Published:Updated:

தமிழகத்தின் எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைகிறதா?! - காரணமும் பின்னணியும்

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைகிறதா? இதனால் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய நலத்திட்டம் குறையுமா?

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என்று இரண்டு பிரிவுகள் உண்டு. மக்களவையை (லோக் சபா) பொறுத்தவரை மொத்தம் 545 உறுப்பினர்கள். இதில் 543 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரும் இடம்பெறுவார்கள். மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மாநிலங்களவையைப் (ராஜ்ய சபா) பொறுத்தவரை மொத்தம் 250 உறுப்பினர்கள். இதில் 12 உறுப்பினர்கள், கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிப்பார். மீதமுள்ளவர்கள், மாநிலச் சட்டசபை உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது 17-வது மக்களவை நடைபெறுகிறது. மக்களவைத் தொகுதிகளுக்கான எல்லை மற்றும் சீரமைப்பு என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.

`கூடுகிறது நாடாளுமன்றம்; விவசாயிகள் போராட்டத்தில் போலீஸார் குவிப்பு!’ - டெல்லி எல்லையில் பதற்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களின் தொகுதியில் மேம்பாடுகள் செய்வதற்காக நிதி ஒதுக்க நீண்டகாலமாகக் கோரிக்கைகளை வைத்தனர். இந்த பரிந்துரை மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 1993-ம் ஆண்டு பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதி என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி, கடந்த 1993-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் நாள் `நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அந்த தொகுதிக்குட்பட்ட மேம்பாட்டுப் பணிகளை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்ளலாம். மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவர் விரும்பியபடி, மேம்பாட்டுப் பணிகளை ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தலாம். இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஒரு கோடியிலிருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ஐந்து கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிதியை எப்படிப் பயன்படுத்தவேண்டும், எந்தெந்த திட்டங்களுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று பல விதிமுறைகளும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்கு உட்படப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகளைப் பரிந்துரைக்க முடியும். உறுப்பினர் மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளின் வழியாகச் செய்யமுடியும். கடந்த ஜூன் 2016-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் குறித்த வழிகாட்டுதலில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த நிதியில் பொதுச்சுகாதாரம், குடிநீர், ஆரம்பக்கல்வி, சாலைகள் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய மாநில அரசுகள் நிதி திரட்டும் வேலையைச் செய்து வருகிறது. இந்த பணிகளுக்கு உதவும் வகையில், கடந்த ஆண்டு பிரதமர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஊதியமும் மற்றும் ஓய்வூதியம் அடுத்த ஒரு ஆண்டுக்கு 30 சதவிகிதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. அதுமட்டுமில்லாது, அடுத்த இரண்டு ஆண்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்றும் இதன்மூலம் கிடைக்கப்பெறும் 7,900 கோடி ரூபாய் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டது.

உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி அளவில், குறைந்தபட்சம் பட்டியல் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 7.5 சதவிகிதமும், பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதியில் 15 சதவிகிதமும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். ஒருவேளை அவர்கள் பகுதியில் போதிய பட்டியல் இன மக்கள் இல்லை என்ற நிலையில், தங்களின் தொகுதிக்கு வெளியில் இருக்கும் பட்டியல் இன மக்கள் மக்களுக்கு மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்குப் பரிந்துரை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடந்த 19-ம் தேதி ஓய்வுபெற்றார். தென்காசியை பொதுத் தொகுதியாக மாற்றக்கோரித் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், அவரின் கடைசி பணி நாளன்று நீதிபதி புகழேந்தியுடன் இணைந்து வழங்கிய உத்தரவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. ``கடந்த 1990-ம் ஆண்டு, வாஜ்பாய் அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கில் கவிழ்ந்தது. ஒரு எம்.பி-யின் வாக்கு என்பது ஓர் ஆட்சியையே கவிழ்க்கும் அல்லது உருவாக்கும். 1962-ல் நாடாளுமன்றத்துக்கு 41 எம்.பி-க்கள் இருந்துள்ளனர். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்றுக் குடும்பக் கட்டுப்பாட்டைத் தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக மக்கள்தொகை குறைந்தது. இதன் விளைவாக, தமிழகத்தில் 41-ஆக இருந்த எம்.பி-க்களின் எண்ணிக்கை 39-ஆகவும், ஆந்திராவில் 42-ஆக இருந்த எம்.பி-க்களின் எண்ணிக்கை 40-ஆகவும் குறைந்தது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்.பி-க்களின் எண்ணிக்கை அதிகம்" என்றார்.

மக்கள் தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திச் செயல்படுத்திய இந்த மாநிலங்களின் அரசியல் அதிகாரம், இரண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததன் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரம் மற்றும் உரிமைகள் சமமாக இருக்க வேண்டும் - நீதிபதி கிருபாகரன்

மேலும் ``அதேநேரம், மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதால் தமிழகத்தில் 1967 முதல் நடந்த 14 நாடாளுமன்றத் தேர்தல்களில் தலா இரண்டு எம்பி-க்கள் வீதம் மொத்தம் 28 எம்.பி-க்கள் நமக்குக் கிடைக்காமல் போய்விட்டனர். ஒரு எம்.பி மூலமாக அந்த மாநிலத்துக்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.200 கோடி மதிப்பில் நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கணக்கிட்டால், கடந்த 14 தேர்தல்களில் இரண்டு எம்.பி-க்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.5,600 கோடியை ஏன் வழங்கக் கூடாது? அதேபோல எதிர்வரும் தேர்தல்களில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தமிழக எம்.பி-க்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால், அதற்குப் பதிலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏன் உயர்த்தக் கூடாது? இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசு நான்கு வாரங்களில் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 545-ல் இருந்து 1,000-ஆக உயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருப்பதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்தியாவில் மக்கள்தொகை 55 கோடியாக இருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 545-ஆகா இருந்ததாகவும். தற்போது எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகம் சென்றதால், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளதாகவும். இந்த திட்டத்தை மனதில் கொண்டு தான் புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

``நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதைச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சம்பந்தமான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் 1,000-ஆக உயர்த்தினால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் மணிஷ் திவாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த 1993-ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தை அறிவித்ததிலிருந்தே பல்வேறு தலைவர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிதி செலவிடுவதில் பல்வேறு முறைகேடு நடப்பதாகவும், தணிக்கை அறிக்கையில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் இந்த திட்டம் இதுவரை நீடித்து வருகிறது. 16-வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நிதியில் 85 சதவிகித நிதியை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 1,806 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படவில்லை.

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

தற்போதுள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை, கடந்த 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவிவகித்த நேரத்தில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1,000-ஆகா உயர்த்தவும்ம் மக்களவை எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்கவும் பரிந்துரை செய்திருந்தார். தற்போது உள்ள மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் உயர்த்தப்பட்டால் அதில் அதிகம் பாதிக்கப்படப்போவது தென் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தான். அதிலும், தமிழகம் தான் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட எக்ஸ்பிரஸ் வேகத்தில் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசு, இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு