Published:Updated:

காஷ்மீர் முதல் கேரளம் வரை... பா.ஜ.க எதிர்ப்பு தலைமைகளை ஒன்றிணைக்கிறாரா ஸ்டாலின்?!

நூல் வெளியீட்டு விழா மேடை

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை தனது நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்த முதல்வர் ஸ்டாலின், `திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் பணியை மேற்கொள்வேன்’ என்று கூறியிருக்கிறார்.

காஷ்மீர் முதல் கேரளம் வரை... பா.ஜ.க எதிர்ப்பு தலைமைகளை ஒன்றிணைக்கிறாரா ஸ்டாலின்?!

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை தனது நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்த முதல்வர் ஸ்டாலின், `திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைக்கும் பணியை மேற்கொள்வேன்’ என்று கூறியிருக்கிறார்.

Published:Updated:
நூல் வெளியீட்டு விழா மேடை

மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக மேற்கொண்டுவருகிறார்.

பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியில் எதிர்க்கட்சிகளைத் திரட்டிக் கட்டமைக்க வேண்டும் என்பது மம்தா பானர்ஜியின் நோக்கமாக இருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை அகில இந்திய அளவில் ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் தி.மு.க-வும் இறங்கியுள்ளது.

ஸ்டாலின் - ராகுல்
ஸ்டாலின் - ராகுல்

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல்கள் எனப் பல தேர்தல்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தி.மு.க எதிர்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ‘உங்களில் ஒருவன்’ என்கிற முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அது ஒரு நூல் வெளியீட்டு விழா என்பதையும் தாண்டி, பல அரசியல் நோக்கங்களை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. அந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘திராவிட மாடல்’ பற்றி அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். ``மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோவதன் காரணமாக, அந்த மாநில மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அதை, அனைத்துக் கட்சிகளும் உணர்ந்துள்ளன. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது.

அதேபோல, இது சட்டத்தின் ஆட்சியாக இல்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக, அகில இந்திய அளவிலான சமூகநீதி கூட்டமைப்பை தி.மு.க சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்திய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், ``திராவிட மாடல்தான் எனது தத்துவம். திராவிட மாடல் என்பது திராவிடவியல் ஆட்சிமுறை. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிடவியல் ஆட்சிமுறை. இந்த திராவிடவியல் கோட்பாட்டை தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான், ராகுல் காந்தியையும் பினராயி விஜயனையும், உமர் அப்துல்லாவையும், தேஜஸ்வி யாதவையும் இங்கு அழைத்திருக்கிறோம்” என்றார் ஸ்டாலின்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனும் ஒரே மேடையில் பங்கேற்றனர். ‘காஷ்மீர் முதல் கேரளா வரை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்னெடுப்பாக இதைப் பார்க்கலாமா?’ என்ற கேள்வியை தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கண்ணதாசனிடம் முன்வைத்தோம்.

``அது, வெறும் நூல் வெளியீடு மட்டுமல்ல. திராவிடவியல் ஆட்சிமுறையை இந்தியா முழுவதும் கொண்டுபோய் சேர்ப்பதற்கான தொடக்கமாகவும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனநாயகத்துக்கு எதிரான சக்தியாக பா.ஜ.க வளர்ந்துகொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

இந்தியாவில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமூகநீதி போய்ச் சேர வேண்டும். நீதிக்கட்சி தொடங்கி தி.மு.க வரை 80 ஆண்டுகளாகச் செயல்படுத்திவரும் இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கான ஆரம்பம்தான் இந்த நிகழ்ச்சி.

தமிழ்நாட்டின் மண், பண்பாடு பற்றி ராகுல் காந்தி பேசினார். இந்தியை யாரும் திணிக்க முடியாது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். அவர் தாத்தா ஜவஹர்லால் நேருதான் இந்தியைத் திணித்தார். ஆனால், இப்போது ராகுல் காந்தி பேசியிருக்கும் கருத்து என்பது, அவரால் உணர்ந்து பேசப்பட்டது. இந்த மாற்றத்தை தமிழகம் உருவாக்கியிருக்கிறது. இந்த மாற்றம் இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், நடிகர் சத்யராஜ்
நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின், நடிகர் சத்யராஜ்

முதல்வர் ஸ்டாலின் தி.மு.க-வின் செயல் தலைவராகப் பதவியேற்றபோது, இவர் பா.ஜ.க-வை எதிர்ப்பரா என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். அப்போது, பா.ஜ.க-வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் உறுதியாக முன்வைத்தார். அன்று தொடங்கி இன்றுவரை, பா.ஜ.க எதிர்ப்பு என்கிற நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

மத்தியில் ஆட்சியதிகாரத்திலிருந்து பா.ஜ.க-வை அகற்ற வேண்டும் என்கிற தி.மு.க-வின் இந்த முயற்சியில் இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும். அதற்கான வேலைகளை தி.மு.க மேற்கொள்ளும்” என்றார் வழக்கறிஞர் கண்ணதாசன்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்யும் மம்தா பானர்ஜியுடனும் தி.மு.க நட்பு பாராட்டினாலும்கூட, காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியில் தொடர்வதையே ஸ்டாலின் விரும்புகிறார் என்பது இந்த விழாவின் மூலமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.