைப் பார்த்தாலே அவர் ஆட்சி எப்படியிருந்தது என்று தெரிந்துவிடும். ஆனால், தன்னுடைய மோசமான உள்பகுதியை வெளியே தெரியாமல் மறைத்துக்கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது.

தோழர் தியாகு
தோழர் தியாகு

அரச ஒடுக்குறைகளும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மிக அதிகமாகவே இருந்தன. மீனவர்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான். திருப்பத்தூர், தருமபுரியில் பலரைக் கட்டிவைத்து சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான். அதை எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசின் நேரடி உத்தரவில் நடந்திருக்கலாம் எனச் சொல்லலாம். ஆனால், அதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணமே எம்.ஜி.ஆரிடம் இருந்ததில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது. அதேபோல, எமெர்ஜென்சியைத் தீவிரமாக ஆதரித்தவர்தான் எம்.ஜி.ஆர். அதற்கு தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நோக்கம் காரணமாக இருந்திருக்கலாம். மாநிலக் கட்சிகளுக்குத் தடை என இந்திரா காந்தி சொன்னவுடன், கட்சியின் பெயரையே அகில இந்திய அண்ணா தி.மு.க என மாற்றினார்.

தன் தோற்றத்தைவைத்து மக்களை வசியப்படுத்தினார். வீட்டுக்கு வருகிறவர்களை சாப்பிட்டுப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துவார். தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், தனித்த பண்பு வேறு; ஒரு முதல்வராக அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பது வேறு. மக்களுக்கு அதை வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தெரியவில்லை.''

தராசு ஷ்யாம் (மூத்த பத்திரிகையாளர்)

``எம்.ஜி.ஆரை அனைவரும் சொந்தம் கொண்டாடக் காரணம், மற்ற தலைவர்களின்மீது இருப்பதுபோல அவர்மீது எந்த சர்ச்சையும் கிடையாது. அதேபோல,. அநேகமான மக்களின் மனங்களைக் கவர்ந்த தலைவராக எம்.ஜி.ஆர் இருந்தார். நம்பிக்கை அரசியலுக்கு நாயகனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர் பெயரைச் சொன்னால், நம் மீதும் நம்பிக்கை வரும் என்பதாலேயே அவர் பெயரை மற்றவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அவர் பெரிய திட்டங்களுக்குள் எல்லாம் போகவில்லை. சத்துணவுத் திட்டம் போன்ற நேரடியாகப் பயனடையக்கூடிய திட்டங்களையே கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், விவசாயிகள் போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் இறந்தது என்பது உண்மைதான். ஆனால், கலைஞர் ஆட்சியிலும் அது நடந்திருக்கிறது. 80-84 எம்.ஜி.ஆர் ஆட்சியில் பல குளறுபடிகள் இருந்தன. 77-80 ஆட்சியில் எந்தக் குளறுபடியும் இருந்ததில்லை. மிகவும் சிறப்பான ஆட்சியாக அது இருந்தது. 84-க்குப் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அது குறித்து நாம் பேச வேண்டியதில்லை.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

எம்.ஜி.ஆர் வாக்குவங்கி தற்போது இருக்க வாய்ப்பே இல்லை. எம்.ஜி.ஆர் ஆட்சி தேவை என்று தற்போது சொல்ல முடியாது. காமராஜர் ஆட்சியும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் மற்றவர்களிடம் நடந்துகொண்டவிதத்துக்கு ஏற்பட்ட நம்பிக்கைதான் அவருக்கான செல்வாக்கு. ஈகை குணம் அவருக்கு இயல்பிலேயே இருந்தது. திரைத்துறை மூலம் அது பிரபலமானது. ஆனால், ரஜினி, கமலுக்கு அத்தகைய குணம் இருந்ததாகத் தெரியவில்லை. விஜயகாந்தை வேண்டுமானால் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளலாம்.

எம்.ஜி.ஆரின் திரை பிம்பம்தான் மக்கள் செல்வாக்குக்கான காரணமாக இருந்தாலும், திரையில் அவர் என்ன செய்தார் என்பதைப் பார்க்க வேண்டும். `அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்; சிகரெட் பிடிக்காதீர்கள்' போன்ற நல்ல விஷயங்களை போதித்தார். அதனால்தான், தாய்மார்களுக்கு அவரைப் பிடித்தது. அவரை, நம்ம வீட்டுப் பிள்ளை எனப் பார்த்தார்கள். எம்.ஜி.ஆர் எதையும் சாதிக்கவில்லை என்று சொல்வது வேறு விஷயம். ஆனால், உளவியல்ரீதியாக பல மாற்றங்களை சமூகத்தில் அவர் கொண்டு வந்திருக்கிறார். அவருக்குக் கிடைத்த சாதனமான சினிமாவின் மூலம், சமூக முன்னேற்றத்துக்காகவும், சமூக ஒழுக்கத்துக்காகவும், தனிநபர் ஆரோக்கியத்துக்காகவும் பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். தன் பிற்கால சினிமாக்களில் விஜயகாந்தும் அப்படித்தான் நடந்துகொண்டார்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism