Published:Updated:

செந்தில்பாலாஜி விளக்கம் சரியா? 'அணிலாடும் மின்கம்பம்; மின்வெட்டுக்கு காரணமா?- விளக்கும் பொறியாளர்

மின் கம்பத்தில் அணில் ( ட்விட்டர் )

”மின் கம்பங்களில் அணில்கள் ஓடுவதால் தான் அதிகளவில் மின் தடை ஏற்படுகிறது” என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்படுகிறது. அமைச்சர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை?

செந்தில்பாலாஜி விளக்கம் சரியா? 'அணிலாடும் மின்கம்பம்; மின்வெட்டுக்கு காரணமா?- விளக்கும் பொறியாளர்

”மின் கம்பங்களில் அணில்கள் ஓடுவதால் தான் அதிகளவில் மின் தடை ஏற்படுகிறது” என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது சமூக வலைத்தளங்களில் கேலி செய்யப்படுகிறது. அமைச்சர் சொன்னது எந்த அளவிற்கு உண்மை?

Published:Updated:
மின் கம்பத்தில் அணில் ( ட்விட்டர் )

தி.மு.க அரசுக்கும் மின் தடைக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் ஆங்காங்கே இருந்த மின் தடை தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகச் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. முந்தைய தி.மு.க ஆட்சியின்போது இருந்ததுபோல பல பகுதிகளில் நேரம் குறிப்பிட்டு மின் வெட்டு செய்யப்படுவதாகவும் கால நேரம் பார்க்காமல் மின் வெட்டு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. மின் வெட்டுப் பிரச்னையை போக்க 'மின்னகம்' என்ற 24*7 சேவை மையம் தொடங்கப்பட்ட போதும் மின் வெட்டுப் பிரச்னை தொடர்பான சர்ச்சை நீடித்துக்கொண்டிருக்கிறது. “மாநிலத்திலுள்ள அனைத்து மின்‌ நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான‌ நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின்‌ தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும், அ.தி.மு.க ஆட்சி தமிழ்நாடு மின்சார வாரியத்தை சுமார் 1.59 லட்சம் கோடி கடனில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளைப் புனரமைக்கப்படும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீனத் தொழில்நுட்பங்களையும், நுண் மின் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி,மின் சேமிப்பை உயர்த்துதல் விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” எனச் சட்டப்பேரவையில் மின்சார வாரியம் தொடர்பாக ஆளுநர் பேசியதை மையமிட்டு தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டிவிட்டரில் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

ஜூன் 4-இல் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் “ஆங்காங்கே மின்வெட்டுகள் இருக்கின்றதே” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு “ஆங்காங்கே மின்தடை இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். குறிப்பிட்டு, இவ்விடங்களில் மின்வெட்டு இருக்கிறது எனத் தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று மாண்புமிகு முதல் அமைச்சரின் அனுமதி பெற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். கடந்த டிசம்பர் 2020-க்குப் பிறகு, தேர்தலை மனதில் வைத்து முந்தைய ஆட்சியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியைச் செய்யாமல் விட்டுவிட்டார்கள். மின் கம்பங்களில் ஆங்காங்கு மரங்கள், செடிகள் மோதியிருக்கும். அவற்றை எல்லாம் அகற்றும் பணியையும் செய்யவில்லை. இதனால், சில இடங்களில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும் பொழுது அதில் அணில் ஓடும். அணில் மின்கம்பிகளில் ஓடும்போது இரு கம்பிகளும் இணைவதால் மின்தடை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைகள் வரும்போதுதான் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். மற்றபடி கொரோனா ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டாம் எனத் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனப் பதிலளித்தார்.

மீம்கள்
மீம்கள்
ட்விட்டர்

இந்தப் பேட்டியில் ‘அணில் மின் கம்பியில் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது’ என்று அமைச்சர் சொல்லும் பகுதி மட்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கடந்த இரண்டு தினங்களாக மீம் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். #அணில்தான்_காரணம் என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள் மட்டுமின்றி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடங்கி பல அரசியல் தலைவர்களும் இதை வைத்து கேலி செய்து வருகிறார்கள். அதே நேரம் மின் கம்பிகளில் அணில் ஓடுவதால் மின் தடை ஏற்படுவது என்பது உலகம் முழுவதும் இருக்கும் பிரச்னைதான் என தி.மு.க-வினர் சில கட்டுரைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

அணில் ஓடினால் மின் தடை ஏற்படுமா என்பது குறித்து முன்னாள் மின்வாரிய மூத்த பொறியாளர் செல்வராஜிடம் கேட்டோம் “உயர் மின் அழுத்தம் முதல் சாதாரண மின் கம்பிகள் வரை அனைத்துமே மேல், கீழ் என மிகப்பெரிய இடைவெளியுடன் தான் அமைக்கப்பட்டிருக்கும். அப்படியிருக்கும் போது வெறும் 250 கிராம் இருக்கும் அணில் அந்தக் கம்பிகளில் ஓடுவதால் மின் தடை ஏற்படுவது என்று சொல்வது எல்லாம் அபத்தமான கருத்து. பறவைகள் கூட்டமாக இருக்கும்போது அதாவது நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் ஒரே நேரத்தில் மின் கம்பிகளில் உட்காரும்போது அவற்றின் எடையின் காரணமாக சில நேரம் அப்படி ஏற்படலாம். ஆனால், அதுவும் கூட எப்போதாவது நடக்கும் செயல்தான். மின் கம்பிகளுக்கு இடையே மரங்கள் வளர்ந்து மழை மற்றும் புயல் காலங்களில் அவை முறிந்து விழும்போது மின் தடைகள் ஏற்படும். இதை மின்வெட்டு என்று சொல்ல முடியாது. மின்தடைக்கும், மின் வெட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல், வாரியத்தில் தயார்செய்து கொடுத்ததை வைத்துக் காமெடி செய்து வருகிறார்கள்.

செல்வராஜ்
செல்வராஜ்

கடந்த ஒன்பது மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போதுதான் எல்லாம் நடக்கிறது என்று அமைச்சர் சொல்கிறார். ஏன் இவ்வளவு நாட்களாகப் பராமரிப்பு பணிகளை நடத்தவில்லை என அந்த ஊழியர்களை அமைச்சர் கேட்க வேண்டியதுதானே. அதைவிட்டு விட்டு ஏன் தேவையில்லாத கதைகளைப் பேச வேண்டும்” என அணிலுக்கும் மின் தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்கினார்.

அணில்கள் மூலம் மின் தடை ஏற்படும் நிகழ்வு உலகம் முழுக்கவே நடைபெறுகிறது. அமெரிக்காவில் நடக்கும் மின் தடைகளில் சுமார் 20 சதவிகித மின் தடைக்கு அணில்கள் காரணம் என அந்நாட்டுச் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. அணில்கள் அதிகம் வாழும் வனப்பகுதிகளில் ஏற்படும் மின் தடைக்குக் காரணமும் அணில்கள்தான் என்பதால் வனப்பகுதியில் கூடுதல் திறனுடைய மின்கம்பிகளைப் பயன்படுத்துகின்றனர். அங்கே, இன்ஸல்டேசன் எனப்படும் மின் கம்பிகளில் பிளாஸ்டிக் பம்புகளைச் செருகிப் பாதுகாக்கும் முறையையும் பின்பற்றுகிறார்கள். மேலும், மின்கம்பி செல்லும் பாதையில் எந்த மரமோ செடிகளோ தொடர்பு கொள்ளாத வகையில் பராமரிப்பு பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றன. அணில்கள் மட்டுமல்ல எலி, எறும்புகள், பறவைகள், எருதுகள், குதிரைகள் போன்ற பெரிய விலங்குகள் மூலமாகவும் மின் தடை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

மின் கம்பத்தில் அணில்
மின் கம்பத்தில் அணில்
ட்விட்டர்

ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவில்தான் அதிகம். தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில நிகழ்வுகள் இதேபோல நிகழ்வுகள் நடக்கின்றன என்றாலும் எத்தனை மின் தடை சம்பவங்கள் விலங்குகளால் ஏற்பட்டுள்ளன என்ற சரியான தகவல்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் இல்லை. அதனால்தான் அமைச்சரின் பேச்சு கேலிக்கு உள்ளாகியிருக்கிறது.

“கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும்கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன - என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன். அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாகச் சித்திரிக்கும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; இணையத்தில் தேடிப் படித்திருக்கலாம். பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் போதும் மின்தடை ஏற்படுகிறது.

அணில்களால் மின் தடை
அணில்களால் மின் தடை
விக்கிப்பீடியா

களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குப் பெரிதன்று. திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்” என விமர்சனங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். நம்முடைய எதிர்பார்ப்பும் அதுதான்.