கர்நாடகத் தேர்தல் பரப்புரையின்போது பேசிய பிரதமர் மோடி , ’’இலவச அறிவிப்புகளால் மாநில அரசின் கடன் அதிகரித்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து உணவு, தடுப்பூசிகளை இலவசமாக வழங்குகிறது. அதை நாங்கள் கடமையென எண்ணுகிறோம்’’ எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், அதே கர்நாடகத் தேர்தலில் காஸ் இலவசம், பால் இலவசம் என அந்த மாநில பா.ஜ.க அறிவித்திருக்கிறது. ஒருவேளை அது பிரதமருக்குத் தெரியாமல் நடந்திருக்கலாம் (அப்படி எடுத்துக்கொள்வோமே). ஆனால், பிரதமர் மோடி சொன்ன அந்தக் கடமை. அது தவறாமல் பின்பற்றப்படுகிறதா என்னும் கேள்விக்கான விடைகளை ஆராய்வோமே!

1. உணவு
இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில அரசுகள் இணைந்து உணவு தானியங்களின் இருப்பைக் குறைக்கும் நோக்கத்தில், திறந்தவெளி விற்பனைத் திட்டத்தைக் கொண்டுவந்தன. ஆனால், இது மேற்படி மாநில அரசுகளின் சுமையை அதிகரித்தது. குறிப்பாக ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.23 என்பதற்கு மாற்றாக ரூ.39 (போக்குவரத்து உட்பட) செலவளிக்க வேண்டியிருக்கிறது. இதனால் மாநில அரசுகளுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டது. மேலும், 2022-ம் ஆண்டிலிருந்து அரிசி, கோதுமை ஆகிய அடிப்படை உணவுப்பொருள்களுக்கும் 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. இதுவும் உணவின்மீதான விலையை கிலோவுக்கு ரூ.3-லிருந்து ரூ.9 வரை அதிகரிக்கும். ஏற்கெனவே, 121 நாடுகளுக்கிடையில் நடத்தப்பட்ட பசி குறியீட்டு ஆய்வில் இந்தியா 107-வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், உணவு சார்ந்து பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை நடுத்தர மக்களை மீண்டும் பாதிப்புக்குள்ளாக்கும்.

2. முதியோர் நலன்
இந்திய ரயில்வே, மாற்றுத்திறனாளிகளுக்கும், முதிர்ந்த வயதுடையோர்களுக்கும் கட்டணத்தில் சலுகையளித்து வந்தது. குறிப்பாக, 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவிகித கட்டணச் சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவிகிதக் கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இந்தச் சலுகைகள் ரத்துசெய்யப்பட்டன.
ஆனால், கொரோனா பரவல் முடிந்து இரண்டாண்டுகள் கடந்த நிலையிலும், சலுகை ரத்து திரும்பப் பெறப்படவில்லை. இதனால், 12 கோடிக்கும் அதிகமான முதியோர், மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
3. உதவித்தொகை
இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய சிறுபான்மை மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க, மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைப் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளர்களாக இருந்தனர். கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மாணவர்கள் பெறுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, `இனி இந்த உதவித்தொகை ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்' என மத்திய அரசு அறிவித்தது.
அதேபோல், சிறுபான்மையின மாணவர்களை எம்.பில்., பிஹெச்.டி போன்ற மேற்படிப்புகளைத் தொடர ஊக்குவிப்பதே, ‘மௌலானா ஆசாத் உதவித்தொகை’ திட்டத்தின் நோக்கம். `பிற உதவித்தொகைத் திட்டங்களால் பலனடைந்த சிறுபான்மையின மாணவர்கள், இதிலும் பதிவுசெய்கிறார்கள். எனவேதான் இந்தத் திட்டம் நிறுத்தப்படவிருக்கிறது’ என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறியிருக்கிறது. இப்படியாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் அடிப்படை கல்விக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பல லட்சம் மாணவர்கள் படிப்பைத் தொடருவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது.

