Published:Updated:

`சூழலியல் குற்றங்களின் தலைநகரமாகிறதா தமிழ்நாடு?’ - கேள்வியும் அரசின் பதிலும்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சூழலியல் சார்ந்த குற்றங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. சூழலியல் குற்றங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்... அரசு நடவடிக்கை எடுக்குமா? ஓர் அலசல்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டைவிட 28% அதிகரித்திருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதில் 61,767 வழக்குகள் சூழலியல் சார்ந்த குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 78.1% அதிகம் என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். சூழலியல் சட்டங்களின்கீழ் பதிவு செய்யப்படும் ஐந்து வழக்குகளில் 80.5%, அதாவது நான்கு, சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஒலி மாசு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றங்கள் இடம்பிடித்திருக்கின்றன. வனச் சட்டம் மற்றும் வன பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2,287, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏறக்குறைய 672 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிறது இந்த அறிக்கை. தமிழ்நாட்டில் மட்டும் சூழலியல் சட்டங்களின்கீழ் கடந்த ஆண்டு 42,756 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2019-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதைவிட மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள். இதில் சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டத்தின் கீழ் மட்டும் 42,731 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் சுமார் 9,543-ம், உத்தரப்பிரதேசத்தில் 2,981 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Source: NCRB Report
Source: NCRB Report

இந்திய வனச் சட்டம், வனப் பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், நீர் மற்றும் காற்று பாதுகாப்பு சட்டம், காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், சிகரெட் மற்றும் புகையிலைச் சட்டம், ஒலி மாசு சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் போன்றவற்றின் கீழ் பதிவுசெய்யப்படும் குற்றங்கள் சூழலியல் குற்றங்களின் கீழ் இந்த ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளன.

என்.சி.ஆர்.பி அறிக்கையை ஆய்வு செய்யுமா தமிழக அரசு?

அதிகரித்து வரும் சூழலியல் குற்றங்களைத் தடுக்க அரசுத் தரப்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ``நீர் நிலைகள் பாதிக்கப்படுவது, காற்று மாசு அதிகரிப்பு உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகளில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை மக்கள்தான். வசதி படைத்த எவருக்கும் சூழலியல் மாசால் எந்தச் சிக்கலும் இல்லையென்பதாலேயே இது அதிகம் யாராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. காற்றை, நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் அதிக அளவில் எளிய மக்கள்மீது பதியப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களைத்தான் அரசு குற்றவாளிகளாகக் காட்டுகிறது.

சூழலியல் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும், மக்களுக்கு சூழலியல் மற்றும் அது குறித்த சட்டங்கள் சார்ந்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடும்பம், பொருளாதாரம், போதைப்பொருள்கள் போன்றவற்றால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு இருப்பதுபோல சூழலியல் குற்றங்களைத் தடுக்கவும் காவல்துறையில் தனிப்பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும்
சுந்தர்ராஜன் - பூவுலகின் நண்பர்கள்

உண்மையில் மிகப்பெரிய தொழிற்சாலைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவை செய்யும் சூழலியல் குற்றங்கள்தான் அதிகம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துபவை. இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் இந்த எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்கு உயரும். சூழலியல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் இவையெல்லாம் செயல்படுகின்றனவா, இல்லையா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

பொறியாளர் சுந்தர்ராஜன்
பொறியாளர் சுந்தர்ராஜன்

சாதாரண மக்களும் சூழலியல் பிரச்னைகள் சார்ந்து புகார் அளிக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என அரசுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூழலியல் பிரச்னைகள் சார்ந்த பிரச்னைகளுக்கு அரசுத் தரப்பில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதனிடம் பேசினோம். ``தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கையில் பெரும்பாலானவை சிகரெட் மற்றும் புகையிலை வழக்குகள்தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 0.5 சதவிகிதம்தான் தமிழ்நாட்டில் மிகத் தீவிரமான சூழலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. சிகரெட் மற்றும் புகையிலை, குட்கா விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தக் கடுமையான நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் இது போன்ற சூழலியல் சார்ந்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். பெரு நிறுவனங்கள் சூழலியல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுகின்றனவா என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் குற்றம் செய்யும்பட்சத்தில் எந்த சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்ற எல்லா குற்றங்களைவிடவும் சூழலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகத் தீவிரமாக இருக்கிறார். இதற்காக, மாணவர்கள், சூழலியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்களுடன் இணைந்து மக்களுக்குச் சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாகவும் ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம். விரைவில் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனை, நடவடிக்கைகளின்பேரில் வெகு விரைவில் சூழலியல் குற்றங்களற்ற மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்” என விளக்கம் அளித்தார்.

சுற்றுச்சூழல்,  கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன்
சுற்றுச்சூழல், கால நிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன்

மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுதலாக உருவெடுத்திருக்கும் சூழலியலை பாதிக்கும் குற்றங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுத்து வாழ்வதற்கு நல்ல சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் சூழலியல் ஆர்வலர்கள், மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு