Published:Updated:

`முதல்வர் வாகனத்துக்காக நிறுத்திவைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?!’ -சர்ச்சையை ஏற்படுத்திய போலீஸ் நடவடிக்கை

நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்
நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்

பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகம் வந்தார். இதற்காக அவர் வரும் சாலையில் போலீஸார் வாகனங்களை நிறுத்திவைத்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகம் செல்லும் சாலையில், ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக சென்ற வாகனங்களை போலீஸார் வெகுநேரம் நிறுத்திவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

`முதல்வர் வாகனத்துக்காக நிறுத்திவைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?!’ -சர்ச்சையை ஏற்படுத்திய போலீஸ் நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பலரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்துகொண்ட முதல்வர்கள் பலரும், ஊரடங்கை இரண்டாவது முறையாக இன்னும் ஒருமாதமாவது நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்துக்குச் சென்றார். சென்னையில் தற்போது, முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதாவது, அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்கள் மட்டுமே வெளியே வர வேண்டும்; மற்றவர்கள் கட்டாயம் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 4 நாள்களுக்கு மளிகைக் கடை உள்ளிட்ட சில அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது காய்கறிக் கடைகள் மட்டுமே இயங்குகின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று தலைமைச்செயலகம் வந்தார்.

இதற்காக, அவர் வரும் சாலையில் போலீஸார் வாகனங்களைத் தடுத்து நிறுத்திவைத்தனர். அப்போது, தலைமைச்செயலகம் அருகே சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் அத்தியாவசிய பணிகளுக்காகச் சென்றவர்களும் போலீஸாரால் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிந்தது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ள கனிமொழி எம்.பி, ``முதல்வர் அவர்களே, சில நாள்களுக்கு முன்பு, முழு முடக்கத்துக்குள் ஒரு முடக்கத்தை அறிவித்து, ஒட்டுமொத்த மக்களையும் வீதிக்குக் கொண்டுவந்தீர்கள். இப்போது, உங்கள் வாகனங்கள் செல்வதற்காக அத்தியாவசிய போக்குவரத்தையும், ஆம்புலன்ஸ்களையும் நிறுத்திவைத்திருக்கிறீர்கள். அடடா! இதல்லவோ மக்கள் பணி” என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழி ட்வீட்
கனிமொழி ட்வீட்

சமூக வலைதளப்பக்கங்களிலும் இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்பது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு