Election bannerElection banner
Published:Updated:

கொரோனா தடுப்பூசி: தட்டுப்பாட்டின் பின்னணி என்ன?

கோவாக்ஸின்
கோவாக்ஸின்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதன் பின்னணி என்ன... சீரம் பயோடெக் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் விரைவாகச் செயல்படவில்லையா?

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அதன் உச்சமாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருக்கிறது. இந்தச் சூழலில் கொரோனா நோய்ப் பரவலுக்காக வழங்கப்படும் தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம், தட்டுப்பாடுகள் மக்களை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் சீரம், பயோடெக் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் தவிர்த்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்புக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் தவறான நடவடிக்கைகள் மூலமே தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்த்தரப்பில் குற்றம் சுமத்தும் அதே வேளையில் `இந்தியாவில் தேவையான தடுப்பூசிகள் இருப்பில் இருக்கின்றன.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தயாரிப்பு நடவடிக்கையையும் துரிதப்படுத்தியுள்ளோம். தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது என்பது போன்ற மாயையை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே பரப்புகின்றன’ என்று பா.ஜ.க தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள்; நிரம்பும் மருத்துவமனைகள்; தடுப்பூசி தட்டுப்பாடு... கொரோனா அலர்ட்!

இந்திய நிறுவனங்களான சீரம், பயோடெக் ஆகியவை கொரோனா தடுப்பூசிகளைக் குறைவாக தயாரிக்கின்றவா, உண்மையில் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ``இந்தியாவில் 140 கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது ஏழு கோடி தடுப்பூசிகள்தான் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி வேறு செய்யப்பட்டன. இதனால் தடுப்பூசிப் பற்றாக்குறை கூடுதலாக ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தவறில்லை. ஆனால், வணிக நோக்கத்தில் கொடுத்ததுதான் தவறு.

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்‌ஸின் என்ற தடுப்பூசி தயாரிப்புக்கு அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொடுத்தது இந்திய மருத்துவ கூட்டமைப்பு, ஆராய்ச்சிக்கான வைரஸ் கொடுத்தது புனேவில் இருக்கும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையம். தயாரிப்புக்கான செலவு தொகையாக 36,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. இப்படி எல்லாமே கொடுத்து மத்திய அரசு, மருந்து தயாரிப்பை ஏன் சீரம், பயோடெக் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்... இந்த இரண்டு நிறுவனங்களிலிருந்தும் ஒரு நாளுக்கு 3 லட்சம் முதல் 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்தான் தயாரிக்க முடியும். இந்தியாவில் இவற்றைவிடக் கூடுதலாக உற்பத்தி செய்யும் திறன் உடைய பொதுத்துறை மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் பல இருக்கின்றன. அவற்றிடமெல்லாம் தயாரிப்பு அனுமதியைப் பகிர்ந்து அளிக்கும்போது ஒரு நாளில் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கை ஏழு கோடியிலிருந்து 15 கோடியாக அதிகரிக்குமே... தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடம் இருக்காதே!

மருத்துவர் ரவீந்திரநாத்
மருத்துவர் ரவீந்திரநாத்

ஆனால், வணிக நோக்கத்துடன், கார்ப்பரேட்டுகளின் நலனிலே இந்த மத்திய அரசு அக்கறையாக இருப்பதால் தடுப்பூசி தயாரிப்பில் அக்கறை செலுத்த மாட்டேன் என்கிறது. சீரம், பயோடெக் நிறுவனங்களுக்குப் போட்டியாக யாரும் உருவாகிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறது.

ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்க இந்தியாவில் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் கடந்த மாதமே அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டு தற்போது கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கேட்டபோதே அனுமதி கொடுத்திருந்தால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஐந்து நிறுவனங்கள் மூலம் 85 கோடி டோஸ்களை இந்த நேரத்துக்கெல்லாம் அவர்கள் உற்பத்தியைத் தொடங்கியிருப்பார்கள். அதில் பாதி இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும்.

தடுப்பூசி போடும் நிகழ்ச்சி
தடுப்பூசி போடும் நிகழ்ச்சி

ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஐந்து நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்கள் என்றால் ஏன் இந்திய மருந்தைத் தயாரிக்கக் கூடுதல் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கக் கூடாது? அப்படிச் செய்திருந்தால் நமக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடே ஏற்பட்டிருக்காது” என தடுப்பூசி தட்டுப்பாட்டின் பின்னணியை விளக்கினார்.

கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் குறித்து தமிழக பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம். “பத்துக்கோடிப் பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால், தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்ற நாடுகளைப்போல இந்தியாவிலும் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகியிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்களும் போதுமான அளவில் இந்தியாவிடம் இருக்கின்றன. இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை தயாரித்துவருகின்றன. அதுமட்டுமல்லாமல் விரைவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பும் தொடங்க உள்ளது.

உற்பத்தியை விரைவுபடுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கொரோனா பரவலைவிட அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு வேகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. மாநில அரசுகள் எங்கெல்லாம் மத்திய அரசுடன் ஒத்துழைத்து கொரோனா தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்துகிறதோ அங்கெல்லாம் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போய்ச்சேரும். மகாராஷ்டிரா போன்று மத்திய அரசுடன் இணக்கம் காட்டாத மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறது. கொரோனா-வுக்கு போடப்படும் ரெமிடெசிவர் என்ற மருந்து அனைத்து மாநிலங்களிலும் போதுமான இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை
நா.ராஜமுருகன்

டெல்லி போன்ற ஒரு சில இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கத்தான் செய்கின்றன. அது மாநில அரசுகளின் நிர்வாக முறைகேடு காரணமாக ஏற்படுவதுதான். இப்போது கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களும் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து உரிமை முறையில் தடுப்பூசி தயாரிக்க ஒப்புதல் வாங்கியிருக்கிறார்கள். மருந்து தயாரிக்க அனைவருக்கும் உரிமை இருக்கு என்றாலும் மத்திய அரசின் அனுமதியை வாங்க வேண்டும். அதற்குப் பலகட்ட பரிசோதனை முடிவுகளை நடத்தி, அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசைப் பொறுத்தவரை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே மாதிரிதான் கையாளுகின்றது. இதில் எந்த அரசியலும் இல்லை என்பதுதான் உண்மை” என விளக்கம் அளித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு