Published:Updated:

`பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்குமா?’ - என்ன சொல்கிறது திமுக?!

இலவச வேட்டி, சேலை

``செய்வதை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கக் கூடாது என்று நினைத்தால் டெண்டர் விட்டிருக்க மாட்டோம் அல்லவா?”

`பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்குமா?’ - என்ன சொல்கிறது திமுக?!

``செய்வதை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கக் கூடாது என்று நினைத்தால் டெண்டர் விட்டிருக்க மாட்டோம் அல்லவா?”

Published:Updated:
இலவச வேட்டி, சேலை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசால் 1983-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுவருகிறது. பயனாளிகளுக்குத் தேவையான மொத்தச் சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து வருவாய்த்துறை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொங்கல் பரிசு!
பொங்கல் பரிசு!

இந்தச் சூழலில், கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. அரசு வழங்கிய பொருள்களில் தரம் இல்லை என்ற புகார் எழுந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்கில் வெளியானது. இதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், கரும்பு வழங்குவது குறித்த அறிவிப்பு இல்லை. இதனால், அதிருப்தியடைந்த கரும்பு விவசாயிகள் மாவட்டங்களில் போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து, பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தாமதமாக அறிவித்தது.

இலவச வேட்டி, சேலை
இலவச வேட்டி, சேலை

இதேபோல் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இலவச வேட்டி, சேலை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கும். டிசம்பர் மாத இறுதியில் 80 சதவிகித அளவுக்கு விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் முடிந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். ஆனால், கடந்த ஜூன் மாதம் இதற்கான எந்த முன்னெடுப்பும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு இலவச வேட்டி, சேலைத் திட்டத்தை கைவிட இருப்பதாகத் தகவல் பரவியது. இந்தத் தகவலையடுத்து கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இலவச வேட்டி, சேலை திட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும், 2022-23ம் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது எனவும் அரசு தெரிவித்தது.

 தறி நெசவு
தறி நெசவு

ஆனால், இந்த ஆண்டு நூல் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்திருப்பதால் தற்போது வரை 42 சதவிகிதம் மட்டுமே உற்பத்திப் பணிகள் நடைபெற்றிருப்பதாகவும், இதனால் வேட்டி, சேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூட்டுறவு சங்கங்கள் தெரிவித்துள்ளன.

காரப்பன்
காரப்பன்

இது குறித்து, தேசிய கைத்தறி பயிற்சியாளர் (சேலம்) காரப்பன் கூறுகையில், "அரசின் தாமதமான நடவடிக்கையால், இந்த வருடம் பொதுமக்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வேட்டி, சேலைகள் கிடைப்பது சந்தேகம்தான். நெசவு நெய்வதற்கு ஆட்கள் கிடையாது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சோமனூர், பள்ளடம், கோவை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் விசைத்தறி இயக்கவில்லை. எங்கள் ஊரிலுள்ள 18 கூட்டுறவு சங்கங்களில் ஒன்றில்கூட நெசவு தறி கிடையாது. கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் இலவச வேட்டி, சேலை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால், இந்த ஆண்டு இதுவரை நாங்கள் பணியை ஆரம்பிக்கவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் அரசு ஒரு சேலைக்கு ரூ.150 என்று கணக்கிட்டுத்தான் கொடுக்கிறது. ஆனால், வேலையாட்களுக்கு ஒரு நாள் கூலியே ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இதுவும் ஒரு பிரச்னையாக இருக்கிறது. ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, தனியாருடன் அரசால் போட்டிபோட முடியவில்லை என்பதே உண்மை" என்றார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையோ, "பொங்கலுக்குக் கரும்பு கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்க நினைத்த தி.மு.க., தற்போது இலவச வேட்டி, சேலை திட்டத்தை முடக்கி, நெசவாளர்களை வஞ்சிக்க எண்ணுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு மூன்று மாதங்கள் தாமதமாக, அக்டோபர் மாதம்தான் அரசாணை வெளியானது. அத்துடன், அரசு வழங்கிய நூல் தரம் குறைவாக இருந்ததால், உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருப்பதாக நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மொத்த உற்பத்தியையும் நிறைவேற்ற முடியாது என்று அவர்கள் அச்சப்படுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியோ, "பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காவிடில் வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அ.தி.மு.க மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்" என்றார்.

இது குறித்து, தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், "தி.மு.க அரசு அமைந்த பின்னர் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க ரூ.4 ஆயிரம் கொடுத்தோம், நகைக்கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம், விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறோம். கடந்த 10 வருடங்களாக முடங்கிக்கிடந்த சிஸ்டத்தை மீட்டெடுக்க முயலும் வேலையில், இலவச வேட்டி, சேலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் அது தவறு கிடையாது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஆனால், செய்வதை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறோம். மக்களுக்கு வேட்டி, சேலை வழங்க வேண்டுமென்ற எண்ணத்தில்தானே டெண்டர் விட்டிருக்கிறோம். வழங்கக் கூடாது என்று நினைத்தால் டெண்டர் விட்டிருக்க மாட்டோம் அல்லவா... இதேபோல நம்முடைய நிதி நிலையைப் பார்த்துதானே எதையும் முடிவு செய்ய முடியும்... படாதபாடுபட்டுத்தான் எல்லா திட்டங்களையும் கொண்டுவருகிறோம்" என்றார்.