Election bannerElection banner
Published:Updated:

அ.தி.மு.க-வின் `பி’ டீம்-ஆகச் செயல்படுகிறதா சீமானின் நாம் தமிழர் கட்சி?

சீமான் -  எடப்பாடி பழனிசாமி
சீமான் - எடப்பாடி பழனிசாமி

நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க-வின் `பி’ டீம் எனச் சொல்பவர்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுக்களைக் காண்போம்.

தமிழகத் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலாக, தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பம்பரமாகச் சுழன்றுவருகின்றன. ஒருபுறம், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க உடனான தொகுதிப் பங்கீடு நிறைவுற்றிருக்கிறது. பா.ஜ.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. மறுபுறம், தி.மு.க கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கிறது.

தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும் எனத் தொகுதிப் பங்கீடும் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போது எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் தமிழகத்தில் ஓர் அரசியல்வாதி இருக்கிறார் என்றால், அது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான். காரணம், யாருடனும் கூட்டணி இல்லை என முடிவெடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்து, அவர்கள் தீவிரமாகப் பிரசாரத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

மார்ச் 20-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்துவைக்கும் பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் தேதி முன்பே வந்துவிட்டதால் அதில் மட்டும் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, வரும் 7-ம் தேதி அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஒருபுறம் தேர்தலுக்குத் தயார் என நாம் தமிழர் கட்சியினர் நெஞ்சை நிமிர்த்தி நிற்க, ``அவர்கள் அ.தி.மு.க-வுடன் ரகசிய டீல் செய்திருக்கின்றனர். அ.தி.மு.க-வின் `பி’ டீம தான் நாம் தமிழர்'' எனக் கடுமையான விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துவருகின்றனர்.

தேர்தல் காலம் வந்தாலே இந்த `பி’ டீம் கோஷங்கள் எழுவது இயல்புதான். பீகார் தேர்தலின்போதுகூட ஒவைசியின் கட்சி பா.ஜ.க-வின் `பி’ டீம் என்கிற கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், `விழுந்த தி.மு.க-வை இனி எழவே விடக் கூடாது' என நாம் தமிழர் கட்சியினர் பேசுவதும், ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடப்போவதாக அறிவித்த சீமானின் முடிவும்தான் நாம் தமிழர் கட்சியின் மீதான இந்த விமர்சனங்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. மேலும், நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க-வின் 'பி’ டீம் எனச் சொல்பவர்கள் முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகளைக் காண்போம்.

சீமான் - இராஜீவ் காந்தி - கல்யாண சுந்தரம்
சீமான் - இராஜீவ் காந்தி - கல்யாண சுந்தரம்

``கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க-வின் அரசாங்கம்தான் நடந்துவருகிறது. ஆனால், நாம் தமிழர் கட்சியின் சீமானோ, ஆளும்கட்சியைவிட எதிர்க்கட்சியான தி.மு.க-வைத்தான் கடுமையாக விமர்சித்துவருகிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாகச் சொல்லிக்கொள்ளும் சீமான், கடந்த நான்காண்டுகளில், தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகுவைத்த, எடப்பாடி பழனிசாமி குறித்து இதுவரை கடுமையாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவே இல்லை. கொரோனா காலத்தில் எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த நேரத்தில், மத்திய அரசைக் குற்றம்சாட்டி மாநில அரசைக் காப்பாற்றினார் சீமான். அதைவிட, ஊரடங்கு காலத்தில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு அனுமதி கிடைத்தது குறித்துக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார்.

தமிழகத்தை வஞ்சித்த எடப்பாடியை எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சீமான், `தி.மு.க தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன்’ என்று சொல்வதை எப்படிப் பார்ப்பது? அ.தி.மு.க அரசுடன் ரகசியமாக டீல் வைத்துக்கொண்டு வேண்டுமென்றே தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். அந்தக் கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்தக் கட்சியைவிட்டு வெளியில் வந்த சிலரும் அதை உறுதி செய்திருக்கின்றனர். அதனால், நிச்சயமாக நாம் தமிழர் கட்சியினர், அ.தி.மு.க-வின் `பி’ டீம் மட்டுமல்ல, தற்போது அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறது. அதனால், பா.ஜ.க-வின் டீமும்தான்'' என்கின்றனர் காட்டமாக.

ஸ்டாலின் - சீமான்
ஸ்டாலின் - சீமான்

ஆனால், ``நாங்கள் அ.தி.மு.க., தி.மு.க எனும் இரண்டு கட்சியையும் சம தளத்தில் வைத்துத்தான் பார்க்கிறோம். இருவர் செய்யும் தவறுகளையும் சமமாக விமர்சித்தும்வருகிறோம். ஆனால், தி.மு.க-வினர்தான் தொடர்ந்து எங்கள்மீது `பி’ டீம் என்கிற முத்திரையைக் குத்திவருகின்றனர். எந்தக் கட்சிக்கும் `பி’ டீமாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கொள்கைரீதியாகத்தான் நாங்கள் தி.மு.க-வை எதிர்த்துவருகிறோம். அ.தி.மு.க பெயரளவில் திராவிடத்தைச் சுமந்துகொண்டிருந்தாலும், திராவிடக் கொள்கைளைக் கடைப்பிடிக்கவில்லை. இல்லை, அப்படி தங்களைச் சொல்லிக் கொள்வதில்லை. ஆனால், தி.மு.க-தான் தங்களை திராவிடக் கொள்கையாளர்களாகச் சொல்லிவருகிறது. நிலைமை அப்படியிருக்க, நாங்கள் தி.மு.க-வைத்தான் எதிர்க்க முடியும்.

நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

தவிர, ஈழ இனப்படுகொலையின்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததால் தி.மு.க-வின் மீது எங்களுக்குக் கோபம் இருப்பது உண்மைதான். அப்போது தொடங்கிய எங்கள் எதிர்ப்பு இப்போதும் தொடர்ந்துவருகிறது. அதை இந்தத் தேர்தலோடு மட்டும் முடிச்சுப் போடுவது சரியல்ல. அதேவேளையில், ரஜினி கட்சி ஆரம்பிக்க இருக்கையில், `ஸ்டாலின் எங்கள் பங்காளி, ரஜினி எங்கள் பகையாளி' என ஸ்டாலினுக்கு ஆதரவாகத்தான் நாங்கள் நின்றோம். ஆனால், அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எங்களை பா.ஜ.க-வின் `பி’ டீம் எனச் சொல்லும் தி.மு.க-தான், தமிழகத்தில் பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்திருக்கிறது. நாங்கள், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஸ்டாலின் - சீமான் - ரஜினி
ஸ்டாலின் - சீமான் - ரஜினி

எங்களுடைய வளர்ச்சி பொறுக்க முடியாதவர்கள், நாங்கள் தனித்தன்மையோடு இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தன் எங்கள் மீது இது போன்ற அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்'' என்பது நாம் தமிழர் கட்சியினரின் வாதமாக இருக்கிறது.

இந்தநிலையில், தன் மீது முன்வைக்கப்படும் இந்த விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கும் விதத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மிகக் கடுமையான ஸ்கிரிப்ட் ஒன்றை சீமான் தயார் செய்துவருவதாகவும், அது வரும் 7-ம் தேதி வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தில் அவரது கோபக்குரலில் வெளிப்படும் எனவும் தகவல்கள் கசிகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு