Published:Updated:

தேமுதிக: மாவட்டச் செயலாளர்களிடம் கையெழுத்து... கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிறாரா பிரேமலதா?!

பிரேமலதா
News
பிரேமலதா

''லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங்படி நீங்க கூட்டணிவெச்சுக்கோங்கன்னு ஒப்புதல் கொடுத்திருக்காங்க'' என்றவர்கள், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கான நகர்வுகள் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்,

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கண்ணீர்க் காட்சிகள், அதிரடியான பல தீர்மானங்கள் எனக் கடந்த ஆறாம் தேதி நடந்து முடிந்தது, தே.மு.தி.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். சட்டசபை மற்றும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கடந்த வாரம்தான் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 'ஆனால், வழக்கம்போல இதுவும் கட்சி நலனுக்காகவோ, நிர்வாகிகள் நலனுக்காகவோ கூட்டப்பட்ட கூட்டமல்ல' என முணுமுணுக்கிறது தே.மு.தி.க வட்டாரம்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சென்னை தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 'பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு 3,000 ரூபாய், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாய், பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை' உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும் என கடந்த 29-ம் தேதி, அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயரில் அறிக்கை வெளியானது. ஆனால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை ஆமோதிக்கும்விதமாக நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், கட்சித் தலைமை மாற்றம் குறித்தும், சமீபத்தில் வெளியாகும் செய்திகள் குறித்தும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

''2021 சட்டமன்றத் தேர்தல்ல அ.ம.மு.க-வோட கூட்டணி சேர்ந்ததுல கட்சி நிர்வாகிகள் யாருக்கும் பெரிய விருப்பம் இல்லை. கட்சித் தலைமை எடுத்த முடிவுன்னு நிர்வாகிகள் எல்லோரும் கட்டுப்பட்டு வேலை செஞ்சாங்க. ஆனா, தினகரன் சார்பா கொடுக்கப்பட்ட பணத்தை, தேர்தல் செலவுக்கு வேட்பாளர்களுக்குத் தலைமை பிரிச்சுக் கொடுக்கலை. தினகரன் தரப்புல இது தெரிஞ்சு அவங்க கேட்டவுடனே, போனாப் போகுதுன்னு தேர்தல் முடிஞ்ச பிறகு பணம் கொடுத்தாங்க. தேர்தல் முடிவுகள் வந்த பின்னாடி, கட்சிக் கூட்டத்தைக் கூட்டணும்னு நிர்வாகிகள் எல்லோரும் கோரிக்கைவெச்சோம். ஆனா, நிர்வாகிகள் அதைப் பத்திக் கேள்வி கேட்பாங்கன்னு அண்ணியாரும் சுதீஷும் கூட்டம் நடத்தாம தவிர்த்துட்டாங்க. தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகாவது கூட்டம் நடத்துவாங்கன்னு பார்த்தோம். அப்பவும் நடத்தாம விட்டுட்டாங்க.

