Published:Updated:

குக்கர் சின்னம்... சாதி ஓட்டுகள்... அ.ம.மு.க என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? #TNElection2021

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, தி.மு.க-வைவிட, அ.தி.மு.க-வுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.ம.மு.க சார்பில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 130 பேர் அடங்கிய மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 15 பேர் கொண்ட பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியானது. அதில் அந்தக் கட்சியின் து.தலைவர் அன்பழகன், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள், பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், ரெங்கசாமி, செந்தமிழன், கட்சியின் பொருளாளர், மனோகரன், கழக அமைப்புச் செயலாளர் அரூர் முருகன், தலைமை நிலையச் செயலாளர்கள், கே.கே.உமாதேவன், சண்முகவேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியாகின.

தினகரன்
தினகரன்

இந்தநிலையில், இரண்டாம்கட்டமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட 50 பேர் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. டி.டி.வி.தினகரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, இதுவரை, அ.ம.மு.க-வின் சார்பில், 194 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அ.ம.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்.டி.பி.ஐ-க்கு ஆறு தொகுதிகளும், ஒவைசி கட்சிக்கு மூன்று தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க உதயம் & தேர்தல் பங்கேற்பு!

கடந்த 2018, மார்ச் 15-ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி.தினகரன். `அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்' என அப்போது அறிவித்தார். அந்தக் கட்சி முதன்முறையாக, கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஐந்து சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அவற்றில் பெரும்பாலான வாக்குகள் அ.தி.மு.க-வுக்குச் செல்ல வேண்டிய வாக்குகள்தான். அதனால் வெற்றிபெற வாய்ப்பிருந்த சில இடங்களிலும் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது. குறிப்பாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வாக்குகளுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் பெற்ற வாக்குகளுக்கும் இடையில் வெறும் 3,190 வாக்குகள்தான் வித்தியாசம். ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட இளவரசன் 60,000-க்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேபோல, ராமநாதரபும் தொகுதியில் வெற்றிபெற்ற தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கும் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,27,122. ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வ.து.ந.ஆனந்த் பெற்ற வாக்குகள் 1,41,806.

அ.ம.மு.க நேர்காணல்
அ.ம.மு.க நேர்காணல்

அதேபோல, 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க - அ.ம.மு.க-வின் வாக்குகளைச் சேர்த்தால் அது வெற்றிபெற்ற தி.மு.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வையும் முந்தி பல இடங்களில் வெற்றிக்கொடி நாட்டியது அ.ம.மு.க. அ.தி.மு.க - அ.ம.மு.க இடையில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்கிற செய்திகள் வெளியானபோது, பல அ.தி.மு.க நிர்வாகிகளே அதை வரவேற்றனர். இரண்டு கட்சிகளும் இணைந்தால் தங்களின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டு கட்சிகள் இணைப்பு மட்டுமல்ல, அ.தி.மு.க கூட்டணிக்குள்கூட அ.ம.மு.க இடம்பெறவில்லை. இந்தநிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.ம.மு.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, தி.மு.க-வைவிட, அ.தி.மு.க-வுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் கணபதி,

``தென்மாவட்டங்களில் நிச்சயமாக அ.ம.மு.க-வால், அ.தி.மு.க-வுக்கு பாதிப்பு இருக்கும். தவிர வட மாவட்டங்களிலும் அ.ம.மு.க முன்னணி நிர்வாகிகள் போட்டியிடும் பாப்பிரெட்டிபட்டி, அரூர் உள்ளிட்ட சில தொகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும். அ.ம.மு.க ஒரு தொகுதியில் பத்தாயிரம் ஓட்டுக்கள் வாங்கினாலும் அது அ.தி.மு.க-வுக்குத்தான் பின்னடைவை உண்டாக்கும். காரணம், அந்த வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் அ.தி.மு.க-வுக்குப் போக வேண்டிய வாக்குகள்தான். அதேபோல, தென் மாவட்டங்களில், 10.5 சதவிகித வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அ.தி.மு.க-வை எதிர்த்து பல கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றினார்கள். அந்த வாக்குகளும் தினகரனுக்குப் போவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம், தி.மு.க கட்சி உறுப்பினர்களாக உள்ள முக்குலத்தோர் வாக்குகள் மட்டும்தான் தி.மு.க-வுக்குப் போகும். பொதுவான முக்குலத்தோர் வாக்குகள் வழக்கமாக அ.தி.மு.க-வுக்குப் போகும். சீர்மரபினர் இட ஒதுக்கீட்டுச் சிக்கல் காரணமாக இந்தமுறை தினகரனுக்குப் போவதற்கே அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

அதேவேளையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'அ.தி.மு.க-வின் பெருவாரியான வாக்குகள் தனக்குத்தான் விழும், ஐந்து தொகுதிகளிலாவது ஜெயித்துவிடலாம்' என்கிற உத்வேகத்தில் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்தார் தினகரன். ஆனால் அதிகபட்சமாக சில தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் என்கிற அளவில்தான் அவரால் வாங்க முடிந்ததே தவிர வெற்றிபெற முடியவில்லை. அதனால், இந்தமுறை அதே வேகத்தோடு தினகரன் பிரசாரம் செய்வாரா என்று தெரியவில்லை. சீர்மரபினர் இட ஒதுக்கீட்டுச் சிக்கலை முன்வைத்து அவர் தீவிரமாகப் பிரசாரம் செய்தால் கண்டிப்பாக வாக்குகளை அள்ளுவார்'' என்கிறார் அவர்.

ஆனால் ``கடந்த தேர்தலைவிட இந்தமுறை, அ.ம.மு.க நிச்சயமாக அதிக வாக்குகளைப் பெறும்'' என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன். அதற்கான காரணங்களையும் விவரிக்கிறார்.

கட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன்?  அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்?

``கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தினகரனால் கட்சியைப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால், அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட `பரிசுப்பெட்டி' சின்னமும் சுயேச்சை சின்னமாகவே கருதப்பட்டது. அதன் காரணமாக, வாக்குச் செலுத்தும் இயந்திரத்தில் முதல் வரிசையில் சின்னம் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் இடத்தில் சின்னம் இருந்தது. அதேபோல, தேர்தலுக்கு வெறும் பதினைந்து நாள்களுக்கு முன்பாகச் சின்னம் கிடைத்ததால், மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஆனாலும், அந்தத் தேர்தலில்,5.5 சதவிகித வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் பத்து சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கினார்கள். அ.தி.மு.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணமே அ.ம.மு.க-தான் என்பது அ.தி.மு.க-வின் உள்ளூர் நிர்வாகிகளுக்குத் தெரியும்.

எஸ்.பி.லட்சுமணன்
எஸ்.பி.லட்சுமணன்

ஆனால், தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சின்னம் கிடைத்துவிட்டது. அதுவும் குக்கர் சின்னம். ஆர்.கே.நகர் முதல் கன்னியாகுமரி வரை குக்கர் சின்னம் என்றால் இயல்பாகவே மக்களுக்கு தினகரன்தான் நினைவுக்கு வருவார். வாக்கு இயந்திரத்திலும் குக்கர் சின்னம் முதல் ஐந்து இடத்துக்குள் வந்துவிடும். இது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம். அதனால் கண்டிப்பாக 5.5 சதவிகிதத்திலிருந்து இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை அந்தக் கட்சி தொடும். தவிர, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித பிற சமுதாய மக்களை, குறிப்பாக முக்குலத்தோர் சமுதாய மக்களை அதிகமாகவே கோபமடையச் செய்திருக்கிறது. அதனால், இதுவரை தினகரனுக்கு வாக்காளிக்காத முக்குலத்தோர் சமுதாய மக்களும் இந்த முறை தினகரனுக்கு வாக்களிப்பார்கள். நிச்சயமாக இது அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பை உண்டாக்கும்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு