Published:Updated:

அயோத்தி விவகாரம்... கருணாநிதி பாணியைப் பின்பற்றினாரா ஸ்டாலின்?

ஸ்டாலின் - கருணாநிதி
ஸ்டாலின் - கருணாநிதி

"ஒரு மோசமான செயலைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதனால் உண்டாகும் பின்விளைவுகளுக்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்'' என கடுமையாக எச்சரித்தார் கருணாநிதி.

டிசம்பர் 5, 1992... ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் அயோத்தியில் குழுமிவிட்டார்கள். நாடு முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. தமிழகத்திலும் அதன் தாக்கம் இருந்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்டு தமிழகம் முழுவதும் அவர்களுக்கு எதிராக, ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. முன்னாள் முதல்வரும் அப்போதைய தி.மு.க தலைவருமான கருணாநிதி,

"கரசேவகர்கள் என்றால் யார், கடவுளுக்கு சேவை செய்பவர்களா இல்லை அமைதியின்மைக்கான விதையைத் தூவுபவர்களா?'' என அயோத்தியில் குழுமியிருப்பவர்களுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை அன்றைய முரசொலியில் பதிவுசெய்தார்.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அதோடு மட்டுமல்லாமல், "ராமர் இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக அங்கே பிறந்தார் என்று சொல்கிறார்கள். அதை யார் பார்த்தது, எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அதைப்பற்றி எழுதியது யார்? இதுதான் ராமர் பிறந்த இடம் எனச் சொல்லி இஸ்லாமியர்களின் வரலாற்றைத் தகர்ப்பது எப்படி சரியாகும்?

அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என நீங்கள் சொன்னால், அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் நீங்கள் கோயில் கட்டுவீர்கள் என்றால் நிச்சயமாக அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தகவல் கிடைத்த அடுத்த நிமிடம், கருணாநிதி என்னைத் தொடர்புகொண்டு பேசினார். அவரது குரலில் அவ்வளவு பதற்றம். எங்களுக்கு அவருடன் ஏற்பட்ட ஒரே விரிசல், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணியில் தி.மு.க இடம்பெற்றபோது ஏற்பட்டது. அப்போது நாங்கள் எதிரணியில் இருந்தோம் என்றாலும், அப்போதும்கூட மாதம் ஒருமுறை எங்களை அழைத்துப் பேசுவார். தன்னாலானதை முழு மனதோடு செய்வார்.
காதர் மொய்தீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
கருணாநிதி
கருணாநிதி

அடுத்தநாள், மதியம் 12:20 மணிக்கு, 195 குழுக்கள் அடங்கிய மத்திய துணை ராணுவப்படையினரையும் மீறி, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு கடுங்கோபத்தோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எதிராகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, அதைத் தடுக்கத் தவறிய மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

"ஒரு மோசமான செயலைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதனால் உண்டாகும் பின்விளைவுகளுக்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்'' எனவும் கடுமையாக எச்சரித்தார்.

சில வருடங்கள் கழிந்தன... தொடர்ந்து அவர் யாரை எதிர்த்தும் மதவாத சக்திகள் என அடையாளம் காட்டியும் வந்தாரோ, அதே பா.ஜ.க-வுடன் 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தார். அது அப்போது கடும் விவாதத்தைக் கிளப்பியது. அதுவரை நண்பர்களாக இருந்த பலர் அவருக்கு எதிரிகளாயினர். அவரைக் கடுமையாக விமர்சித்தனர். அப்போது, "ராமர் கோயில் விவகாரத்தைக் கையில் எடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை பா.ஜ.க-விடம் வாங்கிய பின்னர்தான் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்'' என விளக்கம் அளித்தார் கருணாநிதி.

"பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம். அங்குதான் கோயில் கட்டவேண்டும்'' என மீண்டும் பா.ஜ.க-வினர் சிலரும் இந்து அமைப்புகளும் குரலெழுப்பியபோது, "ராமர் எனும் கடவுள் இருந்ததே இல்லை. அது ஒரு புராணக்கதை மட்டுமே'' என்று கூறி, கடுமையான எதிர்ப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானார் கருணாநிதி. கூட்டணியில் இருந்துகொண்டே அவர் இப்படிக் கருத்து தெரிவித்ததற்கு அத்வானி முதல் பல தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அயோத்தி தீர்ப்பு... தி.மு.க வரவேற்றதா... ஏற்றுக் கொண்டதா? சர்ச்சையாகும் ஸ்டாலின் அறிக்கை!
வரவிருக்கும் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு, பாரதிய ஜனதா கட்சி, அயோத்தி ராமர் கோயில் பிரச்னையை மீண்டும் கையில் எடுத்து உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கும் என்று தெரிவதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் ராம் லீலா நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதில் இருந்து, ராமர் கோயில் விவகாரம் மீண்டும் தலைதூக்கும் என்று தெரிகிறது.
கருணாநிதி (17.10.2016 என்று வெளியிட்டுள்ள அறிக்கையில்)

அப்போது பேசிய கருணாநிதி, "திராவிடர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே ராமாயணம் என்று கூறிய ஜவஹர்லால் நேருவைவிடவும், ராமரைக் காக்க வருபவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல" என்று அனைவருக்கும் பதிலடி கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என சிலர் குரலெழுப்பியபோது, "நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து தி.மு.க வாக்களிக்கும். அயோத்தி விவகாரம் இந்த நாட்டில் மிக முக்கியமான பிரச்னையே அல்ல. அதைவிட முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இதனால் ராமர் கோயில் பற்றி அதிகம் கவலைப்படவோ, அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவோ தேவையில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டப்படி வாஜ்பாய் அரசு நடக்கும் என்று நம்புகிறோம்'' என எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசினார்.

கருணாநிதி - வாஜ்பாய்
கருணாநிதி - வாஜ்பாய்

சட்டமன்றத்திலும், "பிரச்னைக்குரிய அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டால் அதை தி.மு.க அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது'' என கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுப்பராயன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தார். இப்படி, தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தாலும், ராமர் கோயில் விவகாரத்தில் தொடர்ந்து தன் எதிர்ப்பை பதிவு செய்தே வந்தார் கருணாநிதி.

2004-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். அப்போது, ராமேஸ்வரத்தில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அப்போது, ராமர் பாலம் உள்ள பகுதியில் சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என பா.ஜ.க-வும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது "ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று ராமர் பாலத்தைக் கட்டினார்... அதற்கு ஆதாரம் இருக்கிறதா?’’ என்று கேள்வி எழுப்பினார் கருணாநிதி. அது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. தமிழகத்தில் பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே கலவரம் மூண்டது.

கருணாநிதியின் இந்தப் பேச்சை அடுத்து விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னாள் எம்.பி.யுமான ராம்விலாஸ் வேதாந்தி, `ராமரைப் பற்றி இழிவாகப் பேசிய கருணாநிதியின் தலையையும் நாக்கையும் துண்டித்துக் கொண்டு வருபவருக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து பா.ஜ.க-வினருக்கும் தி.மு.க-வினருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. தமிழகப் பேருந்துகள் இரண்டு கர்நாடகாவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பெங்களூரில் வசித்துவந்த, கருணாநிதியின் மகள் செல்விக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

ஸ்டாலின் - ஆற்காடு வீராசாமி
ஸ்டாலின் - ஆற்காடு வீராசாமி

அப்போதைய தி.மு.க பொருளாளரும் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, "தமிழக முதல்வரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்று செய்தி வெளிவந்துள்ளது. இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிடக் காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். இத்தகைய செயல்களைச் செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக்கொண்டு பா.ஜ.க-வினரும், விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் தி.மு.கழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்" எனக் காட்டமாக ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை, ஆற்காடு வீராசாமியின் வழியாக கருணாநிதி விடும் எச்சரிக்கையாகவே அனைவரும் பார்த்தனர். அதற்குப் பிறகே பிரச்னைகளும் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தன.

கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்
"ஒருமுறை பேட்டி ஒன்றில் ராமர் பாலம் குறித்த சர்ச்சையான கருத்தைக் கூறிவிட்டார். அந்த சர்ச்சை வலுத்து மீண்டும் அதே கேள்வி அவரை நோக்கிவர கொஞ்சமும் தயக்கமில்லாமல், தன் கொள்கையிலிருந்து மாறுபடாமல் 'ராமர் பாலம் கட்டினாரா... அவர் என்ன இன்ஜினீயரா?' என்று கூறிவிட்டு நகர்ந்தார். இந்தக் கொள்கை மாறா கருணாநிதியைப் போல் ஒரு தலைவர் நமக்குக் கிடைக்கப்போவதில்லை."
சல்மா, தி.மு.க மகளிரணி துணைப் பொதுச்செயலாளர்.

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டக் கூடாது'' என்கிற கருத்தில் இறக்கும்வரை மிகத்தீர்க்கமாக இருந்தார் கருணாநிதி. 

அவரின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகும் கூட ராமர் கோயில் விவகாரத்தில் கருணாநிதியின் பாணியையே கடைப்பிடித்தார்.

``உள்ளாட்சித் தேர்தல்... திட்டம் என்ன?'' கமல், சீமான் கட்சியினரின் பதில்!

மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிவந்த முரசொலியில்,

"நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு - பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான எந்தவித சான்றுகளும் இல்லாதபோது அநியாயமாக மசூதியை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அப்போது உ.பி-யின் முதல்வராக இருந்த கல்யாண் சிங், மசூதியை இடித்துத் தள்ளியதை பெருமையுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

குற்றவாளிகள் யார் என்பதற்கு வெளிப்படையாக நிறைய சான்றுகள் உள்ளன என்பதை நீதிமன்றம் நன்கு அறியும். ஆனால், அவர்களைத் தண்டிக்க முடியாமல் 25 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை நீதிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் 9 மாதங்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் `நல்ல’ தீர்ப்பை வழங்க வேண்டும் என நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பேசாதிருந்தால், நாட்டின் அமைதிகெட்டு ஒவ்வொரு வீடும் தீக்கிரையாகும்'' என தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தீர்ப்பு, கடந்த சனிக்கிழமை வெளியானது. `சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

தீர்ப்பு
தீர்ப்பு

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவுக்குரல்களும் எதிர்ப்புக்குரல்களும் ஒருசேர எழுந்தன. தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகள் தீர்ப்பை வரவேற்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டன. மற்ற கட்சிகளைவிட தி.மு.க இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதுதான், பலருக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது. 

தி.மு.க தலைவர் ஸ்டாலின், அயோத்தி தீர்ப்பு குறித்து வெளியிட்ட அறிக்கை
'' உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பு வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், மதநல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்."
ஸ்டாலின் - கருணாநிதி
ஸ்டாலின் - கருணாநிதி

`ஸ்டாலின் அறிக்கையானது. அயோத்தி விவகாரத்தில் தி.மு.க இதுவரை கடைப்பிடித்த கொள்கையில் இருந்து சற்று பின்வாங்கியதைத்தான் வெளிப்படுத்துகிறது. குறைந்தபட்சம் தீர்ப்பில் உள்ள சில பிழைகளையாவது தி.மு.க குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அதை ஸ்டாலின் செய்யாமல் தவிர்த்ததை இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சியாகவே பார்க்க முடிகிறது' என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், தி.மு.க தரப்போ, "இரு தரப்பும் ஏற்கும்போது ஏன் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்த வேண்டும். சமூக அமைதியை அடிப்படையாகக் கொண்டே இப்படியான அறிக்கையை தி.மு.க வெளியிட்டது. சமூக அமைதியை வலியுறுத்தி ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டாரே தவிர, எந்தச் சமூக மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் வெளியிடவில்லை'' என்று பதிலளித்தது. எனினும், அயோத்தி விவகாரத்தை அரசியல் லாபங்களைத் தாண்டி கருணாநிதி கையாண்டதைப் போல் ஸ்டாலின் கையாளவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

`அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை!’ -இப்போது எப்படி இருக்கிறது அயோத்தி? #VikatanInAyodhya

தீர்ப்பு வெளியானபோதும் அதற்கு தி.மு.க-வின் ரியாக்ஷனின்போதும், "இப்போது கருணாநிதி இருந்திருந்தால்'' என்கிற குரலே பெரும்பாலான இடங்களில் ஒலித்தது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்த வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலிப்பதைத் தவிர்க்கவே முடியாது.

அடுத்த கட்டுரைக்கு