அறிக்கை
அறிக்கை

இப்போ மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்னு அறிக்கை வந்ததும் ஓரளவுக்கு நிம்மதி ஆனோம். காரணம், எங்ககிட்ட எந்தக் கருத்தும் கேட்காம, இவங்களாகவே தனித்துப் போட்டின்னு தலைவர் பெயர்ல அறிக்கைவிட்டாங்க. `மாறி மாறிக் கூட்டணிவெச்சா, மக்கள் மத்தியில நம்ம கட்சி மேல இருக்கற நம்பிக்கை போயிடும், அதனாலதான் தனித்துப் போட்டின்னு அறிக்கைவிட்டோம்'னு சொன்னாங்க. ஆனா, தனியாப் போட்டி போடுறதுக்குல்லாம் இங்க யார்கிட்டயும் பணம் இல்லை. கூட்டணிவெப்போம்னு நிர்வாகிகள் கருத்து சொன்னாங்க. உடனே லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங்படி நீங்க கூட்டணிவெச்சுக்கோங்கன்னு ஒப்புதல் கொடுத்திருக்காங்க'' என்றவர்கள், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கான நகர்வுகள் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'' கேப்டனோட உடல்நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் அண்ணி சில விஷயங்களைப் பகிர்ந்துகிட்டாங்க. அந்த நேரத்துல அவங்க கண் கலங்கிடுச்சு. எங்களுக்கும் வருத்தமாத்தான் இருந்தது. ஆனா, கேப்டனுக்கு உடம்பு முடியாம வெளிநாடு கூட்டிட்டுப் போனப்ப, கட்சியோட பொருளாளரா அண்ணி வந்தாங்க. இப்போ, அவங்க பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வர்றதுக்கு மாவட்டச் செயலாளர்கள் எல்லோர்கிட்டயும் கையெழுத்து வாங்கியிருக்காங்க. கட்சியோட நலனைப் பத்தியோ, நிர்வாகிகள் பத்தியோ அவங்க எப்போதும் கவலைப்பட்டது இல்லை. கட்சியோட ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட மாணவரணிப் பொறுப்பாளர், மாவட்டச் செயலாளர்னு பல முக்கியமான நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகிப் போய்கிட்டே இருக்காங்க. போன தேர்தல்ல `பெரிய கட்சிகளோட கூட்டணிவெச்சு சட்டமன்றத்துக்குப் போனாத்தான் நம்ம கட்சியைக் காப்பாத்த முடியும்'னு சில நிர்வாகிகள் அண்ணிகிட்ட சொன்னதுக்கு, `நீங்க எம்.எல்.ஏ ஆகுறதுக்குக் கட்சி நடத்தலை. கேப்டன் சி.எம் ஆகுறதுக்குத்தான் கட்சி நடத்துறோம்’னு சொன்னாங்க. 2011-ல நடந்த சம்பவங்கள்ல இருந்து இன்னும் அவங்க மீண்டு வரலை. எங்கே எம்.எல்.ஏ ஆகி மாற்றுக் கட்சிகளுக்குப் போயிடுவாங்களோன்னு பயத்துலேயே இருக்காங்க.

சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்
சுதீஷ், பிரேமலதா, விஜயகாந்த்

அப்போ, எம்.எல்.ஏ-க்கள் விலகிப் போனதுக்கு கட்சித் தலைமைதான் காரணம். அதுக்காக கட்சியில யாருமே எந்தப் பொறுப்புக்கும் வரக் கூடாதுன்னு நினைக்கிறது என்ன நியாயம்... அதைவிட, நாங்க எம்.எல்.ஏ ஆகாம கேப்டன் எப்படி சி.எம் ஆவாரு? இவங்க லாஜிக்கே எங்களுக்குப் புரியலை. எங்களுக்கு மட்டும் இலலை, அவங்களுக்கே ஒண்ணும் புரியாமத்தான் ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்காங்க'' என்றவர்கள் தொடர்ந்து, ''கட்சியில முன்னணி நிர்வாகிகள் பலரும் கட்சியைவிட்டு வெளியே போயிட்டாங்க. எங்க தலைமையோட டீலிங் தெரிஞ்ச ஒருசில முன்னணி நிர்வாகிகள் மட்டும்தான் இன்னும் கட்சியில இருக்காங்க.

கட்சியில கேப்டனுக்காகவும், லோக்கல்ல மற்ற கட்சிகளுக்குப் போக முடியாத சூழல்ல இருக்குற ஒரு சிலரும்தான் இன்னும் கட்சியில மீதம் இருக்கோம். உள்ளாட்சித் தேர்தல்ல கூட லோக்கல்ல எங்க பேரைக் காப்பாத்திக்க நாங்களா விருப்பப்பட்டுதான் போட்டி போடுறோம். கட்சித் தலைமை எங்களைக் கண்டுக்குறதே இல்லை. கட்சியும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி தேய்ஞ்சுக்கிட்டே போறோம். கட்சித் தலைமை மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டு இருக்காங்க'' என்கிறார்கள் வேதனையோடு.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

மேற்கண்ட விஷயங்கள் குறித்து அந்தக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

``கேப்டனின் உடல்நிலை குறித்துப் பலர், பலவிதமான செய்திகளைப் பரப்பிவருகின்றனர். அதனால் அவருடைய தற்போதைய உடல்நிலை, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் அண்ணி பகிர்ந்துகொண்டார். மாவட்டச் செயலாளர்கள் ஒருசிலர் அண்ணி தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், கேப்டன்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என அண்ணி சொல்லிவிட்டார். முந்தைய தேர்தல் குறித்து வெளியாகும் தகவல்களெல்லாம் தவறானவை. அப்படி எந்தவொரு விஷயமும் நடக்கவில்லை'' என மறுக்கிறார் அவர்.