Published:Updated:

தாக்குதல் முதல் தடை வரை... மம்தா மீது அனுதாபம் அதிகரிக்குமா?

காலில் அடிபட்டதால் சக்கர நாற்காலியில் பிரசாரம் மேற்கொண்டுவரும் மம்தா பானர்ஜி மீது மக்கள் மத்தியில் அனுதாபம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மம்தா பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததன் காரணமாக, அவர் மீதான அனுதாபம் மேலும் அதிகரிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணியைத் தோற்கடித்துவிட்டு, 2011-ல் ஆட்சியில் அமர்ந்தார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. கடந்த பத்தாண்டுகளாக அவரது ஆட்சிதான் நடைபெறுகிறது. தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர் ஹாட்ரிக் அடித்துவிடுவார். ஆகவே, மூன்றாவது முறையாக வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக வேலை செய்துவருகிறார் மம்தா பானர்ஜி.

மம்தா
மம்தா

2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் மூன்று எம்.எல்.ஏ-க்களைப் பிடித்த பா.ஜ.க., தற்போது அங்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உதாரணமாக, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்18 இடங்களை பா.ஜ.க வென்றது. எனவே, இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க துடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருப்பது பா.ஜ.க-வுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது

பா.ஜ.க கொடுத்துவரும் கடும் போட்டியைச் சமாளிப்பதற்கு மம்தா போராடிவருகிறார். பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத், சினிமா பிரபலங்கள் என பெரும் படையே அங்கு களமிறங்கி பா.ஜ.க-வுக்காக வேலை செய்கிறது. அவர்களை எதிர்த்து தனி மனுஷியாகப் போராடுகிறார் என்ற இமேஜ் மம்தாவுக்கு இருக்கிறது. மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்தவரும் மம்தாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இடம்பெற்றிருந்தவருமான சுவேந்து அதிகாரி பா.ஜ.க-வுக்குத் தாவினார்.

மம்தா, மோடி
மம்தா, மோடி

அவரும் மம்தாவும்தான் நந்திகிராமில் மோதுகிறார்கள். இந்த நிலையில்தான், நந்திகிராம் தொகுதியில் மார்ச் 10-ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜிக்கு காலில் காயம் ஏற்பட்டது. காரில் ஏறியபோது அடையாளம் தெரியாத சிலர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக மம்தா குற்றம்சாட்டினார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க-வினர் மறுத்தனர். காலில் காயமடைந்த பிறகு மாநிலம் முழுவதும் சக்கர நாற்காலியில் சென்று அவர் பிரசாரம் செய்துவருகிறார். அது மக்கள் மத்தியில் மம்தா மீது அனுதாபத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கமாகவே மேற்கு வங்க தேர்தல்களம் பதற்றம் மிகுந்து காணப்படும். இந்த முறை, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க-வும் தீவிரமாக இருப்பதால் வழக்கத்தைவிட கூடுதல் பதற்றம் நிலவுகிறது. அதனால் வன்முறை சம்பவங்களும் நிகழ்கின்றன. அந்த வன்முறை சம்பவங்களுக்கு இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றனர்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்துக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அந்தளவுக்கு அங்கு பதற்றம் நிலவுகிறதா, அல்லது ஒரே கட்டமாகவோ இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவோ தேர்தலை நடத்தியிருந்தால், அங்கு வன்முறைகள் குறைந்திருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

இரண்டு தரப்பினரும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. ஆத்திரமூட்டும் பேச்சுகளை இரண்டு தரப்பினருமே பேசிவருகிறார்கள். பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் குற்றம் சாட்டிவரும் மம்தா பானர்ஜி, மத்தியப் பாதுகாப்புப் படை மீதும் புகார் தெரிவித்துவருகிறார். தற்போது அங்கு 4-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. 4-ம் கட்ட வாக்குப்பதிவின்போதுதான் அங்கு மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

கூச்பிஹார் மாவட்டத்தின் சிதட்டால்குச்சி வாக்குச்சாவடியில் மத்தியப் பாதுகாப்புப்படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். பாதுகாப்புப்படையினரை சிலர் முற்றுகையிட்டு துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் பேச்சுதான் காரணம் என்ற அமித் ஷா குற்றம்சாட்டியிருக்கிறார். தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா, சர்ச்சைக்குரிய வகையில் மத மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது. அவரது அந்தப் பேச்சு மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் என்று கூறி தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அத்துடன், மத்திய பாதுகாப்புப்படைக்கு எதிரான மம்தாவின் பேச்சு மற்றும் வகுப்புவாதப் பேச்சுக்காக மம்தா பானர்ஜி 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.

மம்தா
மம்தா

ஒரு மாநிலத்தின் முதல்வர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் விதித்த அதிரடித் தடையானது, மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாமல், நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. பா.ஜ.க-வின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், இந்தத் தடை ஒரு சர்வாதிகாரத்தனம் என்றும் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான குணால் கோஷ் விமர்சித்தார்.

அரசுக் கட்டுப்பாட்டில் கோயில்கள்; இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு - விடுவித்த உத்தரகாண்ட் முதல்வர்!

பா.ஜ.க மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்வது தன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக பெண்கள் மத்தியில் அனுதாபம் உண்டாகும் என்றும் மம்தா கணக்குப்போடுவதாக சொல்லும் பா.ஜ.க-வினர், மம்தாவின் கணக்கு தப்புக்கணக்காகிவிடும் என்று சொல்கிறார்கள்.

சாலையில் செல்பவர்களிடம் சகஜமாகப் பேசுவது, திடீரென்று காரை விட்டு இறங்கி பொதுமக்களிடம் கைகுலுக்குவது, சாதாரணமாக கடைகளுக்குச் செல்வது என்பதெல்லாம் மம்தாவின் ஸ்டைல். சக்கர நாற்காலியில் செல்வதால் இதுபோன்ற அவரது நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பா.ஜ.க நினைக்கிறது.

மம்தா
மம்தா

மேற்கு வங்கத்தில் இன்னும் 4 கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மம்தா மீது மக்கள் மத்தியில் உண்மையிலேயே அனுதாபம் ஏற்பட்டிருக்கிறதா என்பது மே 2-ம் தேதி தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு