Published:Updated:

ஆகஸ்ட் 14 ; நன்னடத்தை; சசிகலா விடுதலை! - டெல்லிக்கு உறுதி கொடுத்தாரா எடியூரப்பா?

சசிகலா
சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா,  சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் மீதும் அவரின் உறவுகளான இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு நான்கு ஆண்டு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பையே 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவருடன் அவருடைய அண்ணி இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் அடைக்கப்பட்டனர்.

நான்கு ஆண்டு தண்டனை சசிகலாவுக்கு விதிக்கப்பட்டாலும், ஏற்கெனவே அவர் சிறையிலிருந்த நாள்கள் மற்றும் நன்னடத்தை உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி, தண்டனை காலத்துக்கு முன்பாகவே அதாவது 2020-ம் ஆண்டு இறுதியிலே விடுதலையாவார் என்று பேசப்பட்டு வந்தது. மேலும், சசிகலா தரப்புக்கு ஆதரவாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சுவாமியும் குரல் கொடுத்து வந்தார்.

மத்தியில் பி.ஜே.பி அரசு இருப்பதால் அவர்களின் ஆதரவு இல்லாமல் விடுதலை சாத்தியமில்லை என்பதை சசிகலா தரப்பு உணர்ந்திருந்தது. சட்டரீதியாக ஒருபுறம் சசிகலாவின் விடுதலையை வேகப்படுத்தும் வேலைகளை அவருடைய வழக்கறிஞர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாகவே சசிகலா விரைவில் விடுதலையாகப்போகிறார் என்று செய்திகள் கசிந்தன.

சசிகலா
சசிகலா

இந்நிலையில் பா.ஜ.க-வின் தேசிய நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி, நேற்று தனது முகநூல் பக்கத்தில் சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி விடுதலையாகப் போகிறார் என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சில பா.ஜ.க நிர்வாகிகள், ``சசிகலாவை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆரம்பம் முதலே பி.ஜே.பி-யின் முக்கிய பிரமுகர் ஒருவர் ஆர்வம் காட்டிவந்தார். அதேபோல் அ.தி.மு.க பிரிந்தபோது சசிகலாவுக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கருத்துச் சொன்னவர் சுப்பிரமணியன் சுவாமி.

வரப் போகிற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சசிகலாவை வெளியே கொண்டுவரும் வேலையிலும் சிலர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க அரசு ஆட்சியைப் பிடித்தவுடன் சசிகலா தரப்பு மீண்டும் தங்கள் கோரிக்கையை அழுத்தமாக வைத்தது. எனவே, சுதந்திர தினத்துக்கு முன்பாக சிறைக் கைதிகள் சிலரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் சசிகலாவின் பெயரையும் இணைக்கும் முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டார் பி.ஜே.பி முக்கிய பிரமுகர் ஒருவர்.

‘‘சசிகலா தலைமையா? - அப்படியோர் எண்ணமே இல்லை!’’

இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் பி.ஜே.பி முக்கிய தலைவர் ஒருவரும் சசிகலா விடுதலை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்போது எடியூரப்பா, விடுதலை தொடர்பாக கிரீன் சிக்னல் காட்டியதாகவும் சொல்கின்றனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

இந்தத் தகவல் டெல்லி பா.ஜ.க மேலிடத்துக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழக அரசியலில் வலுவான ஓர் அணியை அமைக்க பா.ஜ.க விரும்புவதால் டெல்லி தலைமையும் இதற்கு சரி சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. தண்டனைக் காலத்துடன் அபராதத் தொகையான 10 கோடியையும் சசிகலா செலுத்த வேண்டியிருப்பதால் அந்தத் தொகையை தயார் செய்யும் வேலையில் சசிகலா தரப்பு இப்போது இறங்கிவிட்டது" என்கிறார்கள். அதேநேரம் சசிகலாவுடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு