Published:Updated:

வேப்பனஹள்ளி வேட்பாளர் ஆகிறாரா ரஜினி? - கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்

வேப்பனஹள்ளி வேட்பாளர் ஆகிறாரா ரஜினி?
வேப்பனஹள்ளி வேட்பாளர் ஆகிறாரா ரஜினி?

எடப்பாடியின் அதிரடி முதல் வேப்பனஹள்ளி தொகுதி பரபரப்பு வரை... அரசியல் செய்திகளின் `சுட சுட' அப்டேட்ஸ்

டெல்லி தேர்தல் ரிசல்ட்டை டிவி-யில் பார்த்துக்கொண்டிருந்த போது, கழுகார் என்ட்ரி கொடுத்தார். ``தகவல்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறேன். பார்த்துக்கொள்ளும். ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் விஷயம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி, வீடு தேடி ரேஷன் பொருள்கள், 200 யூனிட்டுகள் வரை மின்கட்டணம் ரத்து போன்ற ஆம் ஆத்மி அளித்த தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி அப்போது பேசப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி ஸ்டைலில் சில விஷயங்கள் தமிழகத்திலும் அமல் செய்யப்படலாம்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.

கழுகார் வாட்ஸ்அப் மெசேஜ்கள்

ஜெயச்சந்திரனை ஜெயித்த காக்கிகள்!
  • கடை உரிமையாளரைத் தாக்கி நகைபறித்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்.

  • அரை நிர்வாணப்படுத்தி விசாரணை செய்த காவல் ஆய்வாளருக்கு ரூ.30,000 அபராதம்.

  • பயிர்களை அழித்த டி.எஸ்.பி-க்கு ரூ.5 லட்சம் அபராதம்.

  • வாகன சோதனையின்போது தாக்கிய 3 போலீஸாருக்கு ரூ.60,000 அபராதம்.

  • வழக்கு விசாரணையின்போது மனித உரிமை மீறல், காவல் ஆய்வாளர்கள் மூவருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.

இவை எல்லாம் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் அதிரடிகள். மேற்கண்ட செய்திகளை ஒருமுறை மனதில் ஓட்டிப் பார்த்துக்கொண்டு கீழ்கண்ட தகவலைப் படியுங்கள்...

மனித உரிமை கமிஷன் மீது தமிழ்நாட்டு காக்கிகளுக்குக் சிறிது நாள்களாக கடும் கோபம். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்த தமிழக மனித உரிமை கமிஷன் தலைவர் பதவிக்கு, கமிஷனின் உறுப்பினராக இருக்கும் முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. `ஜெயச்சந்திரன் கறார் பேர்வழி’ என்பதால் அவரை நியமிக்கக் கூடாது என முட்டுக்கட்டை போட்டார்கள் சென்னையைச் சேர்ந்த இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள். மூன்று எழுத்து பெயரைச் சொல்லி அழைக்கும் போலீஸ் அதிகாரியும் அதில் ஒருவர். இதனால் ஜெயச்சந்திரன் பொறுப்பு தலைவராக மட்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நிரந்தரமாக யாரையோ போடப் போகிறார்கள்.

ரயில் ஏறாத ஃபைல்!

கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது அ.தி.மு.க. இதற்கான அறிவிப்பு வெளியானதுமே எதிர் கோஷ்டிகள் பற்றிய புகார் ஃபைலை ரெடி செய்து கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் தோல்வி விசாரணை படலம் நடக்கும் எனத் தெரிந்து அதற்கு வசதியாகப் புகார் பட்டியலைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொந்தக் கட்சிக்குள் இருக்கும் எதிரிகளை வீழ்த்தி அந்த இடத்துக்கு தாங்கள் வந்து அமர்வதே இவர்களின் நோக்கம். இப்படி மாவட்டங்களில் புகார் ஃபைல் தயாராகும் விஷயம் முதல்வர் எடப்பாடி காதுக்கு வந்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
`தேர்தலை எதிர்கொள்வது எப்படி?' - அமைச்சர்களுக்கு டிப்ஸ் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``புகார் கொடுக்க வருகிறவர்கள் யாராக இருந்தாலும், அவரவர் சொந்தப் பகுதியில் கட்சிக்கு எவ்வளவு ஒட்டுகளை வாங்கி கொடுத்தீர்கள்? என்கிற விவரங்களை தர வேண்டும். அப்படி வரும் தகவல்கள் உடனுக்குடன் கிராஸ் செக் செய்யப்படும். புகார் தெரிவிப்பவரிடம் கட்சிப்பணி பற்றியும் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்’’ என்றெல்லாம் வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறாராம் எடப்பாடி. இதனால், புகார் வாசிக்க நினைத்தவர்கள் `ஜெர்க்’ ஆகியிருக்கிறார்கள். `உங்க பகுதியில் ஓட்டு வாங்கிக் கொடுக்காத நீ அவனைப் பத்தி புகார் சொல்றீயா’ என விவகாரம் `பூமராங்’ ஆகி தங்கள் தலைக்கே கத்தி வந்துவிடுமோ என மிரண்டு கிடக்கிறார்கள்.

சாதிப் பாசம்
ராம மோகன ராவ் சாதி பாசம்... யாருக்காக போடும் வேஷம்!

