Published:Updated:

ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் அதிரடி மாற்றத்துக்குப் பின்னால்... `அரசியல்’ காரணங்களா?!

மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

“முன்பெல்லாம் மோசமான பழக்கம் இருந்தது. அதிகாரிகளைத் தண்டிப்பதற்காக இடமாறுதல் நடக்கும்.” - தேவசகாயம் ஐ.ஏ.எஸ் ஓய்வு

ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் அதிரடி மாற்றத்துக்குப் பின்னால்... `அரசியல்’ காரணங்களா?!

“முன்பெல்லாம் மோசமான பழக்கம் இருந்தது. அதிகாரிகளைத் தண்டிப்பதற்காக இடமாறுதல் நடக்கும்.” - தேவசகாயம் ஐ.ஏ.எஸ் ஓய்வு

Published:Updated:
மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

கடந்த ஜூன் 5-ம் தேதி தமிழகத்தின் முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் 44 பேர் இடமாறுதல் மற்றும் புதிய நியமனங்கள் செய்யப்பட்டனர். பல மாவட்ட எஸ்.பி-க்கள் அந்த மாற்றப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதேபோல வெகு விரைவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படலாம் என்றும், பட்டியல் வெளியிடப்படத் தயாராக இருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் அனைவராலும் அறியப்பட்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு மாற்றாக சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியான டாக்டர் செந்தில்குமார் சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆட்சி நிர்வாகத்தில் தலைமைச் செயலாளருக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல் பதவியாக இருப்பது உள்துறை செயலாளர் பதவி. தி.மு.க ஆட்சி அமைந்ததும் தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்த முதல்வர், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையின் செயலாளராகப் பிரபாகரையே தொடர அனுமதித்தார். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ம் ஆண்டு, நவம்பர் மாதம் உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், அவருக்கு மிகவும் வேண்டிய அதிகாரிகள் பட்டியலில் முக்கியமானவராக இருந்தவர். ஆனபோதும் கடந்த ஒரு வருட தி.மு.க ஆட்சியிலும் அவரே உள்துறை செயலாளராகத் தொடர்ந்து வந்தார். இவர் உள்துறை செயலாளராகப் பதவியேற்று, வரும் நவம்பரோடு மூன்றாண்டுக்காலம் முடிகிறது. இந்நிலையில் உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் புதிய உள்துறை செயலாளராக, தமிழ்நாடு கேடர் வெளி மாநில அதிகாரியான ஆந்திராவைச் சேர்ந்த பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பணீந்திர ரெட்டி
பணீந்திர ரெட்டி

பணீந்திர ரெட்டி நியமனத்துக்கு முன் தமிழ்நாடு கேடர் வெளி மாநில அதிகாரிகள் சிலர், ‘தமிழ்நாடு அரசின் முக்கியமான பதவிகளான தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி போன்ற அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே தரப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகள் பணியாற்றிவரும் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த வெளி மாநில அதிகாரிகளுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப் பரிசீலிக்க வேண்டும்’ என்கிற தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுளதாகச் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் உள்துறை செயலாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி (பஞ்சாப்), வணிக வரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி (ஆந்திரா), வணிக வரித்துறை செயலாளர் சிவதாஸ் மீனா (ராஜஸ்தான்) ஆகிய வெளிமாநில அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் இப்போது ஆந்திராவைச் சேர்ந்த பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். மேலும் சில அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். செயலாளர்கள்போலவே, மாவட்ட ஆட்சியர்கள் இடமாறுதலும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்கிற சூழலில், இந்த மாறுதலுக்கான காரணம் அரசியலா அல்லது நிர்வாகரீதியிலான மாற்றமா என்கிற கேள்வியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் முன்வைத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவசகாயம் ஐ.ஏ.எஸ்
தேவசகாயம் ஐ.ஏ.எஸ்
Twitter

