Published:Updated:

கொரோனா முதல் ட்விட்டர் வரை... சமாளிக்க முடியாத அளவுக்கு மோடி அரசுக்கு நெருக்குதலா?

மோடி
மோடி

கொரோனாவை சமாளிக்கவில்லை என ட்விட்டரில் டூல் கிட் உருவாக்கி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. இதனால் மக்களுக்கான தேவையானதை செய்ய முடியாமல் எதிர்க்கட்சிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன என பா.ஜ.க-வினர் கூறி வருகின்றன.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியது முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்பட மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தால் அன்றாட உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. பிணங்களைப் புதைக்க முடியாத அளவுக்கு மயானங்கள் திணறிக்கொண்டிருக்கின்றன. ”இதற்கெல்லாம் காரணம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வரப்போகிறது என்று வல்லுநர்கள் எச்சரித்த போதும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் கொரோனாவை வென்றுவிட்டோம் என்று கூறி நான்கு மாநிலத் தேர்தல்களை நடத்துவதிலும் மதக் கூட்டங்கள் நடத்துவதிலும் கவனம் செலுத்திய மத்திய அரசுதான்” என்கிறது எதிர்க்கட்சிகள். எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களில் பலரும் மத்திய பா.ஜ.க அரசு மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்கள் மூலமாக எழுப்பினார்கள். ட்விட்டரில் எழுப்பப்பட்ட இத்தகைய விமர்சனங்கள் உலக அளவில் மோடி அரசின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக பா.ஜ.க-வின் கூறினர்.

ட்விட்டர்
ட்விட்டர்

சமூக வலைதள ‘டூல்கிட்’ ஒன்றை காங்கிரஸ் கட்சி தயாரித்துக் கொடுத்ததாக பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரான சாம்பித் பத்ரா ட்விட்டரில் வெளியிட்டார். அது உண்மைக்கு மாறானது, திரிக்கப்பட்டது என்கிற அர்த்தத்தில் அவரது ட்வீட்டை ட்விட்டர் டேக் செய்தது. ட்விட்டர் நிர்வாகத்தின் அந்த நடவடிக்கையால், பா.ஜ.க தலைவர்கள் கோபமடைந்தனர். கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் அரசு தவிக்கிறது என சித்திரிக்க அரசியல் ரீதியில் முயற்சி நடக்கிறது” என வெளி விவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி எங்கே? - எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பும் அரசின் அணுகுமுறையும்

சமாளிக்க முடியாத அளவுக்கு மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றனவா எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்: “எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனங்களை வேண்டுமானால் அரசியல் நோக்கத்தோடு, ஆதாயத்தோடு செய்யப்பட்டது என பா.ஜ.க-வினரோ, பிரதமரோ சொல்லலாம். ஆனால், நாட்டு நலனில், எதிர்காலத்தில், பெரும் பரப்பிலான மக்கள் மீது அக்கறை கொண்ட நீண்ட நெடிய பாரம்பர்யம் உடைய, இந்தியா மீது, இந்தியாவின் பொருளாதாரத்தை சார்ந்து இருக்கும் நாடுகளிலிருந்து வரும் சர்வதேச ஊடகங்கள் விமர்சனம் செய்கின்றனர். பெரிய பேரழிவை நோக்கி இந்தியாவை மோடி வழிநடத்துகிறார் என லண்டன் டைம்ஸ் எழுதுகிறது. அந்த ஊடகங்களுக்கு அந்தந்த நாட்டில் இருக்கும் தூதரகங்கள் மூலம் கண்டனக் கடிதங்களை எழுத வைக்கிறது மோடி அரசு.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

உலகத்தில் இருக்கும் பெருந்தொற்று நோய் தொடர்புடைய அறிஞர்கள் எல்லாம் மோடியை விமர்சனம் செய்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் உலகங்கள் ஏற்றுக்கொண்ட தொற்றுநோய் வல்லுநர் ஃபாஸி ‘மோடி அரசு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இனியாவது அதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்கிறார். உலகளாவிய பொருளாதார வல்லுநர்களும் மோடி அரசின் மீதான தங்கள் விமர்சனத்தைச் சொல்கிறார்கள்.

மோடி அரசிடம் வேலை பார்த்து, செயல்பாட்டில் முரண்பாடு கொண்டு வெளியில் வந்த இந்திய வல்லுநர்கள் ‘மோடி அரசு தொற்றுநோய் தொடர்பாகவும் இன்ன பிறவற்றிலும் தேர்ந்த வல்லுநர்களை அருகில் வைத்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பதில்லை. எது ஒன்றுக்கும் தொடர்பில்லாத அதிகாரிகள் சொல்வதைத்தான் மோடி அரசு கேட்கிறது’ என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். இந்திய அரசியல் சாசன அடிப்படையில் நமக்கென்று ஒரு நாடாளுமன்றம் கொடுத்திருக்கிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அதுதான் அதிகாரத்தைக் கொடுக்கிறது. ஆனால், அந்த நாடாளுமன்றம் முடங்கியிருப்பது மட்டுமல்ல, காணொளி வழியாக ஆலோசனை நடத்தலாம் என்று எத்தனை முறை கூறியும் நிலைக்குழுவைக் கூட்ட முடியாது என்று மறுக்கிறார்கள்.

மத்திய அமைச்சர்கள் ஆலோசனை
மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாகத் தடுப்பூசி செலுத்தும் சுமையை மட்டும் மாநில முதல்வர்கள் தோளில் ஏற்றிவைத்துவிட்டார். தடுப்பூசியை மத்திய அரசுதான் கொள்முதல் செய்ய வேண்டும். மாநில அரசுகள் மூலம் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேருங்கள் என்று எத்தனையோ முறை நாம் எடுத்துக் கூறிவிட்டோம். வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட அனைத்துக் கொள்ளை நோய்க்கான தடுப்பூசிகளும் இந்த அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்களின் நிதி சுமையை குறைக்க நடத்தப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தையே எட்டு மாதங்களுக்குப் பின் தற்போதுதான் கூட்டியிருக்கிறார்கள். 31 பேர் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியின் சார்பில் கிட்டத்தட்ட 17 பேர் இருக்கிறார்கள். எதிராக இருக்கும் 14 மாநிலங்களில் இருந்துதான் இந்தியாவிற்கான வரி வருவாய் இருக்கிறது. பெரும்பான்மையாக இருக்கும் பா.ஜ.க ஆதரவாளர்கள் எடுக்கும் முடிவைத்தான் மற்றவர்கள் ஏற்க வேண்டும். பி.எம்.கேர்ஸ் என்று சொல்லிப் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறீர்கள். அந்தப் பணம் என்ன ஆனது, யாருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள், மாநிலங்களுக்கு அதிலிருந்து ஒதுக்கிய பணம் என்ன என்றால் அதற்கு எந்தப் பதிலும் இருக்காது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் இவர்களின் நிர்வாகத்திறன் மீது விமர்சனத்தை வைக்கிறார்கள். கொரோனாவில் இந்த மோடி அரசு மிகப் பரிதாபகரமாகத் தோற்றுப் போய்விட்டது இந்த நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகளைக் கூட சந்திக்காத மோடியின் செயல்பாட்டைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கத்தான் செய்வோம்” என்றார்.

சர்வதேச ஊடகங்களின் கொரோனா கவரேஜ்! - மோடியின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டனவா?

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி திருப்பதி நாராயணனிடம் பேசினோம், “எதிர்க்கட்சிகள் மக்கள் குறித்தும் அவர்களின் உயிர் குறித்தும் அக்கறை காட்டாமல் மலிவான அரசியலைச் செய்து வருகிறார்கள் என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைச் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் குறை சொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஆளும் அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து எடுக்கவேண்டியதில்லையே. மாநிலங்களுக்கான நிதிச்சுமையைப் போக்கும் பொருட்டு தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டப்பட்டுள்ளது. அதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தடுப்பூசியைப் பொறுத்தவரை ஆளும் கட்சி பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்றால் உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குக் கொடுத்ததைவிட ராஜஸ்தானுக்கும் மகாராஷ்டிராவுக்கும்தானே அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பரவல் அதிகம் உள்ள மாநிலங்கள், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்கள், வழங்கிய தடுப்பூசியை அதிகளவு வீணாக்கிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் தான் ஒதுக்கப்படுகின்றது. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை என்பதற்காக மக்களைப் பிரதமர் சந்திக்கவில்லை என்று சொல்ல முடியாது. நேரடியாக மக்களைப் பிரதமர் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்” என விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு