Published:Updated:

சபரிமலை விவகாரத்தை ஓட்டு அரசியலாகப் பார்க்கிறாரா பினராயி விஜயன்?!

சபரிமலை
சபரிமலை

'ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ஓட்டை தீர்மானிக்கும்' என்று இடது சாரிகள் நினைத்தால் அது தவறு. கடந்த முறை பா.ஜ.க சபரிமலை விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றது. ஆனால், அந்தக் கட்சியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.

சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 -ம் தேதி, உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அந்த மாநில அரசு அனைத்து வயதுடைய பெண்களையும் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்தது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை தேவசம் போர்டு மற்றும் இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை கடுமையாக எதிர்த்துவந்தன. இந்தக் கடுமையான எதிர்ப்பையும் மீறி கனகதுர்கா, பிந்து என்ற இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றனர். இந்தச் சம்பவத்தை அங்குள்ள இந்து அமைப்புகள் எதிர்த்ததால், கேரளாவில் வன்முறை வெடித்தது. இதனால் ஒரு மண்டல பூஜை முழுவதும் பதற்றம் நீடித்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜையுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான மறு சீராய்வு மனுவும் ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போல கேரள அரசு தங்களுக்கு ஆதரவாக இருக்கும் எனக் கருதி, சில பெண்கள் அமைப்புகள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டிவருகின்றன. ஆனால், தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பாலன் இருவரும் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்கள் இருவரும் தெரிவித்துள்ள கருத்து, பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

குறிப்பாக, சுரேந்திரன் "சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. நீதிமன்ற அனுமதியுடன் வந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிக்க முடியும். சபரிமலை புரட்சி செய்யும் இடமில்லை "என்று கூறியுள்ளார். அதேபோன்று, சட்டத்துறை அமைச்சர் பாலன் பேசுகையில், "பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது தீட்டாகும்" என்று கூறியுள்ளார். இடதுசாரி கட்சி ஆட்சி செய்கிற கேரள மாநிலத்தில் இப்படியான பேச்சு எழுந்திருப்பது, பெண்கள் அமைப்புகள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

இதுகுறித்துப் பேசிய மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள செல்வி "நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது கேரள அமைச்சர்கள் இவ்வாறு பேசிவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, சட்டத்துறை அமைச்சர் பாலன் 'பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நிகழ்வைத் தீட்டு' என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்தப் பேச்சு சட்டத்திற்கு எதிரானது. சி.பி.எம் கட்சியில் இருந்துகொண்டு அவர் இப்படி பேசுவதை ஏற்க முடியவில்லை.

செல்வி மனிதி
செல்வி மனிதி

குறிப்பாக, 2018 -ல் நீதிபதி நாரிமன் வழங்கிய தீர்ப்பில் 'மாதவிடாய் காரணமாகத்தான் பெண்களைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கிறீர்கள் என்றால், அதுவும் தீண்டாமைதான்' என்று கூறியுள்ளார். நீதிபதியின் கருத்தை சட்டமாகக் கருதி அமைச்சர்கள்மீது சட்டரீதியாக கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த இரு அமைச்சர்களும் இவ்வாறு பேசி வருவதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காத்துவருகிறார். இது எப்படியான அரசியல் நிலைப்பாடு என்று தெரியவில்லை.

வாக்கு அரசியல் என்ற இடத்திலிருந்தே இந்த விவகாரத்தை சி.பி.எம் அணுகிறது என்றே தோன்றுகிறது. 'ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ஓட்டை தீர்மானிக்கும்' என்று இடது சாரிகள் நினைத்தால் அது தவறு. கடந்த முறை பா.ஜ.க சபரிமலை விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றது. ஆனால், அந்தக் கட்சியால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. இது, இடது சாரிகளுக்குத் தெரியாதா? அப்படியிருந்தும் ஏன் இதை ஓட்டு விவகாரமாகப் பார்க்க வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கு ஒரு தெளிவான பார்வை இல்லை என்பது தெரிகிறது.

மேலும், இடதுசாரி அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்கூட இந்த அமைச்சர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. அந்த அமைப்பு, தற்போது பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளது. இப்படி இருந்துகொண்டு, இத்தகைய அமைச்சர்களின் பேச்சைக் கண்டிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. இந்தப் பிரச்னையை நாங்கள் விடப்போவதில்லை. இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து தீர்வு காண உள்ளோம்" என்றார்.

பிந்து
பிந்து

இதுகுறித்து முதன்முறையாக சபரிமலை கோயிலுக்கு சென்றவரும், நவோதானா கேரளம் ஸ்ரீஸ்திரி பக்ஷ கோட்டையம்மா அமைப்பைச் சேர்ந்தவருமான பிந்து பேசுகையில், "சபரிமலைக்கு முதல் முறை போயிருக்கிறேன். இந்த முறை போகவில்லை. அதற்குக் காரணம், எங்களுடைய அமைப்பில் மற்றவர்களை அனுப்பிவைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறேன். இதற்கிடையில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள அரசு கூறியிருப்பது அதிருப்தி அளிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும்போது, அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறிப்போயிருப்பது மிக வருத்தமாக உள்ளது.

`பழைய உத்தரவுக்குத் தடையில்லை; 7 நீதிபதிகள் அமர்வு விசாரணை!' - சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

குறிப்பாக, பி.ஜே.பி மற்றும் சங் பரிவார் அமைப்புகளைப் போன்று சி.பி.எம் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இது, பினராயி விஜயன் அரசுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதை நீதிமன்றமே கையில் எடுத்தால்தான் பிரச்னை தீரும். எது எப்படி இருந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் கோயிலுக்குச் செல்வது உறுதி. எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுடைய அமைப்பு சார்பாக, வரும் ஜனவரி மாதம் 2 -ம் தேதி சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு