Published:Updated:

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் நழுவுகிறதா திமுக அரசு?!

பெட்ரோல் - தி.மு.க
பெட்ரோல் - தி.மு.க

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு குறித்து அமைச்சரின் பொறுப்பற்ற பதில், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

''ஏதும் தேதி போட்டிருக்காங்களா?''

''நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க... அதில் தேதி போட்டிருந்தாங்களா?''

''உங்களுக்குக் கணக்கு தெரியுமா தெரியாதா, ஸ்கூலுக்குப் போனீங்களா, இல்லையா?''

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `நீங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும், டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்தீர்களே...’ எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதில்கள்தான் மேலே நீங்கள் கண்டவை. அமைச்சரின் இந்தப் பொறுப்பற்ற பதில், பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

அதே கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதில் உள்ள சிக்கல் குறித்து அமைச்சர் மிக நீண்ட விளக்கம் ஒன்று கொடுத்தார். அதில்,

``2014-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் (ஒரு லிட்டர்) மீதான வரியை ரூ.10.39 என்பதிலிருந்து ரூ.32.90 என உயர்த்திவிட்டார்கள். அதாவது, மூன்று மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால், மாநில அரசு வரியைக் குறைப்பதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10.39-ஆக இருந்தபோதே, கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவிகிதம் மாநிலங்களுக்குப் பகிரக்கூடிய நிதி அளவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது, ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஒரு பைசாகூட மாநிலங்களுக்கு வழங்காமல், அந்த வரித் தொகையை மத்திய அரசு முழுமையாக எடுத்துக்கொள்கிறது. தற்போது மாநில அரசின் வரியைக் குறைத்தால், அது ஒன்றிய அரசுக்குத்தான் லாபம்.

2019 - 20-ம் ஆண்டில் மத்திய அரசு கையாண்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ரூ.2.4 லட்சம் கோடி. அது, 2020-21-ம் ஆண்டில் ரூ.3.9 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 63 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் மாநிலத்துக்கான பங்காக தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய ரூ.336 கோடி குறைந்திருக்கிறது. பெட்ரோல் பங்குகளில் விலை மற்றும் வரி அதிகரித்தபோதும், தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பங்குகள் குறைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையில் ‘வாட்’ வரியைக் குறைக்க ஓரளவுக்கு முயல்வோம் என்று கூறியிருந்தோம். அதை உறுதியாகச் செய்வோம். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போதும் இதே நடைமுறைதான் இருந்தது. ஆனால் அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மாநில அரசையும் கடுமையாகக் கண்டித்த தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலையைக் குறைப்போம் என வாக்குறுதி தந்த தி.மு.க இப்போது பின்வாங்குவது சரியா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், ``எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏகப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க-வினர் தேர்தல் நேரத்தில் வாரி வழங்கினார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய், டீசலுக்கு நான்கு ரூபாய் குறைப்பதாக மக்களிடம் பொய் சொல்லி வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். கொரோனா நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதித்திருக்கிற இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசின் வரியைக் குறிப்பிட்டு, சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டு விலையைக் குறைக்காமல் இருப்பது சரியான அணுகுமுறையல்ல. தமிழக நிதியமைச்சர் எல்லாம் தெரிந்த மேதாவிபோலப் பேசுகிறாரே தவிர, அவரால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம், அவர் பேச்சுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் செயலில் காட்டுவதில்லை.

``சுதந்திரம் வாங்கியதிலிருந்து இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசு வரை பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசின் கைகளில் இருந்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, அந்தக் கட்டுப்பாட்டை விலக்கி எண்ணெய் நிறுவனங்களே, மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப தினசரி விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது. அதனால், நாளொன்றுக்கு 25 பைசா, 30 பைசா என அதிகரித்து, 65 ரூபாயில் இருந்த பெட்ரோல் விலை தற்போது 100 ரூபாய்க்கும் 55 ரூபாய் இருந்த டீசல் விலை தற்போது 98 ரூபாய்க்கும் வந்திருக்கிறது.''
கோவை செல்வராஜ், செய்தித் தொடர்பாளர், அதிமுக

தேர்தலுக்கு முன்பாக `மத்திய அரசு வரியைக் குறைத்தால், நாங்கள் விலையைக் குறைப்போம்’ என தி.மு.க-வினர் சொல்லவில்லை. அதேபோல, தேதியையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வேண்டும். அதுதான் ஒரு பொறுப்பான கட்சிக்கு அழகு. ஆனால், `நிதி நெருக்கடி சரியான பிறகு விலையைக் குறைப்போம்’ என்பது மக்களை ஏமாற்றும் வேலை. தற்போதைய சூழலிலேயே 5 ரூபாயை நிச்சயமாகக் குறைக்க முடியும். எங்கள் ஆட்சி இருக்கும்போது, மாநில அரசு வசூலிக்கும் வாட் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அப்போது சொன்னார். அதைத்தான் நாங்கள் இப்போது அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

`அ.தி.மு.க அதிகமாகக் கடன் வைத்துவிட்டுப் போய்விட்டது, அதனால்தான் நிதிநெருக்கடி’ எனக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கான ஓர் அமைப்புதான். மக்கள்நலத் திட்டங்களுக்காகத்தான் நாங்கள் கடன் வாங்கினோம். கொரோனா நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றத்தான் பணம் செலவு செய்தோம். பணத்தை மிச்சம் செய்துவைக்க இது ஒன்றும் வியாபார நிறுவனமல்ல. அதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். எந்தக் காரணமும் சொல்லிக்கொண்டிருக்காமல், உடனடியாகக் கொடுத்த வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க-தான் காரணமா என அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

``எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்பதை முதலில் செய்தது தி.மு.க அங்கம்வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். அதனால்தான், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதனால் எங்களைக் குறைசொல்ல எந்தத் தார்மிக உரிமையும் தி.மு.க-வினருக்குக் கிடையாது. `விலையைக் குறைக்கும் தேதியைக் குறிப்பிட்டுச் சொன்னோமா...’ என்று நிதியமைச்சர் கேள்வி கேட்பது மக்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு பேசும் வார்த்தை.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

வாட் வரியைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 25 ரூபாய் மாநில அரசுக்கு வந்துகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயருகிற காரணத்தால் மாநில அரசுக்கு வருமானமும் பெருகுகிறது என்கிற உண்மையை மறைத்தே பேசிக்கொண்டிருக்கிறார்கள். கலால் வரி என்பது நிலையானது. பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதே அளவுதான் மத்திய அரசுக்குக் கிடைக்கும். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் வாட் வரியின் வரி விதிப்பு சதவிகித அடிப்படையில் இருப்பதால், எதிர்பாராத அல்லது திட்டமிடாத அதிக வருவாய் மாநில அரசுக்குக் கிடைக்கிறது. அதேபோல, மத்திய அரசு உபரிவரியின் வழியாக, விவசாயிகளுக்கு வருடம்தோறும் 6,000 ரூபாய் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது தமிழக நிதியமைச்சருக்குத் தெரியாதா இல்லை அதைத் தவறு என நிதியமைச்சர் சொல்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது'' என்கிறார் அவர்.

முதல்முறையாக பெட்ரோல் ரூ.100-ஐத் தாண்டிய விலை! மோடி அரசுக்கு சம்பந்தம் இல்லையா?!

`தேர்தலுக்கு முன்பாக விலையைக் குறைப்போம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு காரணம் சொல்வது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா?’ என தி.மு.க செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம்.

``அபாண்டமான குற்றச்சாட்டு இது. இந்த அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில், மிகப்பெரிய கொரோனா இரண்டாவது அலையைச் சந்தித்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க முடியாமல் போனதற்குக் காரணம், இடைக்கால பட்ஜெட்டில் கொரோனாவை எதிர்கொள்வதற்கு எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. காரணம், இரண்டாவது அலை வராது என மெத்தனப்போக்கில்தான் கடந்த அரசு இருந்தது. தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

சரவணன்
சரவணன்

அதனால், உபரிநிதியையெல்லாம் இரண்டாவது அலையைத் தடுப்பதற்கும், மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளுக்குமே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கு வந்த முப்பது நாள்களுக்குள் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என விமர்சனம் செய்வதை தோல்வியைத் தாங்க முடியாமல் பிதற்றுவதாகவே பார்க்க முடிகிறது. தற்போது இருக்கக்கூடிய நிதி ஆதாரங்களைவைத்து என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்துவருகிறோம். இந்த கொரோனா காலத்தில் 4,000 ரூபாய், மளிகைப் பொருள்கள் தொகுப்பு கொடுத்திருப்பது மக்களுக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. நிதியமைச்சர் வேறு பல நல்ல விஷயங்களையும் பேசியிருக்கிறார். அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. கடந்த அ.தி.மு.க அரசு மக்களுக்காக என்ன செலவழித்தார்கள் என்பதை பொதுவெளியில் விளக்க வேண்டும்'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு