Published:Updated:

`கார் ஓட்டுநருக்கு கொரோனா!’ -தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்?

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

கார் ஓட்டுநருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூன்று கட்டமாக நடவடிக்கை எடுத்துள்ளபோதும், பாதிப்பு நாள்தோறும் அதிகரிக்கிறது. இந்தநிலையில், ஆரணி தொகுதி எம்.எல்.ஏ-வும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனின் கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

ஓட்டுநர் உள்பட அமைச்சரைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வந்த காரை தொற்றுக்குள்ளான கார் ஓட்டுநர்தான் ஓட்டினார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமைச்சர் ஆரணிக்குப் புறப்பட்ட நேரத்தில் பரிசோதனை முடிவுகள் குறித்து போனில் தகவல் தெரிவித்துள்ளனர். தனது ஓட்டுநருக்குத் தொற்று இருப்பதைத் தெரிந்துகொண்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், படபடப்புடன் பாதி வழியில் அந்த காரில் இருந்து கீழே இறங்கிக்கொண்டார். ஓட்டுநரை மருத்துவமனையில் சேருமாறு கூறிவிட்டு, வேறொரு காரை வரவழைத்து அங்கிருந்து ஆரணிக்குச் சென்றார் அமைச்சர்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

அமைச்சரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதுதொடர்பான விவரங்களை அறிய சேவூர் ராமச்சந்திரனின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டோம். போனை எடுத்துப் பேசிய உதவியாளர் ஒருவர், ‘அமைச்சர் பிஸியாக இருக்கிறார். வந்தவுடன் பேசச் சொல்கிறேன்’ என்று கூறி அழைப்பைத் துண்டித்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு