Published:Updated:

புதுச்சேரி: `கண் துடைப்புக்காக வழக்கு பதிவு செய்கிறதா போலீஸ்?’ - ஆர்.டி.ஐ தகவல் சொல்வதென்ன?

புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி போலீஸ்

``சாதாரண பொதுமக்களிடம் கொரோனா அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுத்துவரும் காவல்துறை, அதே குற்றத்துக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் தொடர்புடைய நபர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க தயக்கம் காட்டுகிறது!”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த 23.3.2020 முதல் ஊரடங்கும், 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. அப்போது முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உள்ளிட்ட விதிகளை மீறிய பொதுமக்களிடம் காவல்துறை அபராதம் வசூலித்தது. அதன் பிறகு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இவ்வளவு அபராதம் வசூலிக்க வேண்டும் என்று `டார்கெட்’ கொடுக்கப்பட்டதால், காவல்துறை வருவோர் போவோரிடமெல்லாம் கட்டாயமாக அபராதம் வசூலிக்க ஆரம்பித்ததாகப் புகார் எழுந்தது. கொரோனா தொற்றின் வீரியம் குறைந்துவிட்ட தற்போதைய சூழலிலும் இந்த நடைமுறை தொடர்கிறது.

புதுச்சேரி ஊரடங்கு
புதுச்சேரி ஊரடங்கு

ஊரடங்கு, 144 தடையுத்தரவு ஆகியவற்றை மீறி தொற்றுநோய் பரப்பும்விதமாக போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை, ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களை ராஜீவ் காந்தி மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ரகுபதி வெளியிட்டிருக்கிறார். அதில், கிழக்கு காவல் பிரிவு கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்களில் 318 வழக்குகள், மேற்குப் பிரிவில் 53 வழக்குகள், தெற்குப் பிரிவில் 38 வழக்குகள், வடக்குப் பிரிவில் 124 வழக்குகள் என மொத்தம் 533 வழக்குகளும் இந்திய தண்டனைச் சட்டங்கள் 268, 188, 51(b), 341, 283, 447, 353/r/n, 149 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய ரகுபதி, ``அரசு உத்தரவுகளை மதிக்காதது, சட்ட விரோதமாகக் கூடுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய் பரப்புதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுவழியைத் தடைசெய்தல் ஆகிய குற்றங்களுக்காக பெயரளவில் வழக்குகள் மட்டுமே பதிவு செய்துவிட்டு, உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் தயங்குவதால்தான் புதுச்சேரியில் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன.

ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கு உத்தரவு

புதுச்சேரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழிப் போராட்டம் என அனுமதி பெற்றுவிட்டு அத்துமீறல்கள், காவலர்களிடம் தள்ளுமுள்ளு போன்ற நிகழ்வுகள்தான் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதுடன், காவலர்களுக்கும் மன உளைச்சல், கூடுதல் பணிச்சுமை போன்றவை ஏற்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முகக்கவசம் அணியாத சாதாரண பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களிடம் நோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்றளவும் காவல்துறையினர் அபராதம் வசூலித்துவருகின்றனர். இந்தக் காரணத்தைக் கூறி சில வர்த்தக நிறுவனங்களுக்கு சீலும் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாதாரண பொதுமக்களிடமும், வர்த்தக நிறுவனங்களிடமும் சட்டப்படி அபராதம் வசூலித்து நடவடிக்கை எடுத்துவரும் காவல்துறை, அதே குற்றத்துக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க காட்டும் தயக்கம் ஏற்புடையது இல்லை.

`31-ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டைவிட்டு வெளியேறினால் நடவடிக்கை!’- புதுச்சேரி கொரோனா அப்டேட்

இதன் மூலம் கூட்டமாகக் கூடி போராட்டம் என்ற பெயரில் எதைச் செய்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்கிற எண்ணம்தான் அதிகரிக்கும். மேலும் இதேபோல குற்றப்பத்திரிகைகளை உரிய காலத்தில் தாக்கல் செய்யாமல் கால தாமதம் செய்வதால், நீதிமன்றங்களில் காலதாமதமான வழக்கு என்று தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்படுகிறது. அதனால் கொரோனா காலங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர், புதுச்சேரி காவல்துறை இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு புகார் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு