Published:Updated:

வேளாண் பட்ஜெட் முதல் மணிமண்டபம் வரை! - பாமக-வின் வாக்குவங்கியைக் குறிவைக்கிறதா திமுக?

ராமதாஸ் - ஸ்டாலின்
ராமதாஸ் - ஸ்டாலின்

'வன்னியர் சமூகம் சார்ந்த ஸ்டாலினின் தொடர்ச்சியான அறிவிப்புகள், பாமக-வின் வாக்குவங்கியைப் பதம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து இப்படியோர் அறிவிப்பு வெளியாகும் என்று சட்டமன்றத்துக்கு வந்த பாமக எம்.எல்.ஏ-க்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன், திமுக-வின் தோழமைக் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கும் இந்த விஷயம் குறித்துச் சொல்லப்படவில்லை.

``1987-ம் ஆண்டு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கும் வகையில், ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டம் அமைக்கப்படும்'' என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க, இரு கைகூப்பி அவருக்கு நன்றியைத் தெரிவித்தார், பாமக தலைவர் ஜி.கே.மணி. அவரைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று முதல்வருக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர். முதல்வரின் இந்த அறிவிப்பை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றிருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும் முதல்வருக்குத் தன் நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

ஜி.கே.மணி - பா.ம.க
ஜி.கே.மணி - பா.ம.க

கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி நேரத்தில் அவசரமாக அறிவிக்கப்பட்ட, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு என்னாகுமோ என வன்னிய சமூக இயக்கங்கள், தலைவர்கள், மக்கள் கவலைகொண்டிருந்த நேரத்தில், அதை சட்டபூர்வமாக நடைமுறைக்குக் கொண்டுவந்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. தற்போது மணிமண்டப அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மை இடங்களைப் பிடித்து திமுக ஆட்சிக்கு வந்தாலும், கோயம்புத்தூரைப்போலவே தருமபுரியிலும் ஒரு தொகுதியில்கூட திமுக கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை. அதேபோல, சேலம் மாவட்டத்திலும் மொத்தமுள்ள 11 இடங்களில் இரண்டு இடங்களில் மட்டுமே திமுக கூட்டணியால் வெல்ல முடிந்தது. அதற்குக் காரணம், வன்னியர் வாக்குவங்கிதான். விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என ஏழு மாவட்டங்கள் வட தமிழகத்தில்தான் வருகின்றன. இந்தநிலையில் 'வன்னியர் சமூகம் சார்ந்த ஸ்டாலினின் தொடர்ச்சியான அறிவிப்புகள், அந்த வாக்குவங்கியைத் தனதாக்கிக்கொள்வதற்கான, குறிப்பாக பாமக-வின் வாக்குவங்கியைப் பதம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

அவர்கள் இது குறித்து மிக விரிவாகப் பேசும்போது, `` 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு, 1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு மணிமண்டபம் ஆகிய இரண்டு விஷயங்கள் மட்டுமல்ல, வன்னிய சமூக மக்களைக் கவர்ந்த இன்னும் சில பல விஷயங்களும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நடந்திருக்கின்றன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது, பாமக-வில் இருக்கிற அந்தச் சமுதாய மக்களும் சரி, கட்சி சாராத மக்களும் சரி... மிகப்பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கின்றனர். அவரின் சட்டமன்றப் பொன்விழா ஆண்டையொட்டி, முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம். அந்த மக்களின் மனதில் ஸ்டாலின்மீது மிகப்பெரிய மரியாதையை வரவழைத்திருக்கிறது. துரைமுருகனுக்காகக் கொண்டுவந்த அந்தத் தீர்மானத்தை, சட்டமன்றத்திலேயே பாமக தலைவர் ஜி.கே.மணி கொண்டாடித் தீர்த்தார். அதுமட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாற்றில் வேளாண்துறைக்கெனக் கொண்டு வரப்பட்ட தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் வாய்ப்பும் அதே சமூகத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. இது எதிர்பாராதவிதமாக நடந்த விஷயமாக நாம் எடுத்துக்கொண்டாலும், அந்தச் சமுதாய மக்கள் மத்தியில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை.

மார்க்கண்டேய நதி அணை விவகாரம்: `மத்திய அரசுதான் காரணம்!’ - மோதிக்கொள்ளும் பா.ம.க., பா.ஜ.க!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வன்னிய சமூகத்துக்கு எதிரானவர், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை வளரவி டமாட்டார் என்கிற பிம்பம் ஸ்டாலின்மீது கட்டமைக்கப்பட்டிருந்தது. அமைச்சரவையை ஒதுக்கும்போதுகூட சில முணுமுணுப்புகள் எழுந்தன. ஆனால், ஸ்டாலினின் சமீபத்திய செயல்பாடுகளின் மூலமாக அது சுக்குநூறாக உடைந்துவிட்டது. தற்போது நடைபெறவிருக்கிற உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் இதற்கான பலனை திமுக நிச்சயமாக அறுவடை செய்யும். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும்கூட ஸ்டாலினின் இந்த அறிவிப்புகளை, நிச்சயமாக பாமக வரவேற்றுதான் ஆக வேண்டும்.

பாமக கட்சி ஆரம்பித்த காலம்தொட்டு, வன்னியர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார், திமுக துரோகம் செய்துவிட்டது என்கிற பரப்புரை அந்தக் கட்சித் தலைமையால் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது. அது பிறகு ஒரு காலத்தில் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராகவும் சில பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இனிவரும் காலங்களில் அந்தவ் சமுதாய மக்களிடம் அப்படியொரு பரப்புரையை பாமக-வால் மேற்கொள்ள முடியுமா, அப்படியே செய்தாலும் அது மக்களிடம் எடுபடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதேவேளையில், பாமக-வுக்கு திமுக-வுடன் கூட்டணி சேர்வதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, போராளிகளுக்கு மணிமண்டபம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் ஆகிய காரணங்களைச் சொல்லி எதிர்காலத்தில் பாமக, திமுக-வுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன'' என்கிறார்கள்.

ஸ்டாலின்: மணிமண்டப அறிவிப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்தான் பின்னணியா?! - ஓர் அலசல்

பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளர் பாலு இது குறித்துப் பேசும்போது,

``தற்போது அரசு செய்திருக்கும் விஷயங்கள்கூட மிகவும் தாமதமான ஒன்றுதான். ஆனாலும், இதை நாங்கள் வரவேற்கிறோம். அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டத்துக்குப் பின்னாலும் நிச்சயமாக ஓர் அரசியல் இருக்கும். ஆனால், இந்த விஷயங்கள் எங்களின் வாக்குவங்கியை பாதிக்குமா, எதிர்காலத்தில் திமுக-வுடன் கூட்டணி சேர்வோமா என்பது குறித்தெல்லாம் பேசுவதற்கு ஒன்றுமில்லை'' என்கிறார்.

பரந்தாமன்
பரந்தாமன்

தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் இது குறித்துப் பேசும்போது,

``எல்லாவற்றையும் சாதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. சட்டமன்ற அவை முன்னவரின் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரத்தை முதல்வர் வழங்கியிருக்கிறார். வேளாண் பட்ஜெட் எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதி. அதைத்தான் நிறைவேற்றியிருக்கிறோம். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தது இயல்பாக நடந்த ஒன்று. இதில் சாதிக்கணக்குகள் அவசியமில்லாதவை. அதேபோல, இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகள்கூட நாங்கள் சமூகநீதியின் அடிப்படையில்தான் செய்துவருகிறோம். இதில் அரசியலோ, தேர்தல் கணக்குகளோ துளியளவும் இல்லை'' என மறுக்கிறார்.

ஆனால், காலமும் தேர்தல் களமும்தான் இதற்கான உண்மையான விடைகளைச் சொல்லும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு