Published:Updated:

மோடி வந்த நேரத்தில் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’... கர்நாடகத் தேர்தல் மட்டும்தான் காரணமா?!

அண்ணாமலை

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பயணித்தார். ஆனால், இப்போது மோடி வந்தபோது, தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை இல்லை.

Published:Updated:

மோடி வந்த நேரத்தில் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’... கர்நாடகத் தேர்தல் மட்டும்தான் காரணமா?!

சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு பயணித்தார். ஆனால், இப்போது மோடி வந்தபோது, தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை இல்லை.

அண்ணாமலை

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்து கிளம்பிய மோடி, தன்னுடைய காரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஏற்றிக்கொண்டார். திண்டுக்கல்லிலிருந்து மதுரை விமான நிலையம்வரை சுமார் ஒரு மணி நேரம் பிரதமருடன் காரில் பயணம் செய்தார் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலை

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோதெல்லாம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் இருப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’ ஆகிவிட்டார். சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில், அண்ணாமலை டெல்லிக்குச் சென்றுவிட்டார். முன்பு, காரில் பிரதமருடன் பயணிக்க அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைத்ததுபோல, இந்த முறை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிரதமர் மோடி வந்திருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் அண்ணாமலை இல்லை என்கிற விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘கட்சி நிகழ்ச்சிக்கு பிரதமர் வரவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கத்தான் அவர் வந்தார். எனவே, பிரதமர் வரும் நேரத்தில், கட்சித் தலைவரான அண்ணாமலை இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை’ என்று பா.ஜ.க தரப்பில் சொல்கிறார்கள்.

காயத்ரி ரகுராம் ட்வீட்
காயத்ரி ரகுராம் ட்வீட்

அதுபோக, ‘கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றியதால், இந்தத் தேர்தலில் அவருக்கு பா.ஜ.க தலைமை முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறது. அதில் அவர் கவனம் செலுத்திவருகிறார். அதனால், பிரதமர் வந்த நேரத்தில் சென்னையில் அவரால் இருக்க முடியவில்லை’ என்கிற காரணமும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், பா.ஜ.க தரப்பினர் சொல்லும் காரணங்களை ஏற்காத எதிர்த் தரப்பினர், ‘பா.ஜ.க-வில் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பதால், பிரதமர் வரும் நேரத்தில் அவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள்’ என்கிறார்கள்.

இது தொடர்பாக, பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகியாக இருந்து கட்சியிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “மோடி ஜி சென்னை, மைசூர், பந்திப்பூர் முதுமலைக்கு வந்து டெல்லிக்குச் சென்றார். வானதி அக்காகூட மகிழ்ச்சியுடன் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு ‘வந்தே பாரத்’ ரயில் பயணத்தை முடித்துவிட்டுச் சென்றார். இந்தக் கூட்டத்துக்கு ஏன் மேனேஜர் ஊருக்கு முன்னாடி சென்றார்... இப்போ, மேனேஜர் ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அவரை நம்புவதன் மூலம் எதையும் விவாதிக்க முடியும்... அவர் டேப் செய்வாரா?” என்று காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

அண்ணாமலை - நரேந்திர மோடி
அண்ணாமலை - நரேந்திர மோடி

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.

“ஆடியோ, வீடியோ விவகாரம் உட்பட பல பிரச்னைகள் தொடர்பாக அண்ணாமலை மீது கட்சித் தலைமைக்கு ஏராளமான புகார்கள் போயிருக்கின்றன. அ.தி.மு.க-வுடனான கூட்டணி நிலைப்பாட்டில் கட்சித் தலைமையுடன் அண்ணாமலை வெளிப்படையாகவும் கடுமையாகவும் முரண்படுகிறார். ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பா.ஜ.க-வை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும். நான் தேசிய மேனேஜர் கிடையாது. என் ஸ்டைலில் செயல்பட முடியாதபோது நான் ராஜினாமா செய்துவிட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்’ என்றெல்லாம் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று அமித் ஷா சொன்ன பிறகும்கூட, அண்ணாமலை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. இப்படியான சூழலில், மத்திய அமைச்சரும் முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகனுக்கு தமிழக பா.ஜ.க-வில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதுபோலத் தெரிகிறது. ஏனென்றால், ‘அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம். ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுவோம்’ என்றெல்லாம் எல்.முருகன் பேசுகிறார்.

இந்த நேரத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வருவதால், அதை ஒரு சாக்காக வைத்து அங்கு அண்ணாமலையை அனுப்பிவிட்டார் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்துவதுபோல, அவர்களின் வார் ரூம் தகவல்களைத் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி என நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, அங்கு அண்ணாமலை போய்தான் பா.ஜ.க-வுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், வேட்பாளர்களையே அண்ணாமலைதான் முடிவுசெய்வார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், பிரதமர் வரும் நேரத்தில் அண்ணாமலை இங்கு இல்லாததற்கான உண்மையான காரணம் எதுவென்பது உறுதியாகத் தெரியவில்லை. டெல்லியில் அண்ணாமலைக்கு பணிகள் இருந்தாலும், பிரதமர் வந்திருந்த நேரத்தில் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டுச் செல்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. மேலிடம் சொல்லித்தான் சென்னைக்கு வராமல் அவர் டெல்லியிலேயே இருந்தார் என்றும் ஒரு செய்தி உலாவுகிறது. அது உண்மையா என்பது தெரியவில்லை” என்கிறார் ப்ரியன்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடர்வது என்பதில் பா.ஜ.க தலைமை உறுதியாக இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியை அண்ணாமலை விரும்பாத காரணத்தால், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவரை எடுத்துவிட்டு தேசிய பொறுப்பை வழங்கப்போகிறார்கள் என்ற தகவலும் உலாவருகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!