Published:Updated:

``இந்தியாவுக்கே வழிகாட்டும் `திராவிட மாடல்’ ஃபார்முலா?" - முதல்வர் பேச்சும், பாஜக கொதிப்பும்!

மோடி - ஸ்டாலின்

``திராவிட மாடல் அரசு வழிகாட்டுகிறது என்பதில் துளியும் உண்மையில்லை. `தி.மு.க இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ என்ற பொய்யுரையை மேடைதோறும் பேசி, மக்களை ஏமாற்றுகிறார்கள் தி.மு.க-வினர்" என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

Published:Updated:

``இந்தியாவுக்கே வழிகாட்டும் `திராவிட மாடல்’ ஃபார்முலா?" - முதல்வர் பேச்சும், பாஜக கொதிப்பும்!

``திராவிட மாடல் அரசு வழிகாட்டுகிறது என்பதில் துளியும் உண்மையில்லை. `தி.மு.க இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ என்ற பொய்யுரையை மேடைதோறும் பேசி, மக்களை ஏமாற்றுகிறார்கள் தி.மு.க-வினர்" என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

மோடி - ஸ்டாலின்

``தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகிறது... ஏன் மத்திய அரசே தமிழக அரசின் திட்டத்தைதான் அமல்படுத்திவருகிறது. ஆகவே, `திராவிட மாடல்' ஆட்சி மற்ற மாநிலத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது" என்ற கருத்தை தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிவருகின்றனர் தி.மு.க-வினர். ஆனால் எதிர்தரப்பில், ``திராவிட மாடல் அரசு வழிகாட்டுகிறது என்பதில் துளியும் உண்மையில்லை. `தி.மு.க இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ என்ற பொய்யுரையை மேடைதோறும் பேசி, மக்களை ஏமாற்றுகிறார்கள் தி.மு.க-வினர்" என்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா” என தி.மு.க தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசியபோதும், ”இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டுவோம். தமிழ்நாட்டை முன்னேற்றுகின்ற `திராவிட மாடலை' இந்தியா முழுமைக்கும் கொண்டுசேர்ப்போம். ஒன்றிய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னதமான அரசை தலைநகர் டெல்லியிலும் அமைப்போம்” என்று குறிப்பிட்டிருந்தார் முதலமைச்சர்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``சமத்துவமிக்க சமுதாயத்தை அமைத்து அனைத்துத் தரப்பினரையும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கில், வளர்ச்சித் திட்டங்களைத் தரும் ஆட்சி மாடலே, `திராவிட மாடல்’ ஆட்சி. எளிய மக்களின் வளர்ச்சிக்காக இலவசத் திட்டங்களை நாங்கள் அறிவித்தபோது கேலி பேசியது பா.ஜ.க. நாங்கள் அமைத்துக் கொடுத்த ஃபார்முலா வெற்றியடைந்ததும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தி.மு.க அறிமுகப்படுத்திய திட்டங்களை அமல்படுத்துகின்றன. இதுவரை ஏறத்தாழ 17 இலவசத் திட்டங்களை பா.ஜ.க வாக்குறுதிகளாக அறிவித்திருக்கிறது.

கர்நாடக மாநிலத் தேர்தலிலும் இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியிருக்கிறது. குடிநீர் வடிகால் வாரியம் 1973-ம் ஆண்டே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிமுகப்படுத்தியதைத்தான், இன்று பிரதமர் மோடி `ஜல்சக்தி திட்டம்’ என அறிவித்திருக்கிறார். நாங்கள் 2007-ல் இலவச காஸ் அடுப்பு கொடுத்ததைத்தான், இப்போது பா.ஜ.க செய்கிறது.

மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசுக்குப் பெரும் பாரபட்சம் காட்டிவரும் பட்சத்திலும், சீரான நிதி நிர்வாகத்தால் பல திட்டங்களை அறிவித்துவருகிறது நமது அரசு. மேலும் தமிழ்நாடு அரசுக்கு நிதி ஆதாரமாக டாஸ்மாக் இருப்பதுபோல் போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்டும் முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம், 13-வது மாநிலம்தான் தமிழ்நாடு. நாங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டமும் தேசிய அளவில் கவனம் பெறுகிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

`திராவிட மாடல்’ என்பது இந்தியாவின் நிர்வாக மாடல். விவசாயக் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் திட்டம், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணம், இலவச மின்சாரத் திட்டங்கள், பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்குதல், கல்வி வளர்ச்சித் திட்டங்கள், பசிபோக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டம் எனத் தி.மு.க அரசின் சமூகநலத் திட்டங்களையும் மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் கல்வி, தொழில்துறை, பொருளாதாரத் திட்டங்கள் என ஒவ்வொன்றையும் இதர மாநிலங்கள் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளாகவும் கொடுத்துவருகிறார்கள்.

ஆகவேதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், `திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா’ எனச் சொல்கிறார்" என்றார்.

மோடி
மோடி

தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைப் பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் நம்மிடம், ``இந்தியாவில் அறிவிக்கப்படும் நல்ல திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலிருந்துதான் சென்றிருக்கின்றன என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறது தி.மு.க. குஜராத்தின் சாதனைகளை `குஜராத் மாடல்' என்கிறோம், டெல்லியின் சாதனைகளை `டெல்லி மாடல்' என்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை மட்டும் ஏன் `திராவிட மாடல்' என்கிறார்கள்... தமிழ்நாடு முன்மாதிரியான மாநிலமாகத் திகழ்வதென்றால் மகிழ்வான செய்திதான். ஆனால், தி.மு.க-தான் இந்தியாவுக்கு வழிகாட்டுவதாக இவர்கள் சொல்வதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

1973-லேயே குடிநீர் வடிகால் வாரியம் அமைத்துவிட்டார்கள் என்றால் மத்திய அரசின் `ஜல்ஜீவன் திட்டம்’ தமிழகத்துக்கு வேண்டாம் என்று இவர்களால் சொல்ல முடியுமா... நடைமுறைப்படுத்தும் திட்டங்களெல்லாம் அவர்கள் கொண்டுவந்ததுபோல் பேசுகிறார்களே... மத்திய அரசின் நிதியை மாநில அரசு பெறவில்லையா... ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில் பிரதமர் மோடி எத்தனை திட்டங்களை தமிழகத்துக்கு அர்ப்பணித்திருக்கிறார் என்பதையெல்லாம் இருட்டடிப்பு செய்து, எல்லாமே அவர்கள் கொண்டுவந்ததாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஊழல், நிர்வாகச் சீர்கேடு எனப் பல உதாரணங்களைத் தி.மு.க-வின் ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லலாம். டாஸ்மாக் விற்பனையில் இலக்கு வைத்துச் செயல்படுகிறார்கள், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து பாதுகாப்பற்ற சூழல் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.

ராம ஸ்ரீநிவாசன்
ராம ஸ்ரீநிவாசன்

மத்திய அரசுடனான இணக்கமான போக்கை விரும்பாதவர்கள், ஆளுநர் என்ற பதவிக்குரிய மரியாதையைத் தரத் தவறியவர்கள், கஞ்சா போதைப் புழக்கத்தை வேடிக்கை பார்க்கும் இவர்களா, தேசத்துக்கு வழிகாட்டப்போகிறார்கள்... பழைய ஓய்வூதியத் திட்டத்தை வாக்குறுதியாக அறிவித்துவிட்டு, செயல்படுத்த முடியாது என்கிறார் நிதியமைச்சர். இவையெல்லாம்தான் திராவிட மாடல் ஆட்சியா.. முதல்வர் ஸ்டாலின், இத்தனை குளறுபடிகளைத் தன்னுடைய ஆட்சி நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு, மற்ற மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா எனப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.