Published:Updated:

கொரோனாவை காரணம் காட்டி ராகுலின் 'பாரத் ஜோடோ' யாத்திரையை நிறுத்த முயல்கிறதா மோடி அரசு?!

பாரத் ஜோடோ யாத்திரை ( ட்விட்டர் )

ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அறிவுறுத்திய மத்திய சுகாதார அமைச்சர்... அரசின் கடமையா? யாத்திரை முடக்க திட்டமா?

கொரோனாவை காரணம் காட்டி ராகுலின் 'பாரத் ஜோடோ' யாத்திரையை நிறுத்த முயல்கிறதா மோடி அரசு?!

ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ' யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற அறிவுறுத்திய மத்திய சுகாதார அமைச்சர்... அரசின் கடமையா? யாத்திரை முடக்க திட்டமா?

Published:Updated:
பாரத் ஜோடோ யாத்திரை ( ட்விட்டர் )

ஒமைக்ரான் வைரஸின் துணை வகைகளான BA 5.2 மற்றும்  BF.7 என புதிய வகை வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. அதிலும், BF.7 வைரஸ் சீனா நகரம் பெய்ஜிங்கில் பாதிப்பை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும்  குஜராத், ஒடிசா மாநிலத்தில் புதிய வகை BF.7 ஒமைக்ரான் தொற்றுக்கு  நான்கு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக  மாநில அரசுகள்   தெரிவித்தன. இந்த நிலையில் தான், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் மருத்துவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் நடந்த கொரோனா தடுப்புக்  கூட்டம்
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா தலைமையில் நடந்த கொரோனா தடுப்புக் கூட்டம்
ட்விட்டர்

ஆனால், இதற்கு முன்னதாகவே, ``பாரத் ஜோடோ யாத்திரையின் போது முகக்  கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி என கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பின்பற்றுங்கள். அப்படி இல்லை என்றால்  தேசத்தின் நலன் கருதி யாத்திரையைக் கைவிடுங்கள்" என ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இதில் தேச நலன் என்பதைக் கடந்து 'யாத்திரை முடக்கும் யோசனை' என  ராகுல் காந்தி  குற்றம் சாட்டினார்.

ராகுல் யாத்திரை - கேரளா
ராகுல் யாத்திரை - கேரளா

ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரையை முடித்துவிட்டு  ஹரியானா மாநிலத்தில் யாத்திரையை தொடங்கியிருக்கிறார் ராகுல். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பயணிக்கும் இந்த யாத்திரையைத் தடுக்க பாஜக புது யோசனை கூறுகிறார்கள். கோவிட் வருகிறது, அதனால் யாத்திரையை நிறுத்துங்கள் என சாக்கு சொல்கிறார்கள். பாஜக, காங்கிரஸ் வலிமை மற்றும் உண்மை கண்டு அஞ்சுகிறார்கள்” என்றார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பின் போது , "பாரத் ஜோடோ யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற சொல்லியிருக்கிறது பாஜக அரசு. பாஜக-வால் காங்கிரஸ் மக்களிடம் சென்று சேர்வதைப் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை. பாரத் ஜோடோவால் காங்கிரஸ் அடைந்திருக்கும் பிரபலத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுவதை இது காட்டுகிறது. யாத்திரைக்கு இடையூறு செய்து அதை சீர்குலைக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கம். இதில் மக்களின் நலன் இல்லை, வெறும், அரசியல் உள்நோக்கமே இருக்கிறது” என குற்றம்சாட்டினார். மேலும், இரண்டு நாள்களுக்கு முன் திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி பேரணி நடத்தினார். அதில் பின்பற்றிய கட்டுப்பாடுகள் என்ன?. அவ்வாறு மக்களின் நலன் மட்டுமே சுகாதார அமைச்சரின் கவலையாக இருந்தால், ஏன் பிரதமர் பேரணி குறித்து பேசவில்லை என கேள்வி எழுப்பினார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இதற்கு பதிலளித்துள்ள சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா," இதில் அரசியல் நோக்கம் இல்லை. இதை மேற்கொள்வதே என்னுடைய பணி. கொரோனா பரவலைத் தடுக்க, அரசு கடைப்பிடிக்க சொல்லும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங்கிற்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்தப் பிரச்னைக் குறித்து ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள் எனக்கு தொடர்பு கொண்டார்கள். அதனால் நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே கடிதம் எழுதினேன்” என பதில் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா

தற்போது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளில் கொரோனா  நோய் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகளைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நோய் பரவலைத் தடுக்க, மாநிலத்தில் கண்டறியப்படும் தொற்று புது வகை வைரஸ்தானா? என்பதைக் கண்டறிய மரபணு ஆய்வுக்கு உட்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இதன் ஒரு பகுதியாக தான் இந்தக்  கடிதம் எழுதப்பட்டதாகப் பாஜக தரப்பும், பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸ், மக்களிடம் பெறும்  நற்பெயரைப் பொறுத்து கொள்ள முடியாமல், திட்டமிட்டு இதைச்  செய்வதாக காங்கிரஸ் தரப்பும்  குற்றம் சாட்டுகின்றன.

ராகுல் காந்தி-ரகுராம்ராஜன்
ராகுல் காந்தி-ரகுராம்ராஜன்
ட்விட்டர்

இது குறித்து பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சிமணன் நம்மிடம் பேசுகையில், ” இது போன்ற ஆபத்தான தொற்று நோய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநில அரசோ மத்திய அரசோ எடுத்தால் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சியை ஒடுக்குவதற்கு தங்களுடைய செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டால் அது தவறான அணுகுமுறை. கொரோனா பாதிப்பு இந்தியாவில் மட்டும் இருப்பதாக சொல்லிவிட முடியாது. அது உலக நாடுகள் முழுவதிலும் இருக்கும் பாதிப்பு. தற்போதுதான், உலக கால்பந்து போட்டி நடந்தது. இந்தியாவில் குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் நடந்து முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. எத்தனையோ பேரணிகளைப் பிரதமரே முன்னின்று நடத்துகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரையை மட்டும் குறிவைப்பது ஏன்?.  

எஸ்.பி.லட்சுமணன்
எஸ்.பி.லட்சுமணன்

தேசிய அளவில் கவனம் பெறும் பிரபலங்கள் நாள்தோறும் கலந்து கொள்ளும் நேரத்தில் யாத்திரைக்குத் தடைப் போட முயற்சிக்கின்றனர். எனவே இதில் அரசியலே கிடையாது என முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது. இது உண்மையில் கொரோனா பரவலைத் தடுக்க மட்டுமே என்றால், ராகுல் காந்தி யாத்திரைக்கு விதிக்கும் அதே கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாஜக உட்பட அனைத்து கட்சிகளைப் பின்பற்ற சொன்னால் அமைச்சரின் கருத்தை நியாயப்படுத்த முடியும்,” என்றார்.