Published:Updated:

சிவகங்கை கிராபைட் நிறுவனம் தனியார் வசம் போகிறதா? - உண்மை நிலவரம் என்ன?!

சிவகங்கை கிராபைட் ஆலை

30 வருடங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிராபைட் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க போகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஊழியர்களும், சிவகங்கை மக்களும் எழுப்பி வருகிறார்கள்.

சிவகங்கை கிராபைட் நிறுவனம் தனியார் வசம் போகிறதா? - உண்மை நிலவரம் என்ன?!

30 வருடங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிராபைட் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க போகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஊழியர்களும், சிவகங்கை மக்களும் எழுப்பி வருகிறார்கள்.

Published:Updated:
சிவகங்கை கிராபைட் ஆலை

எழுதுகிற பென்சில் தொடங்கி விமானத்தின் முக்கிய பாகங்கள், தங்கத்தை உருக்க, மொபைல்போன் ஸ்கிரீன் தயாரிக்க என பல தேவைகளுக்கு பயன்படும் கிராபைட்டை தோண்டி எடுக்க தமிழக அரசின் கனிம நிறுவனத்தால் (டாமின்) 30 வருடங்களுக்கு முன் சிவகங்கையில் ஆலை தொடங்கப்பட்டது. உலக அளவில் சில நாடுகளிலும் இந்தியாவில் சில மாநிலங்களில் கிடைத்தாலும் சிவகங்கையில் கிடைக்கும் கிராபைட் முதல் தரமானது என்கிறார்கள்.

கிராபைட் ஆலை
கிராபைட் ஆலை

வறட்சி மிகுந்த சிவகங்கை மாவட்டத்தில் உடையநாதபுரம், குமாரப்பட்டி, புதுப்பட்டி, கோமாளிப்பட்டி பகுதிகளில் கிராபைட் இருப்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வில் தெரியவந்தது. கிராபைட் தொழிற்சாலை திறந்தால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், அதன் மூலம் உபதொழில்கள் வளர்ந்து சிவகங்கை தொழில் நகரமாக மாறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு 1988-ல் அடிக்கல் நாட்டப்பட்டாலும் 1994-ல்தான் உற்பத்தி தொடங்கியது . உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவகங்கை கிராபைட்டுக்கு நல்ல பெயர் இருந்தாலும், இதை பெரிய அளவில் கொண்டுபோக டாமின் நிறுவனம் முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. கிராபைட் சார்ந்த உபதொழில்களையும் கொண்டுவரவில்லை. ஆலை தொடங்கியபோது எப்படி இருந்ததோ அதே 200 தொழிலாளர்களுடன் இப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு கனிம நிறுவன தொழிற்சங்க சங்க நிர்வாகி கார்த்திக்கேயனிடம் பேசினோம், ``நல்ல தரமான கிராபைட் இங்கு எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்னும் பல வருடங்களுக்கு எடுக்கும் அளவுக்கு இங்கு கிராபைட் உள்ளது. அதன் தேவையும் அதிகமுள்ளது. ஆனால், எடுக்கும் பரப்பளவை அதிகரிக்காமலும், ஊழியர்களை அதிகப்படுத்தாமலும் ஆமை வேகத்தில் நிறுவனத்தை கொண்டு செல்கிறார்கள். தா.கிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது இப்பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை, மனித சக்தி அதிகமுள்ளது, அந்த அடிப்படையில் கிராபைட் ஆலையை பெரிய தொழிற்சாலையாக மாற்றி உபதொழில்களை கொண்டுவரவேண்டும் என்று அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் வலியுறுத்தினார். அவரும் செய்ய முன்வாந்தார். ஆனால், அப்போதிருந்து கனிம நிறுவன உயர் அதிகாரிகள் ஏதாவது காரணம் சொல்லி கிராபைட் ஆலையை விரிவுபடுத்தும் திட்டங்களை கிடப்பில் போட்டனர்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

நிர்வாக குறைவால் கிராபைட் ஆலை மோசமாக சென்றுகொண்டிருந்தபோது டாமின் சேர்மனாக பஷீர் அகமது.ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்று சிறப்பாக இயங்க வைத்தார். ஒரு மெட்ரிக் டன்னுக்கு முப்பதாயிரம் ரூபாய் கூடுதலாக விலை வைத்ததால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. 2011-ல் அவர் மாற்றப்பட்ட பின்பு வந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஏற்கனவே இருந்ததை விட குறைவான விலைக்கு கொடுத்ததால் 2011 முதல் 2017 வரை 120 கோடி வரை நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. தேவையற்ற இயந்திரங்களை வாங்கியும், விதிகளை மீறி தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள்.

முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் பற்றி ஆதாரத்துடன் 2020-ல் விஜிலென்சில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. மாறாக எனக்கு இட மாறுதல் அளித்தார்கள். இங்கிருந்து குறைந்த தொகைக்கு வாங்கி செல்லும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் அதை ரீபிராசஸ் செய்து ஒரு டன் இருபது லட்ச ரூபாய்க்கு விற்கிறார்கள். தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி இந்த ஆலையை விரிவுபடுத்தி உப தொழில்களை கொண்டுவந்து இன்னும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முன்வர வேண்டும். நல்ல லாபம் தரும் இந்த கிராபைட் ஆலையை தனியாரிடம் விட்டுவிடுவார்களோ என்ற அச்சம் தொழிலாளர்களிடம் உள்ளது.'' என்றார்.

அ.தி.மு.கவைச் சேர்ந்த சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதனிடம் "ஆலையை விரிவுபடுத்த ஜெயலலிதா ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது கிராபைட் தொழிற்சாலையை விரிவுபடுத்துவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் பேசுவார். செய்ததில்லை.

சிவகங்கை எம்.எல்.ஏ  செந்தில்நாதன்
சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன்

இப்போது எம்.பி.யாக இருக்கும் அவர் மகன் கார்த்தி சிதம்பரமும் கண்டுகொள்ளவில்லை. சுற்றுச்சுழல்துறையால் 2018-ல் ஆலை இயங்க அனுமதி மறுக்கப்பட்டபோது 2020-ல் அ.தி.மு.க ஆட்சியில்தான் மீண்டும் அனுமதி பெற்று இயங்க ஆரம்பித்தது. ஆலையை விரிவுபடுத்த சமீபத்தில் சட்டசபையில் கோரிக்கை வைத்திருக்கிறேன். கனிம வளத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைப்பேன். தனியார் வசம் செல்ல விட மாட்டேன் " என்றார்.

கிராபைட் தொழிற்சாலை மேலாளர் ஹேமந்த்குமாரிடம் பேசியபோது, ''இப்பகுதியில் கிராபைட் அதிகம் இருப்பது உண்மை. ஆனால், ஆழத்தில் உள்ளது. பெரிய அளவில் சுரங்கம் தோண்டி அதை எடுக்க முடியாது. காரணம், கிராபைட் நிலப்பரப்பில் ஒரே சீராக அமைந்திருக்கவில்லை. இன்னும் விரிவாக்கம் செய்யவேண்டுமென்றால் இப்போதிருப்பதைவிட கூடுதல் நிலங்களை ஆர்ஜிதப்படுத்த வேண்டும். அதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிவகங்கை கிராபைட் தரமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஹேமந்த்குமார்
ஹேமந்த்குமார்

ஆனாலும் மத்திய, மாநில சுரங்கத்துறை, சுற்றுச்சூழல் துறைகளின் விதிகளை பின்பற்றி ஒரு நாளைக்கு எவ்வளவு எடுக்க அனுமதித்துள்ளார்களோ அவ்வளவுதான் எடுக்க முடியும். வருகிற காலங்களில் விலையை அதிகரித்து விற்பனை செய்ய உள்ளோம். உபதொழில்களை கொண்டுவர டாமின் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

உபதொழில்களை செய்வதற்கு ஜாயின்ட் வெஞ்சராக தனியார்களை இணைத்துக்கொள்ளலாமே தவிர முழுக்க தனியார் வசம் செல்ல வாய்ப்பில்லை. இடையில் சில காரணங்களால் சில வருடங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் இப்போது நிறுவனம் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது.'' என்றார்.

சிவகங்கை கிராபைட் ஆலை
சிவகங்கை கிராபைட் ஆலை

சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் கேட்டோம், ''தனியார் வசம் போக வாய்ப்பே இல்லை. கோமாளிப்பட்டி கிராபைட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்படுள்ளது '' என்றார்.

''நல்ல வருவாய் தரக்கூடிய சிவகங்கை கிராபைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படுமா? உபதொழில்கள் கொண்டு வரப்படுமா? தனியாரிடம் சென்றுவிடும் என்ற தகவல் உண்மையா? என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டோம்,

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

''சிவகங்கை கிராபைட் தொழிற்சாலை எனது துறையின் கீழ் வரவில்லை. கனிம வளத்துறையின் கீழே வருகின்றது. குறிப்பாக டாமின் கீழே உள்ளது. அத்துறை அமைச்சரிடம் பேசவும்'' என்று முடித்துக்கொண்டார்.

கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். மெசேஜ் அனுப்பினோம். எனினும் நமது அழைப்பு ஏற்கபடவில்லை. இந்த நிறுவனம் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கும் நிலையில், அதனை உரிய பரீசீலனைக்குப் பின் பதிவிட தயாராக இருக்கிறோம்.!