Published:Updated:

தென்னிந்தியாவில் எடுபட்டதா `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ அரசியல்? - ஒரு பார்வை

The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தனது அரசியல் அஸ்திரமாக கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க, நாடாளுமன்ற எம்.பிக்கள் முதல் நாடுமுழுவதும் உள்ள அனைத்துதரப்பட்ட மக்களும் இந்த திரைப்படத்தை அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் எடுபட்டதா `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ அரசியல்? - ஒரு பார்வை

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தனது அரசியல் அஸ்திரமாக கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க, நாடாளுமன்ற எம்.பிக்கள் முதல் நாடுமுழுவதும் உள்ள அனைத்துதரப்பட்ட மக்களும் இந்த திரைப்படத்தை அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

Published:Updated:
The Kashmir Files | தி காஷ்மீர் ஃபைல்ஸ்

மார்ச் 2022, 11-ம் தேதி, காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியானது முதலே நாடுமுழுவதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் காஷ்மீரில் 1990-களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்களின் வலியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக ஒரு தரப்பினரும், வெறுமனவே இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டிவிடும் விதமாக, இந்தப்படம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’

குறிப்பாக, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை தனது அரசியல் அஸ்திரமாக கையிலெடுத்திருக்கும் பா.ஜ.க, நாடாளுமன்ற எம்.பிக்கள் முதல் நாடுமுழுவதும் உள்ள அனைத்துதரப்பட்ட மக்களும் இந்த திரைப்படத்தை அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஹரியானா, உத்தரகாண்ட், கோவா, குஜராத், கர்நாடகம், மணிப்பூர், திரிபுரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு 100% வரிவிலக்கு அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இந்த திரைப்படத்தைக் காண்பதற்காக, ம.பி முதல்வர் அந்த மாநில காவல்துறையினர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்தார். அதேபோல, மணிப்பூர் முதல்வரும் அரசுப் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தின், கோட்டா மாவட்டத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரையிடப்படுவதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வரும் ஏப்ரல் 21 வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், கங்கனா ரணாவத், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் என மிகப்பெரிய ஆதரவுடன், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வட மாநில திரையரங்குகளில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், திரைப்படம் வெளியான 10 நாள்களில் 170 கோடியைத் தாண்டி வசூல் செய்திருக்கிறது. பா.ஜ.க ஆதரவுடன் வடமாநிலங்களில் அரசியல் மற்றும் வணிக ரீதியில் மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம், வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தென்னிந்தியாவில் எந்த அளவுக்கு எடுபட்டது என்று பார்க்கலாம்.

காஷ்மீர் பைல்ஸ்
காஷ்மீர் பைல்ஸ்

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெளியாகி வடமாநிலங்களில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் தீவிரமாக ஏற்படுத்திவந்த நிலையில், மிகவும் தாமதமாகவே தென்னிந்திய மாநிலங்களில் இத்திரைப்படம் கவனிக்கப்பட்டது. குறிப்பாக, பிரதமர் மோடி நாடாளுமன்ற எம்.பி-க்களிடையே `காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை அவசியம் நீங்கள் அனைவரும் காணவேண்டும்' என பேசியது, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் நாடாளுமன்றத்தில், இந்த திரைப்படத்தை ஆதரித்தும் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மூலக்காரணம் காங்கிரஸ் கட்சிதான் என விமர்சித்து பேசியது, பாஜக ஆளும் மாநிலங்கள் வரிச்சலுகை கொடுத்தது என பல்வேறு தாக்கங்களுக்குப் பிறகே காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தென்னிந்தியா கண்டுகொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளா:

அதன்பின்னர், இந்த காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு எதிராக, முதல் கண்டனக்குரலே தென்னிந்தியாவின் கேரளாவில் தான் எழுந்தது. காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் #TheKashmirFiles #RightToJustice போன்ற ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துகொண்டிருக்க, அதற்குப் பதிலடிகொடுக்கும் விதமாக கேரள காங்கிரஸ் கட்சி #Kashmir_Files vs Truth எனும் ஹேஷ்டேகுகளில், 1990-களில் உண்மையில் காஷ்மீரில் என்ன நடந்தது, யார் ஆட்சியில் இருந்தார்கள் என்பது தொடர்பான கருத்துக்களைப் பதிவிட்டது.

கேரள மாநில காங்கிரஸ் கட்சி
கேரள மாநில காங்கிரஸ் கட்சி

அதில், `` 1989 டிசம்பரில் பா.ஜ.க ஆதரவுடன் வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்தது. பி.ஜே.பி ஆதரவு பெற்ற வி.பி.சிங் அரசாங்கத்தின்கீழ் அடுத்த மாதம் ஜனவரி 1990-ல் பண்டிட்களின் இடப்பெயர்வு தொடங்கியது. அப்போது, பா.ஜ.க ஒன்றுமே செய்யவில்லை, நவம்பர் மாதம் 1990 வரை வி.பி.சிங்கிற்கு ஆதரவைத் தொடர்ந்து வழங்கியது. மேலும், ஆர்.எஸ்.எஸ்.காரரான ஆளுநர் ஜக்மோகனின் வழிகாட்டுதலின்படிதான் பண்டிதர்கள் ஒட்டுமொத்தமாக பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினார்கள். இந்த இடப்பெயர்வின்போது அயோத்தியில் ராமர் கோயில் பிரச்னையில் பா.ஜ.க நாட்டில் இந்து - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு போலி சீற்றத்தை உருவாக்க பா.ஜ.க-வின் பிரசாரத்திற்கு பண்டிட்களின் பிரச்னையை கையிலெடுத்தது. இன்று, பண்டிட்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க, மத்தியில் இரண்டு முறையும், காஷ்மீரில் ஒரு முறையும் ஆட்சியில் இருந்தும், அவர்களை காஷ்மீருக்கு அழைத்து வரவோ, குடியமர்த்தவோ இல்லை" என கடுமையாக குற்றம் சாட்டி தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

வி.பி.சிங்  மற்றும் பாஜக தலைவர்கள்
வி.பி.சிங் மற்றும் பாஜக தலைவர்கள்

தமிழ்நாடு:

தமிழகத்திலும், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை புரமோட் செய்ய பா.ஜ.க., தனது கட்சி சார்பில் சென்னையிலுள்ள திரையரங்கு ஒன்றில் பொதுமக்களுக்கு சிறப்புக் காட்சியும் திரையிட்டுக் காண்பித்தது. பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா, `` `Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது" எனக் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், ``மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசும் இந்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அதேபோல, பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, `காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்க்கவேண்டும்' என வலியுறுத்தினார். ஆனால் தி.மு.க அரசோ காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் விவகாரத்தை பெரிதுபடுத்தாமல், தமிழகத்தில் அதை பேசுபொருளாக்குவதற்கான எந்த கன்டென்டையும் கொடுக்காமல் கடந்து சென்றது.

தமிழக பாஜக
தமிழக பாஜக

அதேசமயம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ``இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த வரலாற்றுப் பின்னணியை முற்றிலும் சிதைக்கிற வகையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பு 370-ஐ ரத்து செய்து விட்டு, அந்த மாநிலத்தை, அம்மாநில மக்களின் ஒப்புதலைப் பெறாமல் மூன்று பிரிவுகளாகப் பிரித்துவிட்டது. இதனால் அங்கே வாழ்கிற மக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், அங்குள்ள அரசியல் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் மோடி ஆட்சியால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களது பேச்சுரிமையும் கருத்துரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.

கே.எஸ் அழகிரி
கே.எஸ் அழகிரி

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும், அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களோடு சகோதர, சகோதரிகளாக வாழ்ந்த பண்டிட்டுகளுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைத் திரித்துக் கூறுகிற வகையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் மூலம், மதத் துவேஷத்தை வளர்த்து மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே பாஜகவின் நோக்கமாகும். அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ’தி காஷ்மீர் பைல்ஸ்" என விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

புதுச்சேரி:

பா.ஜ.க கூட்டணி ஆளும் புதுச்சேரியில், முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் சேர்ந்து காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ``சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருந்த காஷ்மீர் பண்டிட்களைப் பற்றிய இந்த வரலாற்றுக் கதை அனைவரையும் நெகிழவைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பார்க்கும்போது எவ்வளவு உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன, மறுக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது. உண்மையில் கனத்த இதயத்துடன்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடிகிறது” எனக்கூறினார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும் கவர்னர் தமிழிசை
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பார்க்கும் கவர்னர் தமிழிசை

