`மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்’ என 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திமுக வழக்கு தொடுத்து, வாதாடி வெற்றிபெற்றதால், தமிழகத்தைத் தாண்டி வட மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான நலச்சங்கங்கள், சமூகநீதி பேசும் அரசியல் கட்சிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டின. #thanksMKS என்ற ஹேஷ்டேக் அப்போது நாடு முழுவதும் ட்விட்டரில் டிரெண்டானது. இந்த வெற்றியைக் கொண்டாடும்விதமாக "சமூகநீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்" என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜனவரியில், திமுக சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது.
தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, டெரிக் ஓ பிரையன், சகன் புஜ்பால் எனப் பல தேசியக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினர். அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அந்தக் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தேசியக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட செய்ய முன்வராத, இத்தகைய ஒருங்கிணைப்பை மாநிலக் கட்சியான திமுக மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது அப்போதே பேசுபொருளானது. அன்றைய கருத்தரங்கில் முதலமைச்சர் கூறியதுபோல, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகளைக்கொண்டு அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பை திமுக உருவாக்கியிருக்கிறது.

இதன் முதல் தேசிய மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தியா கேட் அருகிலுள்ள கஸ்தூரிபா காந்தி மார்க் பகுதியில் மாலை 4:30 மணிமுதல் 7 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசவிருக்கின்றனர்.
இந்திரா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை பல பிரதமர்களோடு நெருக்கமாக இருந்தவர் கருணாநிதி. மத்தியில் கூட்டணி அமைப்பது, ஆட்சியில் பங்கெடுப்பது எனப் பல வியூகங்களை சர்வ சாதாரணமாக வகுத்தவர் கருணாநிதி. ஆனால், அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பை ஏற்படுத்த கருணாநிதிகூட முயற்சி செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் இத்தகைய கூட்டமைப்பை ஏற்படுத்தி, பாஜக-வுக்கு எதிரான சிந்தனைகொண்டவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே தனது பிறந்தநாள் விழாவில் தேசியத் தலைவர்களை பங்கெடுக்கச் செய்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேசியத் தலைவர்களை திருவாரூருக்கு அழைத்து பிரமாண்ட மாநாடு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார். தோள் சீலை போராட்டம், வைக்கம் போராட்டம் உள்ளிட்ட மிக முக்கியப் போராட்டங்களை நினைவுகூர்ந்து கேரள அரசால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இவையெல்லாம் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு அடித்தளம் இடுகிறாரா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம். “காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்து வெற்றிபெற்றால், ராகுல்தான் பிரதமர் ஆவார் என்பதால் கூட்டணியில் இணைய சில கட்சிகள் கடந்தகாலத்தில் தயங்கின. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. புலனாய்வு அமைப்புகளை வைத்து பாஜக கொடுக்கும் நெருக்கடியால் அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணையவேண்டியது அவசியம் என்று உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ராகுலின் தகுதிநீக்கத்தை கெஜ்ரிவால், மம்தா என அனைவரும் கண்டித்திருக்கிறார்கள். காங்கிரஸிலும் மாற்றம் தெரிகிறது. ராகுல், பிரியங்காவை முன்னிறுத்தாமல் மல்லிகார்ஜுன கார்கே முன்னிறுத்தப்படுகிறார்.

இவற்றோடுதான் ஸ்டாலினின் முன்னெடுப்புகளையும் பொருத்திப் பார்க்கவேண்டியிருக்கிறது. பி.ஜே.டி., ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளைக்கூட அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் மத்தியில் இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். சமூகநீதியில் தங்களுக்கு இருக்கும் அக்கறை, பாஜக-வுக்கு இல்லை என்பதைக் காட்ட இந்தக் கூட்டமைப்பைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இதை கருணாநிதியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இன்றைக்கு ஸ்டாலின் சந்திக்கிற பிரச்னைகளை அன்றைக்கு கருணாநிதி சந்திக்கவில்லை. எனவே, தேர்தலை மட்டும் மனதில்வைத்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவது மட்டுமே போதாது. மாநில உரிமை, சமூகநீதி, கூட்டாட்சி சார்ந்து கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டியதும் ஸ்டாலினுக்கு இருக்கும் சவால். இந்த முன்னெடுப்பும் அப்படித்தான் தெரிகிறது” என்றார்.
இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் திமுக-வின் நிலைப்பாடு. இதில் எப்போதும் மாற்றமில்லை. தேசிய அரசியலில் எங்கள் தலைவர் கவனம் செலுத்துவது என்பது பிரதமர் பதவிக்காக இல்லை. மத்தியில் இன்றைய சூழல் எப்படியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கிறன. ஆனால், தமிழகத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் சமூகநீதி பற்றிய தெளிவான புரிதல் இல்லை. தமிழகம் மட்டும்தான் `நீட்’டை எதிர்க்கிறது, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது, முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. முதலில் அரசியல் கட்சிகளுக்கு சமூகநீதி பற்றிய புரிதல் இருந்தால்தான் அதை மக்களிடம் பேசுவார்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள்.

அதற்காகத்தான் இந்த முயற்சியை ஸ்டாலின் எடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் தனியாகக் கத்திக்கொண்டிருந்தால் போதாது. பல மாநிலங்களிலிருந்து ஒரே குரலில் எதிர்க்கும்போது அதன் வலிமை கூடும். அரசியல்ரீதியாகப் பார்த்தாலும், பாஜக-வை வீழ்த்த வேண்டுமென்றால், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றுசேர்க்கவேண்டியது அவசியம். காங்கிரஸோடு சேரத் தயங்கும் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றோர்கூட எங்கள் தலைவருடன் இணக்கமாக இருக்கிறார்கள். எனவே, திமுக முயன்றால் பலமான அணியை உருவாக்க முடியும். அதற்கான கதவுகளையும் இத்தகைய முயற்சிகள் திறக்கக்கூடும்” என்கின்றனர்.