Published:Updated:

2011-ல் கருணாநிதி... 2021-ல் ஸ்டாலின் - கொளத்தூரில் போட்டியிடுகிறாரா சீமான்?#TNElection2021

சீமான், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே இறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது, இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒரு போர்க்களக் காட்சி வரும். ஒருபுறம் ரீமாசென் தரப்பினர், துப்பாக்கி, பீரங்கி, ஹெலிகாப்டர் என நவீன ஆயுதங்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்தப் பக்கம் பார்த்திபன் தரப்பு, வில், அம்பு, கற்களை வைத்துக்கொண்டு சண்டையிடுவார்கள். ஒரு கட்டத்தில் ரீமா தரப்பின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பார்த்திபன் படையின் ஒருசிலரைத் தவிர்த்து அனைவரும் இரையாகிப் போவார்கள். ஒரு நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க, பார்த்திபன் கார்த்தியிடம், ``இந்தப் படைக்கலத்தின் பேர் என்ன, இதைப் பற்றி தாங்கள் முன்னமே விவரிக்கவில்லையே... அச்சபடுவோம் என்றா?'' என தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்க, அனைவரும் உரக்கச் சிரிப்பார்கள். அதற்கு ஈடான ஒரு காட்சி நேற்று, தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியது.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
சீமான் செய்தியாளர் சந்திப்பு

விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பத்திரிகையாளர்கள், ''நீங்கள் சென்னையில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் ஸ்டாலின் வெற்றிபெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதாகச் சொல்கிறார்களே அது உண்மைதானா, போட்டியிடுவீர்களா?'' எனக் கேட்க, சீமான் திரும்பி, தன் தம்பிமார்களைப் பார்க்க அனைவரும் உரக்கச் சிரித்துவிட்டு, ``நிக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க... நானும் நிக்கலாம்னு நினைக்கிறேன்...அத அப்புறம் யோசிப்போம்'' என பதில் தந்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்தான், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி குறித்து பேச்சு எழுந்துள்ளது.

2010-ம் ஆண்டே நாம் தமிழர் இயக்கத்திலிருந்து கட்சியாக மாறினாலும், அது முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டது 2016-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான். 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தில் இறங்கினார் சீமான். கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிட்டார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அவரின் சொந்த மாவட்டத்தில்தான் போட்டியிடமுடியும் என்கிற மரபை உடைப்பதற்காக வட தமிழகத்திலும், அதிலும் குறிப்பாக வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூரில் சீமான் போட்டியிட முடிவெடுத்ததாகவும் அப்போது அந்தக் கட்சியினரால் விளக்கம் தரப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

ஒருபுறம் அ.தி.மு.கவின் அமைச்சர் எம்.சி.சம்பத், மறுபுறம் தி.மு.க-வின் மாநில மாணவரணிச் செயலாளர் புகழேந்தி, பா.ம.க சார்பில் ஒருவர், மக்கள் நலக் கூட்டணியில் த.மா.கா சார்பில் ஒரு வேட்பாளர் என ஐந்து முனைப் போட்டி நிலவியது. அதனால் சீமானால் அங்கு வெறும் 12,497 வாக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதனால், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில், தென் மாவட்டத்தில், தன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாம் என முடிவு செய்யப்பட்டு. சிவகங்கையா, காரைக்குடியா என விவாதிக்கப்பட்டு பின் காரைக்குடி தொகுதிதான் என முடிவானது. ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்த சர்வேயில் அந்தத் தொகுதியில் சீமானால் வெற்றிபெறுவது கடினம் என ரிசல்ட் வர, சென்னையில் ஒரு தொகுதியில் போட்ட்யிடலாம் என முடிவானது. அதிலும், குறைவான வாக்களர்களைக் கொண்ட ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்றே முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில்தான், தற்போது பத்திரிகையாளர்கள் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகச் சொல்கிறார்களே எனக் கேட்க இப்படியொரு பதிலைச் சொல்லியிருக்கிறார் சீமான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011-ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பில், வில்லிவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளும், நீக்க‌ப்ப‌ட்ட‌ புர‌சைவாக்க‌ம் தொகுதியில் இருந்த‌ சில‌ ப‌குதிக‌ளையும் உள்ள‌ட‌க்கி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமியை விட வெறும், 2,819 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். ஆனால், 2016 தேர்தலில் தன்னை எதிர்த்துப் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜே.சி.டி பிரபாகரை விட 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார் ஸ்டாலின். அவருக்கு மிகவும் சாதகமான தொகுதியாகவே கொளத்தூர் தொகுதி இருக்கிறது. இந்தநிலையில் சீமான் இங்கு போட்டியிடுவாரா?...நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

''2011-ம் வருடமே அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து, எங்கள் அண்ணனை நிற்க வைக்க பலர் முயற்சி செய்தார்கள் ஆனால், நாங்கள் தேர்தல் பாதைக்கு அப்போது வரவில்லை. எங்களுக்கு சரியான கட்டமைப்புகளும் அப்போது இல்லை. ஆனால், இப்போது அப்படி அல்ல, 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு கிளைகள் இருக்கின்றன. சென்னையில்தான் அண்ணன் போட்டியிடுகிறார்; அது உறுதி. ஆலந்தூர்தான் முடிவாகியிருந்தது. ஆனால், கொளத்தூரில் போட்டியிடலாம் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்'' என்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்ட்யிட்டால் அது ஸ்டாலினின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா என தி.மு.க வட்டாரத்தில் பேச, ''அவர் நிற்பதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. கடலூரில் போட்டியிட்டு அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக எங்கள் தலைவர், கொளத்தூர் தொகுதியில் செய்திருக்கிற பணிகள் என்பது மகத்தானது. கொரோனாவுக்கு பின்பு மட்டும் அல்ல அதற்கு முன்பாகவே அவர் அங்கு சிறப்பான பல பணிகளைச் செய்திருக்கிறார். அதனால் எங்கள் தலைவருக்கான வாக்குகளைச் சீமானால் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கான வாக்குகள் அப்படியே எங்களுக்குத்தான் விழும். எதிர்க்கட்சிகளுக்குப் போகிற வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார். அதனால் எங்கள் தலைவரின் வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாகும்'' என்கின்றனர் மிகுந்த உற்சாகமாக.

47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி! #TNElection2021

ஆனால், சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காண்பிப்பதற்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து, அரசியல் விமர்சகர்கள் பேசும்போது,``கன்ஷிராம் பாணியைத்தான் சீமான் கடைபிடிக்கிறார். ஸ்டாலினை மையமாக முன்வைத்தால் மிகப்பெரிய பப்ளிசிட்டி கிடைக்கும் என நினைக்கிறார். தவிர, ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவதன் மூலமாக, திராவிடமா, தமிழ்த் தேசியமா என்கிற விவாதத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கலாம் என நினைக்கிறார். அந்த ஒரு தொகுதியில் மட்டுமல்லாது, 233 தொகுதியிலும் அதை விரிவுபடுத்துவார் தன்னுடைய பேச்சுத் திறமையால் கருத்தியல் ரீதியாக கடுமையான சவாலை ஸ்டாலினுக்கு ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார். கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் ஸ்டாலினுக்கு நான்தான் போட்டி என முன்வைத்து தன் கட்சியை வளர்க்கப் பார்க்கிறார் சீமான்'' என்கின்றனர்.

சீமான்
சீமான்

அதேவேளை, ``ஆன்டி பிஜேபி என்கிற அடிப்படையில், தி.மு.க-வும் நாம் தமிழரும் ஒரே கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது, ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால் பா.ஜ.கவின் 'பி' டீம் என்கிற பெயர்தான் அவருக்கு ஏற்படும். தேர்தல் அரசியல், கருத்தியல் ரீதியான விவாதத்துக்கான களம் அல்ல. அதனால், அது மக்களிடம் பெரியளவில் எடுபடாது. ஆனால், சீமான் அங்கு போட்டியிட்டால் அவர் தி.மு.க-வுக்குச் செல்கின்ற வாக்குகளைத்தான் பிரிப்பார். ஆனாலும்,கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றி உறுதியானது. அதில், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதனால், சீமான் மற்றவர்களின் வெற்றியைத் தடுப்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, தனக்கு ஆதரவான தொகுதி எது, எங்கு நின்றால் வெற்றி பெறலாம் என யோசிப்பதே அவருடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது'' என்கிற கருத்துக்களும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய நாம் ஆரம்பத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் காட்சியைப் போல, துணிவும் தைரியமும் இருந்தால் மட்டும் போதாது; போதிய வலிமையும் களத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கையில் எடுத்தால் மட்டுமே வெற்றியைப் பெறலாம் என்பதே போர்க்களமும் சரி தமிழகத் தேர்தல் களமும் சரி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் அதைப் புரிந்துகொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு