Published:Updated:

ராகுல் விவகாரத்தால் வெளிநாடுகளில் டேமேஜ் ஆகிவிட்டதா மோடி இமேஜ்?!

“என் நற்பெயரைக் கெடுக்க சிலர் சதிவேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்” என்று பிரதமர் மோடியே பேசியிருக்கிறார். இதிலிருந்து, வெளிநாடுகளில் அவரது நற்பெயர் கெட்டுவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

Published:Updated:

ராகுல் விவகாரத்தால் வெளிநாடுகளில் டேமேஜ் ஆகிவிட்டதா மோடி இமேஜ்?!

“என் நற்பெயரைக் கெடுக்க சிலர் சதிவேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்” என்று பிரதமர் மோடியே பேசியிருக்கிறார். இதிலிருந்து, வெளிநாடுகளில் அவரது நற்பெயர் கெட்டுவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

``உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன், என் நற்பெயரைக் கெடுக்க சிலர் சதிவேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்” என்று ஏப்ரல் 1-ம் தேதியன்று போபாலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அதானி விவகாரம், ராகுல் விவகாரம் எனச் சமீபத்தில் தேசிய அளவில் புயலைக் கிளப்பிய சீரியஸான சில விவகாரங்களால், பிரதமர் மோடியின் நற்பெயருக்கு வெளிநாடுகளில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்களில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

மோடி
மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது, ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

அந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் மோடியும் தொழிலதிபர் கௌதம் அதானியும் விமானத்தில் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ராகுல் காந்தி காண்பித்தார். பின்னர், ராகுல் காந்தியின் அந்த உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

அதன் பிறகு லண்டன் சென்ற ராகுல் காந்தி, இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களிடையே பேசினார். அதே கருத்தை, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்ற கூட்டத்திலும் ராகுல் காந்தி முன்வைத்தார். அதையடுத்து, வெளிநாட்டுக்குப் போய் இந்தியாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதாக பா.ஜ.க-வினர் பிரச்னையைக் கிளப்பினர்.

மோடி
மோடி

ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். அதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க எம்.பி-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களைப் பொறுத்தளவில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இந்தச் சூழலில்தான், மோடி என்ற பெயர் குறித்து 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் ராகுல் காந்தி அவதூறாகப் பேசினார் என்ற வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ராகுல் காந்தி பேசிய சில நாள்களில், அவரின் எம்.பி பதவியே பறிபோனது. அப்படியென்றால், இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ராகுல் காந்தி பேசியது உண்மையாகத்தான் இருக்கும் என்றே வெளிநாட்டினர் எடுத்துக்கொள்வார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் இமேஜை மோசமாக பாதிக்கச் செய்த மற்றொரு விவகாரம் பி.பி.சி ஆவணப்படம். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, அந்த மாநிலத்தில் மிகக்கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில், ‘சுமார் 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்’, ‘இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர்’ என்ற விவகாரம் மோடியின் அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி ஊடகம் சமீபத்தில் வெளியிட்டது. இந்தியாவில் அதைத் திரையிடுவதற்கு மத்திய பா.ஜ.க அரசு மறைமுகமாகத் தடை விதித்தது. அதையும் மீறி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதையெல்லாம் வைத்துத்தான், தன் நற்பெயரைக் கெடுக்க உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் சதி வேலைகளில் சிலர் ஈடுபடுவாக பிரதமர் மோடி பேசினார். மேலும், “இந்த வேலைக்காக பல்வேறு நபர்களுக்கு அவர்கள் ஒப்பந்தம் அளித்திருக்கின்றனர்” என்றும் மோடி குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த மூத்த அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபில், “யார் அந்த நபர்கள்?” என்று பிரதமருக்கு கேள்வி எழுப்பினார். “அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்றும் கபில் சிபல் கூறினார்.

யார் அந்த “சக்திகள்” என்று பிரதமரும் பெயர் குறிப்பிடவில்லை. ஆனாலும், தன் நற்பெயரைக் கெடுப்பதற்கான சதி வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்று அவர் வெளிப்படையாகப் பேசியதன் மூலம், அவரது நற்பெயருக்கு வெளிநாடுகளில் களங்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அவர் எண்ணத் தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.