ராம மோகன ராவின் அரசியல் என்ட்ரி தெரியும். அதன் பின்னணியையும் தெரிந்துகொள்வோம். இதுபற்றி சொல்பவர்கள், ``தலைமைச் செயலகத்தில் தனது அறையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது பி.ஜே.பி ஆட்சிக்கு எதிராகச் சீற்றம் கொண்டு பேசிய அதே ராம மோகன ராவ்தான் இப்போது பி.ஜே.பி பாசத்தோடு செயல்படுகிறார். அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் சார்பான கூட்டங்களில் இதை வெளிப்படையாகவே பேசவும் ஆரம்பித்திருக்கிறார்.

ராம மோகன ராவ்
ராம மோகன ராவ்
Photo: Vikatan

இதன் பின்னணியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க-வுக்கு விழப்போகும் குறிப்பிட்ட சாதி ஒட்டுகளைப் பிரிப்பதுதான் ராம மோகன ராவுக்குத் தரப்பட்டிருக்கும் அஜென்டாவாம்.

லிங்கம்
தலைவரின் அரியணைக்குப் பங்கம்!

கடந்த வாரம் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உடன்பிறப்புகளை ஆதரிக்கும் அதிகாரி. அவர் மற்றோர் அதிகாரியைப் பார்த்து, ``எங்க ஆட்சி வருமா, வராதா... கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டாம ஏன் எட்டிப்போயிட்டே இருக்கு?’’ என்று வருத்தமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு, ``இன்னும் எத்தனை வருஷமானாலும் அது இப்படியேதான் போயிட்டிருக்கும். காரணம், உங்க தலைவர் வீட்டுலதான் இருக்கு!’’ என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவரே அதையும் விளக்கியிருக்கிறார்.

``உங்களுக்கு ஞாபகமிருக்கா... ஒரு கோயிலில் இருந்து காணாமல்போன சிவலிங்கத்தை திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஜமீன் வீட்டில் இருந்து எடுத்தாங்களே... அதேபோல இன்னொரு சிவலிங்கம், உங்க தலைவர் வீட்டுல இருக்காம். அதை வெச்சுத்தான் அவங்க மனைவி பூஜை பண்றாங்களாம். அவரோட உடல்நிலை மோசமா இருந்தப்போ, அதை எடுத்துட்டுப் போய் பூஜை பண்ணுனதாலதான் உயிர் பிழைச்சார்னு அவங்க நம்புறாங்களாம். ஆனா, சிவன் சொத்து குலம் நாசம்கிறது உண்மை. அந்த சிவலிங்கம் அவங்க வீட்டுல இருக்குற வரைக்கும் அவரால அரியணை ஏறவே முடியாது. யாராவது ஒருத்தர் இதை அவரோட காதுல போடச் சொல்லு... தானாக இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நீங்க நினைச்சபடி உங்க ஆட்சி வந்துரும்!’’ என்று தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார்.

வேப்பனஹள்ளி
வி.ஐ.பி தொகுதி ஆகிறதா?

வேப்பனஹள்ளி சட்டசபைத் தொகுதியைச் சென்னையிலிருந்து வந்த ஒரு டீம் ஆய்வு செய்துவிட்டுப் போயிருக்கிறது. அந்த தொகுதிக்குள் வரும் நாச்சிக்குப்பத்திலும் விசிட் அடித்திருக்கிறார்கள். ரஜினியின் தந்தை வழி பூர்வீக ஊராம் நாச்சிக்குப்பம். அங்கே இருக்கிற ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை, ரசிகர்கள் எண்ணிக்கை போன்ற கணக்குகளை எல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். வேப்பனஹள்ளி வேட்பாளர் ஆவாரா ரஜினி என்கிற பேச்சு அங்கே கிளம்பியிருக்கிறது.

ரஜினி
ரஜினி
பிட்ஸ்

* நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனைக்குப் பிறகு 150 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை பறிமுதல் செய்தனர். அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தச் சொத்துகளை விடுவிக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பகீரத முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால், முடியவில்லை. காரணம், வருமானவரித் துறையின் உயர் அதிகாரி ஒருவரின் கண்டிப்பான நடவடிக்கைதானாம்.

* தமிழக தொழில் துறை வட்டாரத்தில் `ஜெய்’ என்ற பெயரைக் கேட்டாலே, அதிகாரிகள் மட்டத்தில் மரியாதை செய்கிறார்கள். மத்திய அமைச்சர்களுக்கும் ஜெய்க்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதால் தொழில் துறையின் கோட்டைப் பிரதிநிதி ஜெய்யை உளமார நம்புகிறார். சமீபத்தில் கெமிக்கல் கம்பெனி ஒன்றில் தொழிலாளி ஒருவர் விபத்தில் இறந்துவிட்டார். இந்த விவகாரத்தை ஜெய் புண்ணியத்தில் ஊற்றி மூடிவிட்டார்களாம்.

* அரசுப் பதவிகளில் இல்லாத மாவட்டச் செயலாளர்கள் பத்து பேர்களுக்கு சான்ஸ் அடிக்கப் போகிறது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அவர்களுக்கு வாரியத் தலைவர் மாதிரியான அரசுப் பதவிகளை வாரி வழங்கப் போகிறது எடப்பாடி ஆட்சி.

அடுத்த கட்டுரைக்கு