4. மருந்துகள்
இலவச தடுப்பூசி வழங்கியதை மேடைதோறும் பேசுகிறார் பிரதமர் மோடி. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல அத்தியாவசிய மருந்துகளின் விலையும் அதிகரித்திருக்கின்றன.
ஆண்டுதோறும், உற்பத்திக்கு ஏற்றாற்போல், மருந்து விற்பனை மாற்றியமைக்கப்படும். கடந்த ஆண்டு 10.7%-ஆக இருந்த விற்பனைக் குறியீடு, இந்த ஆண்டு 12%-ஆக அதிகரித்திருக்கிறது. வலி நிவாரணிகள், தொற்று நோய் மருந்து, இதய நோய், காச நோய், ஹெச்.ஐ.வி., இரைப்பை மற்றும் குடல், கண் பிரச்னை, வைட்டமின் மாத்திரை, புற்றுநோய், ரத்தசோகை, கருத்தடை தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் மருந்துகள் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கான 384 மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஹெப்படைட்டிஸ் பி, டி.பி.டி தடுப்பூசி, ஜப்பானிய மூளை அழற்சி நோய்க்கான தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பூசி போன்றவற்றுக்கான விலையும் அதிகரிக்கிறது.
”இவ்வாறு பிரதமர் மோடி கடமை தவறியிருப்பதால், அதிகம் பாதிக்கப்பட்டது நடுத்தர குடும்பங்கள் மட்டுமே… ஆனால், மேடைதோறும் அடிப்படைத் தேவைகளுக்கு இலவசம் அளிக்கிறோம் என்கிறார் பிரதமர்" என விமர்சனங்கள் கிளம்புகின்றன.

இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நம்மிடம் பேசுகையில், ``சில ஆண்டுகளுக்கு முன்பு, குஜராத்தில் பெண்கள் 42 சதவிகிதத்தினர் ஊட்டசத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்னும் பிரச்னை முன்வைக்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த மோடி, `அவர்கள் உடல் இளைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருப்பதால், சாப்பிடுவதில்லை' எனக் கூறியது, பெரும் விமர்சனத்துக்குள்ளானது. எனவே, இலவசம் குறித்து கிண்டலாகப் பேசுவதில் பா.ஜ.க கட்சியினருக்குப் பெருவிருப்பம் இருந்ததை மறுக்க முடியாது. ஆனால், தொடர்ந்து மக்களுக்குக் கொடுத்த இலவசங்களை மட்டுமே பேசுகிறார்களா... அவர்கள் பெரு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் இலவசங்கள், சலுகைகள் குறித்து ஏன் பேசுவதில்லை?

குஜராத் மாநிலத்தில் ’செமி கன்டெக்டர்(Semi-Conductor) ஆலை’ நிறுவ, தனியார் நிறுவனத்துக்கு 50% நிலத்தை இலவசமாகக் கொடுக்கிறது அரசு. ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் நிலத்தைக்கூட பதிவுசெய்ய சொந்த காசைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், கோடி கோடியாக முதலீடு செய்யும் பெரு நிறுவனத்துக்குப் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பா.ஜ.க ஆட்சியில்தான்.
அது தொடர்பாகக் கேள்வியெழுப்பினால் ’தொழில் வளர்ச்சி’ என்கிறார்கள். அதற்கு சில சலுகைகள் அவசியம் என்கிறார்கள். ஆனால், அதே வேளையில் எழைகளுக்குத் தேவையான இலவசங்களை வழங்கக் கோரினால் பெரும் விவாதமே செய்கிறார்கள். ஏழைகள் தேவையை ஏளனமாகப் பேசும் இவர்கள், நடுத்தர மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுக்க மறுப்பது, இது முதன்முறையல்ல. அது இனியும் தொடரும்” என்றார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசுகையில், “பா.ஜ.க ஆட்சி செய்யும், கடந்த 9 ஆண்டுகளாக ஏழைகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்துவருகிறது. குறிப்பாக, பா.ஜ.க கட்சியின் குறிக்கோள் ’கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்பதுதான். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்குக் கொடுப்பதே அரசின் கடமை, அதுதான் அவர்களின் உரிமை என்னும் நிலைப்பாட்டில்தான் இன்றுவரை இருக்கிறோம்.
கொரோனா காலத்தில் 9 கோடி மக்களுக்குப் பணம் செலுத்தாமல் காஸ் வழங்கப்பட்டது. இது அடிப்படைத் தேவையில்லையா... அதேபோல், மத்திய அரசு உணவு விநியோகிப்பதிலும், அதன் தேவையிலும் இடைவேளி இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். அது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசுகள் கொடுத்த தரவுகள்படிதான், உணவுப்பொருள்கள் சலுகை விலையில் வழங்கப்படுகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக எடுக்கப்படவில்லை. விரைவில் அது நடத்தப்படும். அதேபோல், பெரு நிறுவனங்களுக்கு பா.ஜ.க ஆட்சியில் சலுகை கொடுக்கப்படுகிறது என்பது தவறான வாதம். முதலீட்டைப் பெருக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. தனியாரின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்காது. அந்தச் சலுகைகளும் அடிப்படையான அவசியம்தான்” என்றார்.