``திறந்தவெளி பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் பட்டப் படிப்பை முடிக்காமல், நேரடியாக பட்ட மேற்படிப்பு படித்தவர்களை அரசுப் பதவிகளுக்கான பணி நியமனத்துக்கோ அல்லது பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது'' என்று அதிரடித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!
கல்வியைப் பரவலாக்கவும், உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் 'திறந்தவெளி பல்கலைக்கழகம்' என்ற தேசிய கல்விக்கொள்கை கடந்த 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதாவது, குடும்பச் சூழல் காரணமாக கல்வி தடைப்பட்டுப்போனவர்கள், தாழ்வு மனப்பான்மையுடன் முடங்கிப்போய்விடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டன. அதாவது, பள்ளிப் படிப்புகளில் தேர்ச்சியடையாதவர்களும்கூட, பிற்காலத்தில் நேரடியாக பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை இந்தத் திறந்தவெளிப் பல்கலைக் கழகங்கள் வழியே படித்து தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

ஆனால், திறந்தவெளிப் பல்கலைக்கழகம் வழியே குறுகிய காலத்தில் ஒருவர் பட்டம் பெற்றுவிட முடியும் என்ற நடைமுறை, சமூகச் சூழலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. அதாவது பள்ளி, கல்லூரி வகுப்புகளுக்குச் சென்று பொறுமையாகப் பல வருடங்கள் படித்து, தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர்களோடு, மிகக் குறுகியகாலத்திலேயே திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் படித்து, பட்டம் பெற்றவர்களும் வந்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் போட்டியிடுவது பலத்த விமர்சனத்துக்குள்ளானது.
இது போன்ற சூழலில், இந்த இரண்டு தரப்பினரில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது குறித்து அரசுத் தரப்பிலிருந்தும் குழப்பமான நடைமுறைகளே பின்பற்றப்பட்டுவந்தன. அதாவது, 'திறந்தவெளி பல்கலைக்கழகப் பட்டம் என்பது முறையான படிப்புக்கு இணையானது. அரசு வேலை வாய்ப்புக்கு ஏற்றது' என்று கடந்தகாலத்தில் தமிழக அரசு ஓர் அரசாணை பிறப்பித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனால், இது குறித்த வழக்கு ஒன்றில், 'திறந்தவெளிப் பல்கலைக்கழக பட்டம், முறையான படிப்புக்கு இணையானது அல்ல' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றி அரசாணையை மாற்றிப் பிறப்பித்தது. அதாவது, '10 மற்றும் 12-ம் வகுப்பு முடிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் நேரடியாகப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்தவர்கள் பொதுப்பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறத் தகுதியற்றவர்கள்' என அரசாணை பிறப்பித்துவிட்டது. இப்படிக் குழப்பநிலைகள் தொடர்ந்துகொண்டிருந்தன.
இந்தநிலையில்தான், பத்திரப் பதிவுத்துறையின் இரண்டாம் நிலை சார்பதிவாளராக தேர்ச்சி பெற்றிருந்த செந்தில்குமார் என்பவர், 'துறை சார்ந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள எனக்கு முதல் நிலை சார்பதிவாளராக பதவி உயர்வு தர வேண்டும்' எனக் கோரியிருந்தார். ஆனால், 'கல்லூரிக்குச் சென்று படித்து இளங்கலைப் பட்டம் பெறாமல், நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்ட மேற்படிப்பை முடித்திருப்ப்தால், செந்தில்குமாருக்கு பதவி உயர்வு தர முடியாது' என்று அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது வணிக வரித்துறை.

இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பதவி உயர்வுப் பட்டியலில், செந்தில்குமார் பெயரை சேர்க்கச் சொல்லி வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த வணிக வரித்துறை, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ``பட்டப் படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவேண்டிய தேவையில்லை'' எனத் தீர்ப்பளித்துள்ளது.
`திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், பட்டம் பெறாமல் நேரடியாக மேற்படிப்பு படித்தவர்களுக்கு அரசுத் துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது' என்ற இந்தத் தீர்ப்புதான் தற்போது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``அரசு நிறுவனங்களில், பதவி உயர்வு பெறுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டிருக்கும் சிலர் குறுகிய நோக்கத்தோடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் வழியே மேற்படிப்பு படித்து முதுகலைப் பட்டம் பெற்று வந்துவிடுகின்றனர். இப்படி இவர்கள் குறுக்குவழியில் முதுகலைப் பட்டம் படித்து, பதவி உயர்வைப் பெற்றுவிடுவதால், ஏற்கெனவே நேரடியாக பள்ளி, கல்லூரி சென்று படித்து பட்டம் பெற்று பதவி உயர்வுக்குத் தகுதியான நபர்களாக இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு, இந்தச்சூழலை மாற்றி, தகுதிவாய்ந்த நபர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வழி செய்திருக்கிறது... இது வரவேற்கத்தக்கது'' என்கிறது ஒரு தரப்பு.
மற்றொரு தரப்போ, ''அனைவருக்கும் உயர் கல்வி என்ற உயரிய நோக்கத்தோடு அரசால் கொண்டுவரப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு நிறுவனங்களிலேயே அங்கீகாரம் மறுக்கப்பட்டால், இது அவமானம் இல்லையா!'' என்று கொதிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். ``இந்த விவகாரத்தில், முழு விவரங்களையும் அறிந்த பின்னர்தான் தெளிவானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.
இப்போது கிடைத்துள்ள பத்திரிகைச் செய்தியை வைத்துச் சொல்வதென்றால், பட்டப் படிப்பை முடித்த ஒருவர்தான் முதல்நிலை சார்பதிவாளர் என்ற பதவியில் சேர்வதற்கான தகுதி உடையவர். திறந்தவெளிப் பல்கல்கலைக்கழகம் வழியே நேரடியாகப் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள செந்தில்குமார், இரண்டாம்நிலை சார்பதிவாளர் பணியிலுள்ள தன்னை முதல்நிலை சார்பதிவாளராகத் தேர்வு செய்யுமாறு வணிக வரித்துறையிடம் கோரிக்கை வைக்கிறார்.
முறையாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இளங்கலைப் பட்டம் பெற்றவர்தான் சார்பதிவாளர் பதவிக்குத் தகுதியானவர் என்கிறபோது, நேரடியாகப் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள செந்தில்குமாருக்கு பதவி உயர்வு கிடைக்கப்பெறுவதற்கான தகுதி இல்லை என்று உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆக, இது ஒரு தனிமனித பிரச்னை அல்லது தனிமனித பாதிப்பு. எனவே, செந்தில்குமாரின் தகுதி நிலை என்ன, அரசுத் தரப்பில் ஏன் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது குறித்த முழு விவரங்களையும் அறிந்த பின்னரே இது குறித்த என்னுடைய கருத்தைச் சொல்ல முடியும்.

பொதுவாக, சமூகம் சார்ந்து சிந்திக்கும்போது, திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் படித்து முடித்தவர்களுக்கும் முறையாக பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருபவர்களுக்கும் இடையே ஒரு போட்டிச் சூழல் உருவானால், முறையாகக் கல்வி பயின்று வந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து!'' என்கிறார்.