Published:Updated:

`காசு கொடுத்தால் கலைமாமணி?’... கொந்தளிப்பில் கலைஞர்கள்! - என்ன நடக்கிறது?

கலைமாமணி விருது

ரூ.2 லட்சம் கொடுத்தால் தகுதியில்லாதவர்களுக்குக்கூட கலைமாமணி விருது கொடுக்கப்படுவதாக கலைஞர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். என்ன நடக்கிறது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில்?

`காசு கொடுத்தால் கலைமாமணி?’... கொந்தளிப்பில் கலைஞர்கள்! - என்ன நடக்கிறது?

ரூ.2 லட்சம் கொடுத்தால் தகுதியில்லாதவர்களுக்குக்கூட கலைமாமணி விருது கொடுக்கப்படுவதாக கலைஞர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். என்ன நடக்கிறது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில்?

Published:Updated:
கலைமாமணி விருது

2011-ல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற சமயத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுக்குத் தேர்வானவர்களின் பட்டியல் ஒப்புதலுக்காகக் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா அதை நிறுத்திவைத்தார். அதனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒன்பது ஆண்டுகள் வரை கலைமாமணி விருதே கொடுக்கப்படவில்லை. 2019-ல் முதல்வராக இருந்த எடப்பாடி, ஒன்பது ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக விருதைக் கொடுத்தார். தற்போது, தி.மு.க ஆட்சியில் இரண்டாண்டுகளுக்குச் சேர்த்து கலைமாமணி விருது கொடுக்கப்படவிருக்கிறது. இதில்தான் வசூல்வேட்டை என்கிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் கலைப் பண்பாட்டுத்துறையின் அங்கமாக இருப்பதுதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். சென்னை பசுமைவழிச்சாலையில் இதற்கென பிரமாண்ட அலுவலகமும், கலைஞர்கள் தங்குவதற்கு விடுதியும் இருக்கிறது. மன்றத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து இசைக்கலைஞர்கள் சிலர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்கள். ``நாட்டுப்புறக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் உள்ளிட்டோரின் நலனுக்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்க, வெறும் 48,000 பேரை மட்டுமே மன்றத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். தி.மு.க ஆட்சி அமைந்ததும் நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாகை சந்திரசேகர் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், மதுரை சோமு என்ற சோமசுந்தரம்தான் மன்றத்தின் தலையெழுத்தையே நிர்ணயிப்பவர். கலைமாமணி விருது யாருக்கெல்லாம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் முடிவுசெய்பவர் சோமுதான்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
நரேஷ்குமார்

தி.மு.க ஆட்சியமைந்த புதிதில், மன்றத்தின் செயலராக சோமு நியமிக்கப்பட்டபோது, கலைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடியதால் சோமுவை நீக்கிவிட்டனர். கலைமாமணி விருதுக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மதுரை சோமு கொடுக்கும் பட்டியல்தான் மன்றத்தில் இறுதிசெய்யப்படுகிறது. கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம், ரயில் பயணத்தில் சலுகை என்றெல்லாம் சொல்வார்கள், ஆனால் எதுவுமில்லை.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
நரேஷ்குமார்

எனினும், கலைமாமணி விருது என்பது கௌரவம். பெயருக்கு முன்னாள் கலைமாமணிப் பட்டத்தைப் போட்டுக்கொண்டால், கச்சேரிகள் கூடுதலாகக் கிடைக்கும் என்பதால்தான் எப்போதுமே இவ்விருதுக்குப் போட்டி அதிகம். அந்தப் போட்டிதான் சோமுவுக்கு வசூலை வாரிக்குவிக்கிறது” என்று முன்னோட்டம் கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்துக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கூட்டமைப்பின் வழிகாட்டுநர் பேராசிரியர் காளீஸ்வரன் நம்மிடம், ``20 ஆண்டுகளுக்கும் மேலாக, யார் மன்றப் பொறுப்புகளுக்கு வந்தாலும் அவர்களுடன் சேர்ந்துகொள்வது சோமுவின் வாடிக்கை. கலைசுடர்மணி, கலைவளர்மணி, கலைமுதுமணி ஆகிய விருதுகளை வாங்கிய பின்னரே கலைமாமணி விருதை ஒருவர் பெற முடியும். ஆனால், சோமுவோ இரண்டு லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு, கலைமாமணி விருதுகளை வாரி வழங்கியிருக்கிறார். கலைப் பண்பாட்டுத்துறைச் செயலாளர் சந்திரமோகன் மூலம்தான் மன்றத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார் சோமு.

அவர் நீக்கப்பட்ட பிறகு, மு.ராமசாமி என்ற கலைஞர் செயலராக நியமிக்கப்பட்டார். வாகை சந்திரசேகரும், சோமுவும் சேர்ந்துகொண்டு ராமசாமிக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்ததால், மனமுடைந்த ராமசாமி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.

காளீஸ்வரன்
காளீஸ்வரன்

சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள், வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை அழைத்துச் செல்லும் சோமு, ஒட்டுமொத்தமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு பைசாகூட கலைஞர்களுக்குக் கொடுப்பதில்லை. மன்ற விடுதியில் எந்த ஒரு கலைஞரையும் தங்கவிடாமல், சோமுதான் பல பெயர்களில் அறை எடுத்து அடிக்கடித் தங்கிவருகிறார். இதற்கு அலுவலக ஊழியர்களும் உடந்தை. தற்போது இந்த ஆண்டுக்கானக் கலைமாமணி விருதுப் பட்டியலைத் தயார் செய்வதற்காக கலெக்‌ஷனில் ஈடுபட்டுவருகிறார் சோமு. புதிய செயலராக வந்திருக்கும் விஜயா தாயன்பனும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இது குறித்து விசாரித்து சோமு மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

நாட்டுப்புறக் கலைஞர் கோவிந்தராஜிடம் பேசுகையில், "மதுரை சோமுவால் வஞ்சிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். சோமுவின் சிபாரிசு இல்லாமல், கலைமாமணி விருதுப் பட்டியலில் என் பெயர் இடம்பெற்றது. அவருக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை என்பதாலோ என்னவோ, நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற நாதஸ்வரக் கலைஞர் மூலம் என்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவைத்து விருதைப் பெறவிடாமல் செய்தார். இதனால் மனமுடைந்து தற்கொலை வரை சென்று, காளீஸ்வரன் உள்ளிட்ட சிலரால் மீட்கப்பட்டு, மேல்முறையீடு செய்து எனக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற்று அதன் பிறகுதான் கலைமாமணி விருதே வாங்கினேன்" என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை சோமுவை நேரில் சந்தித்தோம். “என்மீது தேவையின்றி, வேண்டுமென்றே புகார்களைச் சொல்கிறார்கள். நான் கலைமாமணி விருது விவகாரத்தில் ஒருகாலமும் தலையிடுவதில்லை. கலைமாமணி விருதுக்கு வயது, தகுதி என எதையும் நிர்ணயிக்காததை எதிர்த்து, நான்தான் நீதிமன்றத்தில் வழக்கே தொடர்ந்தேன். 40 வயதுக்குக் குறைவானவர்களுக்குக் கலைமாமணி விருது கொடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோமு என்கிற சோமசுந்தரம்
சோமு என்கிற சோமசுந்தரம்

அதை எதிர்த்து மன்றம் சார்பில் அப்பீல் சென்று ரிலாக்ஸேஷன் வாங்கிக்கொண்டனர். மரக்கால் ஆட்டத்துக்காக கோவிந்தராஜ் என்பவருக்குக் கலைமாமணி விருது கொடுத்ததை நான் எதிர்த்ததால், அவர்தான் எனக்கெதிராகத் தூண்டிவிடுகிறார். கலைஞர்களை நிகழ்ச்சிகளுக்காக, வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்லும்போது, மொத்தமாக ஒரே நபரிடம் பணம் கொடுப்பதில்லை. ஒவ்வொரு கலைஞர்களுக்குமே தனித்தனியாக செக் கொடுத்துவிடுவார்கள்.

பெயர் எழுதிக்கொடுத்து அதற்குரிய பணம் கட்டினால், மன்ற விடுதியில் கலைஞர்கள் யார் வேண்டுமானால் தங்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் மன்றத் தலைவராக இருந்தவர், செயலராக இருந்தவர் என வேறு இருவர் செய்தத் தவறுகளுக்கு என்னைப் பொறுப்பாளியாக்கப் பார்க்கிறார்கள். என்னதான் மன்றத்துக்கு எதிராக நான் செயல்பட்டாலும், எனக்கிருக்கும் தகுதியைக்கொண்டுதான் என்னை மன்றச் செயலராக நியமித்தது அரசு.

ஆனால், சிலர் நான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-காரன் என்று பொய்ப் பிரசாரம் செய்து, போராட்டம் நடத்தி, ஒரு வாரம்கூட என்னைச் செயல்படவிடாமல் வெளியேற்றவைத்துவிட்டனர். அதன் பிறகு, செயலராக நியமிக்கப்பட்ட மு.ராமசாமி வெளியேறியதற்கும் நான்தான் காரணம் என்கிறார்கள். மன்றத்தில் எது நடந்தாலும் சோமு என்று சொல்வது வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றார்.

வாகை சந்திரசேகர்
வாகை சந்திரசேகர்

பிரச்னைகள் குறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகரிடம் கேட்டபோது, "சோமு, மன்றத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கலைமாமணி விருதுக்கான எந்த ஒரு செயல்பாடும் தொடங்கப்படவில்லை என்பதால், சோமு இதில் தலையிடவுமில்லை. வசூல் வேட்டை என்பதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு.

சோமுவைப் பற்றி எனக்குத் தெரிந்தவரை அப்பழுக்கற்றவர். அவர்மீது குற்றம்சாட்டுபவர்கள் அதற்கான ஆதாரங்களைக் கொடுத்து அவரைத் தண்டிக்கலாமே! நான் தலைவரானபோது செயலர் பொறுப்புக்கு வந்த சோமுவை பா.ஜ.க விசுவாசி என்று கூறி, போராட்டம் நடத்தி பொறுப்பிலிருந்து நீக்கப்படவைத்த காளீஸ்வரன் மீதுதான் கலைஞர்கள் ஏகப்பட்ட புகார்களைச் சொல்கிறார்கள். சோமுவை நான் பாராட்டுவதால், அவருக்குப் பின்னால் நான் இருப்பதாக என்னைத் தேவையின்றிச் சீண்டுகிறார்கள்” என்றார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இறுதியாக தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசியபோது, “கலைமாமணி விருது வழங்குவது குறித்து விருதாளர்களைத் தேர்வுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு முறைப்படி விண்ணப்பங்களை, தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்து, அதன் அடிப்படையிலேயே விருதுகள் வழங்கப்படும்” என்றார்.

கௌரவத்தைக் கொடுக்கும் விருதுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism