`பா.ஜ.க வென்ற இடங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவோம்' - இப்படிச் சொன்னாரா பினராயி விஜயன்?!

``கேரளாவின் உயர்கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன'' - உண்மையிலேயே பினராயி விஜயன் அப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று தெரிந்துகொள்ள முயல்கிறோம்.
கடந்த மாதம் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அமோக வெற்றிபெற்றது. 40 நகராட்சிகளைக் கைப்பற்றியது எல்.டி.எஃப். பா.ஜ.க-வுக்கு கிடைத்தது வெறும் இரண்டே நகராட்சிகள்தாம். இந்தநிலையில், கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் ஒன்று வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்த மீம்ஸில் பின்வருமாறு உள்ளவை இடம்பெற்றிருந்தன.
நிருபர்: உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறதே?

நிருபர் கேட்ட கேள்விக்கு பினராயி விஜயன் இப்படி பதிலளித்ததாக ட்விட்டரில் சிலர் பதிவிட, அது எல்லா சமூக வலைதளங்களிலும் வைரலானது. தமிழ், ஆங்கிலம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் இது மீம்ஸாகப் பகிரப்பட்டுவருகிறது.
உண்மை என்ன?
உண்மையிலேயே பினராயி விஜயன் அப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று தெரிந்து =கொள்ள முயன்றோம். மலையாள செய்தித் தளங்களில், பினராயி அப்படிச் சொன்னதாக ஒரு செய்திகூட வெளியாகவில்லை. ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் இது குறித்துத் தேடிப் பார்த்தபோதும், பினராயி விஜயன் அப்படிச் சொன்னதாக எந்தச் செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. அவர் அப்படிப் பேசியதற்கான வீடியோ ஆதாரங்களும் இல்லை.

டிசம்பர் 22-ம் தேதி சில ஆங்கில ஊடகங்களில், ``கேரளாவின் உயர்கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன'' என்று பினராயி விஜயன் கூறியதாகச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், எந்த இடத்திலும் அவர் பா.ஜ.க குறித்துப் பேசியதாகச் செய்திகளில் சொல்லப்படவில்லை.
மேலும், இது குறித்து, கேரளத்தைச் சேர்ந்த சிலர், `` ட்விட்டரில் ஒருவர் போலியாகப் பதிவிட்ட கருத்துதான் இது. இந்தக் கருத்து ரசிக்கும்படியானதாக இருப்பதால் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியிருக்கிறதே தவிர, முதல்வர் பினராயி விஜயன் அப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே முதல்வர் அப்படிச் சொல்லியிருந்தால் இந்திய அளவில் மிகப்பெரிய செய்தி ஆகியிருக்கும். பா.ஜ.க-வினரும் பினராயி விஜயனுக்கு எதிர்க் கருத்துவைத்து விமர்சித்திருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றபோதே, இது போலிச் செய்திதான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது'' என்கின்றனர்.