Published:Updated:

ஸ்டாலின் ஆட்சி; பிற மாநிலங்கள் புகழாரம் சூட்டும் அளவுக்கு இருக்கிறதா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன.

''எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்துவருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும்விதத்தில் உள்ளன. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்''

என தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பதிவிட்ட ட்வீட், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசுருளாகியிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பாக, கேரள மாநில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில், அந்த மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ விஷ்ணுநாத் பேசிய வீடியோ கேரளா பார்டரைத் தாண்டி தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் வைரலானது.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

அதில் ``2 கோடி குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4,000, 14 வகை மளிகைப் பொருள்கள், மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 மற்ற மருத்துவப் பணியாளருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம்'' என வரிசையாக அடுக்கி இவையெல்லாவற்றையும் கொடுத்தது கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அல்ல, தமிழ்நாடு முதல்வர் எம்.கே.ஸ்டாலின்'' என அவர் பேசியவிதம் ஹைலட் ஆனது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதலாக கேரள ஊடகங்கள் அவரைக் கொண்டாடித் தீர்க்கின்றன. அதிகாரிகள் நியமனம், கொரோனா நடவடிக்கைகள், இரவு 11 மணிக்கு கொரோனா வார் ரூமில் ஆய்வு, பெண்களுக்கு கட்டணமில்லாப் பயணம் என ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் அறிவித்த திட்டங்களையும் அவரின் செயல்பாடுகளையும் தமிழ் ஊடகங்களைவிட கேரளா ஊடகங்கள் உன்னிப்பாக கவனித்துவருகின்றன. அதிலும், கொரோனா நிவாரண நிதியான 2,000 ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு, நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்ற பாட்டி சிரித்த படம் தமிழகப் பத்திரிகைகளை மட்டுமல்லாமல், கேரளப் பத்திரிகைகளையும் ஆக்கிரமித்திருந்தது.

வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி

இதுமட்டுமல்ல, பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே, சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய 'மூட் ஆஃப் தி நேஷன்' என்ற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் ஆகஸ்ட் 16-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில், 42 சதவிகித வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தார் ஸ்டாலின். அவருக்கு அடுத்தபடியாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% பெற்று இரண்டாவது இடத்திலும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் 35% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தனர். அதேபோல, ஜூலை மாதத்தில், இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்கிற கருத்துக்கணிப்பை ஆர்மாக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது. இந்த கருத்துக்கணிப்பிலும் ஸ்டாலினே முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிரடியான திட்டங்களுக்கு ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும், நிர்வாகரீதியாகச் சிறந்த நடவடிக்கைகளுக்கு பினராயி விஜயனையும், மத்திய அரசுடன் இணக்கமாகச் சென்று நலத்திட்டங்களைப் பெறுவதில் நவீன் பட்நாயக்கையும் கடந்த காலங்களில் தமிழ்நாட்டு ஊடகங்கள் அடையாளப்படுத்தி பாராட்டிய காலம்போய், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கைகளைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றன. இரண்டில் எது உண்மை என மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.

அடம்பிடிக்கும் பழனிவேல் தியாகராஜன் முதல் பொருளாளரால் வாடிய தலைவர் வரை! -கழுகார் அப்டேட்ஸ்
ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன் (மூத்த பத்திரிகையாளர்)

``இந்த நூறு நாள்களில் நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு ஆட்சியாகத்தான் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி இருக்கிறது. மே 7-ம் தேதிதான் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், மே 2-ம் தேதி முடிவுகள் வெளியான நாளே தலைமைச் செயலாளரையும், சுகாதாரத்துறைச் செயலாளரையும் அழைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் இறங்கிவிட்டார். காபந்து அரசாங்கக் காலத்தில் ஏற்பட்ட தொய்வைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட்டார். அதனால்தான் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் தேவையில்லாத நிகழ்ச்சிகள்,செலவுகள் என அனைத்தையும் தவிர்த்துவிட்டார் ஸ்டாலின்.

நூறு நாள்கள் குறுகிய காலகட்டம்தான். ஓர் ஆட்சியை மதிப்பிட இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாவது தேவை. ஆனால், தொடக்கம் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ரகுராம் ராஜன் தலைமையிலான குழு தொடங்கி வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் வரை எல்லாத் துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. எந்தவொரு தரப்பினரையும் விட்டுவிடாத ஓர் அரசாங்கமாகத்தான் இந்த அரசாங்கம் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை நீட் உள்ளிட்ட உடனடியாகச் செய்ய முடியாத, இவர்களின் அதிகாரத்துக்குள் வராத விஷயங்களை நிறைவேற்றாமல் இருக்கின்றனர். ஆனால், ஒட்டுமொத்தமாக நூறு நாள்களில் இவ்வளவு திட்டங்களோடு செயல்படுவதைப் பார்த்தால் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத்தான் தமிழ்நாடு இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.''

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்)

``தி.மு.க-வுக்கு இணையாக அ.தி.மு.க இருந்தாலும், ஸ்டாலினுக்கு இணையான ஒரு தலைவர் தற்போது தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை. அதனால், யாரையும் எதிரியாகக் கருதாமல், தான் பாசிடிவ்வாக வளர்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தான் ஒரு சிறந்த முதலமைச்சர் என்று பெயரெடுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்கிறார். கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் எதிர்ப்பு, ஜெயலலிதா எதிர்ப்பு இருந்தது. அதேபோல அவர்கள் இருவருக்கும் கருணாநிதி பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார். ஆனால், ஸ்டாலினுக்கு இணையான எதிரி யாரும் இல்லை. அவருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. பிரதமர் மோடியும் ஸ்டாலினை மதிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் அவரை உயர்வாக நினைக்கின்றன. தற்போதைய சூழலில் இந்தியாவில் மற்ற மாநில ஆட்சிகளைவிட தமிழகத்தில் சிறப்பான ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. அதனால்தான் பல மாநிலங்களிலிருந்தும் அவருக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.''

ஸ்டாலின்: `புத்தகப்பையில் ஜெ., இ.பி.எஸ் படங்களே இருக்கட்டும்!' -  காரணம் பெருந்தன்மையா, நிதிநிலையா?
சுமந்த் சி ராமன்
சுமந்த் சி ராமன்

சுமந்த் சி ராமன் (அரசியல் விமர்சகர்)

``ஆட்சிக்கு வந்து 117 நாள்கள்தான் ஆகியிருக்கின்றன. இதுவரைக்கும் தவறான நடவடிக்கை எனச் சொல்கிற அளவுக்கு எதுவும் இல்லை. மக்களுக்குப் பிடித்திருக்கிற மாதிரி சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறை சொல்வதற்கு எப்படி மூன்று மாத காலம் குறைவான காலமோ, அதே மாதிரிதான் பாராட்டுவதற்கும். அதனால், சில காலம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, முந்தைய ஆட்சியும் சரி, இந்த ஆட்சியும் சரி... சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இந்த ஆட்சியில் தடுப்பூசிகள் அதிகமாகப் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தியா முழுவதுமே மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் ஏதாவதொரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்யும். அந்தவகையில் மற்ற மாநிலத்தவர்கள் பாராட்டுவது நல்ல விஷயம்தான்.''

அடுத்த கட்டுரைக்கு