இதையடுத்து, ஒரு மதத்துக்கு ஆதரவாகவும், இன்னொரு மதத்துக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திரைப்படத்தை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஒருசேர பார்த்தது தவறு என கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான சிவா, ``காஷ்மீரத்தைச் சேர்ந்த புரோகிதர்களான பண்டிட்கள் அங்கே ஊடுருவியுள்ள தீவிரவாதத்தால் தங்கள் வீடுகளையும், மாநிலத்தையும் விட்டு வெளியேறிய துயரத்தைப் பார்ப்பவர் மனம் உருகும்படியும், இஸ்லாமிய சகோதரர்கள் மீது வெறுப்பை விதைக்கும்படியும் மத உணர்வுகளைத் தூண்டும்படி திரைக்கதை அமைந்துள்ளதோடு அனைத்து காஷ்மீர் முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகச் சித்திரித்துள்ளது `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. மேலும், நாடு முழுவதும் இந்து மத உணர்வைத் தூண்டி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை விதைக்க `காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்க்க இலவச டிக்கெட்டுகள் கொடுத்துப் பார்க்கவைக்கிறது பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டக்கூடிய இந்தப் படம், நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்களின் சகோதரத்துவ நெறிகளை அச்சுறுத்துவதாக உள்ளது" என குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார்.

 நாராயண சாமி
நாராயண சாமி

அதேபோல புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி, ``காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற மதக்கலவரத்தை தூண்டுகின்ற படத்தை புதுச்சேரி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர். இந்த படத்தின் மீது ஆளுநருக்கு என்ன அக்கறை? இப்படத்தை பார்க்க வேண்டும் என அரசுத் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முதலமைச்சரும் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்தப் படத்தை சென்று பார்த்துள்ளார். இதிலிருந்து ஆளுநர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அரசின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சென்று பார்க்கும்போது, மதக்கலவரத்தை தூண்டுவதற்கு உதாரணமாகவும், காரணமாகவும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழும். எனவே இந்த படத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிரா:

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு மகாராஷ்டிர அரசு வரிவிலக்கு வழங்கவேண்டும் என அம்மாநில பா.ஜ.க-வினர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ``காஷ்மீர் போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது ஒரு படம் மட்டும்தான். அந்தப் படம் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் உதவாது" என கூறியிருக்கிறார். மேலும், ``படத்தில் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையா பொய்யா என்பது குறித்து பின்னர் விவாதிக்கலாம். ஆனால் படத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் பல படத்தில் இடம்பெறவில்லை. பண்டிட்டுகள் வெளியேற்றம் நடந்தபோது முஸ்லிம்களும் உயிரிழந்தார்கள். ஏராளமான அதிகாரிகளை முஸ்லிம்கள் காப்பாற்றியுள்ளனர். இவையெல்லாம் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இடம்பெறவில்லை" என விமர்சனம் செய்திருக்கிறார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

அதேபோல சிவசேனாவுடன் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ``பா.ஜ.க கூறிவதுபோல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒன்றும் பண்டிட்கள் வெளியேற்றம் நிகழவில்லை, பா.ஜ.க ஆதரவுள்ள பிரதமர் வி.பி.சிங், மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத், காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் சிங் காலத்தில்தான் இவை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் இப்போது கூச்சல்போடும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் அப்போது ஆளுநர் ஜக்மோகனுக்கு ஆதரவாகத்தான் இருந்தனர். சமூகத்தை பிளவுபடுத்தும் இதுபோன்ற திரைப்படங்கள் தவிர்க்கப்பட வேண்டும்" எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

தெலங்கானா:

தெலங்கானா மாநிலமும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ``தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பா.ஜ.க தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறது. தொழில்துறை ஃபைல்ஸ், பொருளாதார ஃபைல்ஸ், பற்றியெல்லாம் யோசிக்காத பா.ஜ.க அரசு, ஏன் காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து மட்டும் யோசிக்கிறது?” என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், ``மதவெறியைத் தூண்டும் இதுபோன்ற படங்களை நாம் ஊக்குவிக்கக்கூடாது" எனவும் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism