Published:Updated:

டாஸ்மாக் விவகாரம்: 'எதிர்க்கட்சியாக எதிர்ப்பு... ஆளும்கட்சியாக திறப்பு! - ஸ்டாலினின் மூவ் சரியா?'

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பா.ஜ.க, பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் வரும் திங்கள் கிழமை முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதற்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கொரோனா முதல் அலையின்போது மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க தற்போது ஆளும் கட்சியான பிறகு அதே செயலைச் செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் முன்வைத்து வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே பத்தாம் தேதி முதல், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தொற்று அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, கடந்த மே 24-ம் தேதி முதல் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது. காய்கறிகள், பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் ஏற்பாட்டில் நேரடியாக வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்பட்டன. தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதேவேளை தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகளும் மீதமிருக்கும் மாவட்டங்களுக்கு சற்று அதிகமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதி காலை ஆறு மணியோடு முடிவுக்கு வருவதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின். அதன் முடிவில், நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பா.ஜ.க, பா.ம.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ''டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். ''கொரோனா பரவல் குறைந்ததை கவனத்தில்கொண்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன; அதில் ஒன்றுதான் டாஸ்மாக் திறப்பு'' என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தநிலையில், அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் இது குறித்துப் பேசும்போது,

''கடந்த வருடம் கொரோனா முதல் அலையின்போது, தினசரி பாதிப்பு 500 என்கிற அளவில்தான் இருந்தது. பத்துக்கும் குறைவாகத்தான் மரணங்களும் நிகழ்ந்தன. அப்போது பிற்பகல் 12 மணி முதல் மாலை வரை மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. ஆனால், அப்போது மதுக்கடைகளை மூடச் சொல்லி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தன் வீட்டுக்கு முன்னாள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஆனால், தற்போது நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு, நூற்றுக்கணக்கில் மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இந்த நேரத்தில் மக்கள்மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர். இது மிகவும் தவறான முடிவு.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

கடந்த ஒருமாத காலம் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வேலைக்குச் செல்லாமல், பொருளாதாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், வீட்டில் அடிப்படை, அத்தியவாசியத் தேவைகளுக்காக இருக்கின்ற பணத்தை குடிப்பதற்காக வீட்டில் உள்ள ஆண்கள் எடுத்து வந்துவிடுவார்கள். இல்லை என்றால் வீட்டில் உள்ள சிறிய நகைகளை அடகு வைத்து மது வாங்க வருவார்கள். அதனால், இந்த முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இன்னும் ஒரு மாத காலத்துக்கு மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை முதல்வர் பரீசீலனை செய்வார் என நாங்கள் நம்புகிறோம்'' என்கிறார் அவர்.

தமிழக அரசின் இந்த முடிவு குறித்து, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி பேசும்போது,

'' தி.மு.க அரசின் இந்த முடிவு வழமையான சந்தர்ப்பவாதம்தான். இதே எதிர்க்கட்சியாக இருந்தால் எதிர்த்திருப்பார்கள். கடைகளைத் திறந்ததற்கு, கொரோனா தொற்று குறைந்திருப்பதே காரணம் என முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 30 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாகக் குறைந்திருக்கிறதே தவிர 100 பேர், 200 பேர் என்கிற அள்வுக்குக் குறையவில்லை. கொரோனா காலத்தில் மதுபானக் கடைகள் அவசியமாக எனக் கேட்ட ஸ்டாலினே, அந்தக் கடைகளைத் திறந்துவிடுவது மோசடித்தனம். தொலைநோக்கு பார்வையில்லாத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஒரு நடவடிக்கைதான் இது.

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

நோய்த்தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கடை திறக்கப்படாது மற்ற மாவட்டங்களில்தான் உண்டு என்கிறார்கள். ஆனால், அந்த 11 மாவட்டங்களில் குடிப்பழக்கம் உள்ளவர்கள், பக்கத்தில் கடைகள் திறந்திருக்கும் மாவட்டங்களுக்குப் படையெடுப்பார்கள். அப்போது தொற்று இன்னும் அதிகமாகப் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் மிகவும் பிற்போக்குத்தனமான முடிவாகவே இதை நான் பார்க்கிறேன். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கருணாநிதி, 'மதுக்குடிப்பவனை மனிதனாகவே ஏற்கமுடியாது' என்று சொன்னார். காரணம், மது ஒழிப்பு அப்போது பேசுபொருளாக இருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றார்கள். ஆனால், இப்போது ஆட்சிக்கு வந்தபிறகு இவர்களே கடையைத் திறக்கிறார்கள். அதுவும் கொரோனா நெருக்கடியால், மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இதைச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர்கள் கொடுத்த பணத்தை மீண்டும் பிடுங்குவதற்கான வேலைதான் இது. வருமானம்தான் பிரதானம் என்றால் அதிமுக அரசாங்கத்துக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றே தெரிகிறது'' என்கிறார் அவர்.

"முதலில் அரசு எடுத்து நடத்தும்... அப்புறம் மதுக்கடைகள் மூடப்படும்!"- ஜெகன் மோகனின் அதிரடி பிளான்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா பேசும்போது,

'' டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்தால் சமூக விலகலைக் கடைபிடிப்பது கடினமான ஒன்றாக மாறிவிடும். அதனால், கொரோனா தொற்று முற்றிலும் குறையும் வரைக்கும் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருப்பதே நல்லது'' என்றார்.

பரந்தாமன்
பரந்தாமன்

மேற்கண்ட விஷயங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமனிடம் பேசினோம்,

''அ.தி.மு.க ஆட்சியில், முழு ஊரடங்குக்குப் பிறகு முதல் தளர்விலேயே அவர்கள் டாஸ்மாக்கைத் திறந்தார்கள். ஆனால், நாங்கள் அப்படி நடந்துகொள்ளவில்லை. அதனால் அவர்களுக்கு எங்களைக் குறைசொல்ல எந்த உரிமையும் கிடையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தொற்று எவ்வளவு உச்சத்தில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திடீரென அதி வேகமாகப் பரவியது. மக்களின் ஒத்துழைப்போடு மருத்துவத் துறையின் ஒத்துழைப்போடு எங்களின் முயற்சியால் ஒரு மாதத்தில் அது பெருமளவில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, இரண்டு தவணைகளில் நிதி உதவி, 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறோம். மக்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்துவிட்டு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். அத்தியாவசியத் தேவைகளுக்காக விஷயங்களில் ஒவ்வொன்றாக தளர்வுகளைச் செய்துவரும் வேளையில் தற்போது டாஸ்மாக்கையும் திறந்திருக்கிறோம். கள்ளச்சாராயமும் புழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்டது. அதைத் தடுக்கும் பொறுப்பும் இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. தவிர கொரோனா உச்சத்தில் இருக்கும்போதே திறந்ததைவிட தற்போது கட்டுக்குள் இருக்கும்போது திறப்பதில் தவறில்லை'' என்கிறார் அவர்.

இதே, கொரோனா முதல் அலையின்போது, அ.தி.மு.க ஆளும்கட்சியாகவும் தி.மு.க எதிர்க்கட்சியாகவும் இருந்தபோது மதுக்கடை திறப்பு குறித்து என்ன பேசினார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு