Published:Updated:

`அட்மிஷன் தாமதம் டு மழலை வகுப்புகள் மூடல் வரை...’ - குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சர்?!

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அரசுப் பள்ளிகளில் தாமதமான மாணவர் சேர்க்கை, எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் மூடல் போன்ற பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

`அட்மிஷன் தாமதம் டு மழலை வகுப்புகள் மூடல் வரை...’ - குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சர்?!

அரசுப் பள்ளிகளில் தாமதமான மாணவர் சேர்க்கை, எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் மூடல் போன்ற பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களும் கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

Published:Updated:
அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள், பிரச்னைகளில் பள்ளிக்கல்வித்துறை சிக்கித் தவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை எந்த அளவுக்குப் பிரச்னைகளில் சிக்கிச் சீரழிந்தது என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

திமுக ஆட்சியில் அந்தப் பிரச்னைகள் களையப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சிறப்பாகச் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்தார். தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற நேரத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், தொற்று குறைந்தவுடன் திறக்கப்பட்டன. கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன. பள்ளிகள் திறக்க இன்னும் ஐந்து நாள்களே இருக்கும் நிலையில், இன்றுவரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்தகாலங்களில் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதால், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களில் பலர் வேலை, வாழ்வாதாரங்களை இழந்த காரணத்தால், தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாறியுள்ளனர்.

இதை, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். அதேநேரத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

தற்போது, ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. இது, அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பா.ம.க-வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், `தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின் தொடக்கத்திலோ மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், மே மாதத்தில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதுதான் அவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள், ஆசிரியர் தேவைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திட்டமிட வசதியாக இருக்கும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோதும்கூட, மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கிவிட்டது. இப்போது கொரோனா பரவல் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காததற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாணவர் சேர்க்கை உடனே தொடங்கப்பட வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

மே மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை. தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவிகித இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருகின்றன.

கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றினார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்த்துப் படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தச் சூழலை பயன்படுத்திக்கொண்டு மே மாதத் தொடக்கத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தைவிட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர். அந்த வாய்ப்பை அரசுப் பள்ளிகள் இழந்துகொண்டிருக்கின்றன’ என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் ஏற்கெனவே விகடன் சார்பாகப் பேசியபோது. "மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கத் தொடங்கியிருப்பது உங்களுக்கேகூடத் தெரிந்திருக்கலாம். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம். எல்லோரும் பள்ளியில் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும் என்று சர்குலர் மூலம் சொல்லியிருக்கிறோம். விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து கொடுத்துவிட்டு, ஜூன் 13 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பெற்றோர் விருப்பத்துடன் இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது" என்றார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக, 2018-ம் ஆண்டு முந்தைய அ.தி.மு.க அரசு எல்.கே.ஜி., யூ.கே.ஜி மழலையர் வகுப்புகளைக் கொண்டுவந்தது. தற்போது, மழலையர் வகுப்புகளை மூடுவதென்று தி.மு.க அரசு முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த முடிவும் பல தரப்பினரால் விமர்சிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு
அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு

2018-ம் ஆண்டு, 2,400 அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவற்றில், 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் 60,000 மழலைகள் சேர்ந்து படித்தனர். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், எல்.கே.ஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் சமீபத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பாடமெடுப்பதற்கு மாற்றப்பட்டனர். இதனால், மழலையர் வகுப்புகளுக்குப் பாடமெடுக்க ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

எனவே, மழலையர் வகுப்புகளை மூடுவதென்று அரசு முடிவுசெய்துவிட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படவுள்ளன. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார்.

பத்தாண்டுக்கால ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான குளறுபடிகளை ஏற்படுத்திவிட்டு அ.தி.மு.க-வினர் சென்றுவிட்டார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்தார். தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் இருந்தன என்கிற குற்றச்சாட்டும் அ.தி.மு.க ஆட்சி மீது முன்வைக்கப்பட்டது. தற்போது, அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை சரிந்திருக்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

தமிழகத்தில் 22 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 11 அரசுப் பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். 24 அரசுப் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். 41 பள்ளிகளில் தலா மூன்று மாணவர்களும், 50 பள்ளிகளில் தலா நான்கு மாணவர்களும் படிக்கின்றனர். மொத்தத்தில் 669 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தி.மு.க அரசு இருக்கிறது. ஆனால், தாமதமான மாணவர் சேர்க்கை, மழலையர் வகுப்புகள் மூடல் போன்ற நடவடிக்கைகள், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே தி.மு.க அரசும் செயல்படுகிறதோ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism