பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சை நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது இளங்கலை (பி.ஏ) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்திலும், முதுகலை படிப்பை (எம்.ஏ) அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்திலும் பயின்றதாக 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், `இந்தத் தகவல் போலியானது... பிரதமர் மோடி பட்டம் பெறவே இல்லை' என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவந்தன.
எதிர்க்கட்சியினர் பலர் வாய்வழி விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழ் நகல்களை மத்திய தகவல் ஆணையத்தின் மூலம் வழங்க 2016-ல் மனுத்தாக்கல் செய்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மனுவை விசாரித்த தலைமைத் தகவல் ஆணையர், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ்களை வெளியிட பிரதமர் அலுவலகம், டெல்லி, குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தை அணுகியது குஜராத் பல்கலைக்கழகம். சமீபத்தில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பைரன் வைஷ்நவ் (biren vaishnav) கல்விச் சான்றிதழை வழங்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்ததோடு, ஆர்.டி.ஐ மனுத்தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்தது
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”குஜராத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, பல கேள்விகளை எழுப்புகிறது. பிரதமர் மோடி தனது பட்டப்படிப்புக்கான சான்றிதழைப் பொதுவெளியில் வழங்காமல் இருக்க இருவேறு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நாம் எதற்கு நமது கல்விச் சான்றிதழை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என அகங்காரம் அல்லது பட்டம் பெற்றதாக அவர் சொல்லும் தகவல் போலியானதாக இருக்க வேண்டும் எனச் சந்தேகம் எழுகிறது. அவர் பட்டம் பெற்றிருக்கிறார் என்றால், அதைக் காண்பிக்க மறுப்பது ஏன்?
நீதிமன்றத் தீர்ப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஜனநாயகத்தில் கேள்விகளை எழுப்புவதற்குத் தகவல்களைப் பெற்றிடவும் சுதந்திரம் வேண்டும். டெல்லி, குஜராத் பல்கலைக்கழகங்களில் பிரதமர் மோடி படித்திருந்தால், அதன் தகவல்களை வெளியிட்டுக் கொண்டாடலாமே... மாறாக மறைப்பதன் பின்னணி பெரும் சந்தேகத்தைக் கிளப்புகிறது. அவர் படித்தவராக இருந்திருந்தால் நிச்சயம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க மாட்டார்” என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் இனியன் ராபர்ட்டிடம் பேசினோம். ``பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வெளிப்படைத்தன்மை என்பது இல்லவே இல்லை. இந்த வெளிப்படைத்தன்மையை உருவாக்கவே 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை காங்கிரஸ் கொண்டுவந்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வளைக்கப்படுகிறது. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தராமல் அவர்களை அச்சுறுத்துகிறார்கள். பிரதமரின் கல்வித் தகுதி எப்படி தனிப்பட்ட தகவலாகப் பார்க்கப்படுகிறது?

நீண்டகாலமாக ஓயாத இந்தச் சர்ச்சையைப் பார்க்கும்போது, பட்டப்படிப்பு குறித்த தகவல் போலியானதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வேட்புனுவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது, அதன் சான்றிதழை நிச்சயம் வெளியிட வேண்டும். வேட்புமனுவில் உண்மைக்கு மாறான தகவலைத் தந்திருந்தால் பதவியே பறிக்கப்படலாம். பொதுமக்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகத்தைத் தீர்க்க குஜராத், டெல்லி ஆகிய பல்கலைக்கழகங்கள் பிரதமரின் சான்றிதழை வெளியிட வேண்டும்” என்றார்.
``பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் தன்னாட்சி அமைப்புகளை கைப்பாவையாகச் செயல்பட வைக்கிறார்கள். உண்மையும் நேர்மையும் இருக்கும்பட்சத்தில் எதற்கு இந்த ஒழிவு மறைவு?" எனக் கேள்வியெழுப்புகின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இது தொடர்பாக அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன், ``2016-ல் அவர்களே சில சான்றிதழ்களை வெளியிட்டு, `இவைதான் மோடியின் கல்விச் சான்றிதழ்கள்' என்றனர். அப்படி ஒரு படிப்பே 1970-80-களில் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. 2016 முதலே பிரதமர் மோடியின் கல்வி குறித்த சர்ச்சை சுற்றிவருகிறது. ஒரு நாட்டின் பிரதமர் அவர். மோடியின் கல்வித் தகுதி குறித்து இவ்வளவு விமர்சனங்கள் வந்த பிறகும் சான்றிதழை வெளியிட மறுப்பது ஏன்... இது ஒருபக்கம் இருந்தாலும், தகவல் ஆணையத்தின் மூலம் ராணுவ ரகசியமா கேட்கப்பட்டது.... கல்விச் சான்றிதழை மறைத்து வைப்பதன் நோக்கம் என்ன?
தகவல் ஆணையத்தின் மூலம் ஒரு தகவலைக் கேட்டதற்கு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் அபராதமும் வருத்தமளிக்கிறது.
படித்தது உண்மையென்றால் கல்விச் சான்றிதழை வெளியிடலாம், இல்லையெனில் படிக்கவில்லை எனச் சொல்வதில் ஏன் தயங்க வேண்டும்" என்றார்.