``இது அரசியல்ரீதியான மாற்றம்போல் தெரியவில்லை. அரசு பொறுப்பேற்றவுடன் நடக்கும் முதல் மேஜர் ட்ரான்ஸ்ஃபர் இது. இதற்கு முன்பு ஒன்றிரண்டு இடங்களுக்குச் செய்தார்கள். இப்போது மாற்றப்பட்டிருக்கும் அதிகாரிகள் எல்லோருமே பல வருடங்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள். ராதாகிருஷ்ணன் இரு முறை வந்திருக்கிறார். உள்துறை செயலாளரும் மூன்று வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறார். மற்றபடி சீனியர் ஆபீஸர்களான நிதிச் செயலாளர் போன்றவர்களை மாற்றவில்லையே... நிர்வாகரீதியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாறுதல் கோரும்போதோ மாற்றுவது வழக்கம்தான். முன்பெல்லாம் மோசமான பழக்கம் இருந்தது. அதிகாரிகளைத் தண்டிப்பதற்காக இடமாறுதல் நடக்கும். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் இந்தப் போக்கு ரொம்ப அதிகமாக இருந்தது. இஷ்டத்துக்கு மாற்றிப் போட்டிருப்பார்கள். இப்போது அந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் ரொம்பவே குறைந்துவிட்டது. எனவே இதை அரசியல்ரீதியானது என்று சொல்ல முடியாது, நிர்வாகரீதியான மாற்றமாகத்தான் இருக்கும்” என்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருந்தாலும் அமைச்சர்களின் தலையீடும் இந்தப் பணியிடை மாற்றத்தில் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அந்த வகையில், ‘H’ டிபார்ட்மென்ட் என்று சொல்லக்கூடிய ஹோம், ஹௌசிங், ஹெல்த், ஹைவே துறைகளில் உள்ள செயலாளர்கள் மாற்றம் உறுதி என்பது பேசுபொருளாக இருந்தன. இந்நிலையில் ஹௌசிங் தவிர ஹோம், ஹெல்த், ஹைவே துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சீனியர் அமைச்சர்களான வேலு, நேரு, பெரியகருப்பன், சக்கரபாணி போன்றோர் தங்களுக்கு ஏற்றவாறு அதிகாரிகளை மாற்றியிருக்கின்றனராம். நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், ``ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், பேரிடர் மேலாண்மைத்துறைக்கு மாற்றப்பட்டிருந்தார். இப்போது தாட்கோவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அமைச்சர்களுடன் நெருக்கம் இல்லாதது அவர் மாற்றப்பட்டதற்கு ஒரு காரணம். அதேபோல, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த நிஜாமுதீனுக்கும் அமைச்சர் சக்கரபாணிக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இதன் வெளிப்படாகத்தான், நிஜாமுதீனை பணியாளர் நலத்துறைக்கு மாற்றியுள்ளனர்.

தமிழக அரசு
தமிழக அரசு

அருங்காட்சியகத்தின் இயக்குநராக இருந்த ராமன், அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் பேரிடருக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தாட்கோ இயக்குநராக இருந்த விவேகானந்தன், துறைரீதியான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடக்கும்போதெல்லாம், முதல்வர் தரப்பிடம் தன்னை வேறு துறைக்கு மாற்றுமாறு கடிதம் நீட்டியிருக்கிறார். அதற்குப் பலனாக தற்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரகத்தின் செயலாளராக மாற்றப்பட்டிருக்கிறாராம்.

நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் சேர்மனாக இருந்த சாய்குமார், செய்தித்தாள் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குமிக்க இடத்தில் இருந்தார் என்பதற்காகவே, அவர் மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த சிவராசு, வரித்துறை கோவை பிரிவு இணை ஆணையராகத் மாற்றப்பட்டிருக்கிறார். இந்த மாற்றங்களுக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு முக்கியக் காரணம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பிரவீண் நாயரை மாற்ற துறை அமைச்சர் பெரியகருப்பன் பரிந்துரைத்தாக கூறப்படுகிறது.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்

ஆவின் மீதான தொடர் சர்ச்சை, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக கமிஷனர் பிரகாஷ், ஆவினிலிருந்து மாற்றப்பட்டு காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மின் ஆளுமைத்துறை மூலமாக வருவாய் இழப்பைத் தடுத்த, அந்த முகமையின் செயல் அதிகாரி விஜேந்திர பாண்டியன், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பரிந்துரையில் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின் ஆணையராக மாறுதலாகியிருக்கிறார். அமைச்சர் துரைமுருகனுக்கும் கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ்க்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. நிர்மல்ராஜ்ஜை தன் துறையிலிருந்து மாற்றும்படி முதல்வரிடமே துரைமுருகன் சிபாரிசு வைத்ததால், கனிமவளத்துறையிலிருந்து மாற்றப்பட்டு போக்குவரத்து ஆணையராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலா மற்றும் அ.தி.மு.க ஆட்சிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட கருணாகரனை, ஆட்சிக்கு வந்த கையோடு தி.மு.க அரசு புள்ளியல்துறைக்கு மாற்றியது. ஆனால், தற்போது சீனியர் அமைச்சர் ஒருவரின் ஆசியோடு ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளராக மாறுதலாகியிருக்கிறார் கருணாகரன்” என்கிறார்கள்.

ஒரு மாதத்திற்கு மேலாக, நீண்ட பரிசீலினையிலிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. மற்றுமொரு பட்டியல் பரிசீலினையில் இருப்பதாகக் கூறும் கோட்டை அதிகாரிகள், அந்தப் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism