Published:Updated:

பெகாசஸ்: `இன்று இரண்டாவது பட்டியல்’ - லிஸ்ட்டில் பெண் அமைச்சர், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு புள்ளி?!

'பெகாசஸ்' ஸ்பைவேர்
'பெகாசஸ்' ஸ்பைவேர்

தற்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐந்து முக்கிய அமைச்சர்களின் எண்களும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மூத்த அமைச்சர்களின் போன்களும் இந்த ஒட்டுக்கேட்பில் தப்பவில்லையாம்.

'பெகாசஸ்' மென்பொருள் மூலம் இந்தியாவில் முக்கியப் புள்ளிகள் பலரது போன்கள் கண்காணிக்கப்பட்டுவந்த விவகாரம் விஸ்வரூம் எடுத்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்கிற நிறுவனம், பெகாசஸ் என்கிற ஒரு மென்பொருளை பல நாடுகளின் அரசாங்கங்களுக்கு விற்பனை செய்திருக்கிறது. இந்த மென்பொருள் மூலம் ஒரு நபரின் போனிலுள்ள தகவல்கள் அனைத்தையும் உளவு பார்க்க முடியும். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் போன்கள் டேப் செய்யப்பட்டதாக நேற்று ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியானது.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

மேலும் பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் இந்தத் தகவல் உண்மை என்றும், இந்தியாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் போன்களை டேப் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் 18-ம் தேதி இரவு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்ட, இந்தியாவைச் சேர்ந்த நாற்பது ஊடகவியலாளர்கள் குறித்த சில தகவல்கள் வெளியாகின. அதில் சில பெயர்களும் வெளியாகின.

இந்தநிலையில், இந்தத் தகவல்களை வெளியிட்டுவரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை, ``இந்தியா மட்டுமன்றி உலகில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த பெகாசஸ் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள். அது குறித்து விரிவான விசாரணை நடந்துவருகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் நான்கு நாள்கள் தொடர்ச்சியாக இந்தியாவில் யாரெல்லாம் இந்தக் கண்காணிப்பு வளையத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்ற விவரங்களையும் வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அடுத்த பட்டியலை வாஷிங்டன் போஸ்ட் வெளியிடவிருக்கிறது. அந்தப் பட்டியலில் தற்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐந்து முக்கிய அமைச்சர்களின் எண்களும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, மூத்த அமைச்சர்களின் போன்களும் இந்த ஒட்டுக்கேட்பில் தப்பவில்லையாம்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஆர்.எஸ் .எஸ் அமைப்புக்கு நெருக்கமானவராக இருக்கும் மூத்த கேபினெட் அமைச்சர் ஒருவரின் போனில் இந்த மென்பொருள் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அதேபோல் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நெருக்கமான பெண் அமைச்சர், சாந்தமான அமைச்சர் ஒருவர் என ஐந்து கேபினெட் அமைச்சர்களின் போன்களில் பெகாசஸ் வேலை செய்திருக்கிறது. இவை தவிர, கடந்த மார்ச் மாதம் முதல் பாஜக-வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் முதல்வர் ஒருவரின் போனும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறது.

அதேநேரம், என்.எஸ்.ஓ நிறுவனம் இந்த மென்பொருளுக்கான உரிமத்தை எந்த ஒரு நாட்டின் அரசாங்கத்தைத் தவிர, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்பதைத் தெளிவுப்படுத்தியிருக்கிறது. தீவிரவாதச் செயல்களை கண்காணிக்கவே இந்த மென்பொருள் பயன்படுத்தப்படும் என்கிற உறுதியை இந்த நிறுவனத்துக்கு அளித்த பிறகே இந்த மென்பொருளை விற்பனை செய்திருக்கிறது என் எஸ்.ஓ. ஆனால், தற்போது இந்தியாவில் ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அமைச்சர்கள் எனப் பலரது போன்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருவதால் இந்திய அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'பெகாசஸ்' ஸ்பைவேர்:  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்?!
அடுத்த கட்டுரைக்கு