கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றிவாய்ப்பு என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புச் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாக களமிறங்கி பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் மே 8-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பிறகு, எந்த வகையிலும் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதி. அதை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டால், அதை விதிமீறலாகக் கருதப்படும். ஆனாலும், தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறைமுகமான பிரசாரத்தில் கட்சியின் தொண்டர்களும் கீழ்மட்ட நிர்வாகிகளும் ஈடுபடுவது வழக்கம். ஆனால், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பிறகு, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் பிரதமர் மோடி.
நரேந்திர மோடி பெயரிலுள்ள ட்விட்டர் பக்கத்திலும், பா.ஜ.க-வின் ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோ வெளியிடப்பட்டது. “கர்நாடக மக்களின் கனவுகளே தன்னுடைய கனவுகள்” என்று அந்த வீடியோவில் மோடி கூறியிருக்கிறார். மேலும், “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கர்நாடகா குறிப்பிடத்தக்க பங்கை வகித்திருக்கிறது. உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. விரைவில், மூன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளருவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். கர்நாடகாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும்” என்று கூறியிருக்கிறார் மோடி.

மேலும் அவர், “கர்நாடகாவில் மூன்றரை ஆண்டுக்கால டபுள் இன்ஜின் அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. அது, கர்நாடகாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும், கர்நாடகா பா.ஜ.க தலைமையின் கீழ், 90 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதற்கு முன்பாக, சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கர்நாடகாவில் நகரங்களின் உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும், கிராமங்களில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், பெண்கள், இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் பா.ஜ.க அரசு உறுதியாகச் செயல்படும்” என்று பேசியிருக்கிறார்.
எட்டரை நிமிடங்களுக்கு ஓடக்கூடிய அந்த வீடியோவில், “முதலீடு, தொழில் ஆகியவற்றில் நம்பர் ஒன் மாநிலமாக கர்நாடகாவை கொண்டுவர விரும்புகிறோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் நம்பர் ஒன் மாநிலமாக கர்நாடகாவை கொண்டுவர விரும்புகிறோம். விவசாயத்திலும் நம்பர் ஒன் மாநிலமாக கர்நாடகாவைக் கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது” என்று கூறிய மோடி, “ஆகவே, கர்நாடகாவை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதற்கு, மே 10-ம் தேதி பொறுப்புள்ள குடிமக்களாக உங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதனால் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் செய்திருக்கிறது. “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன்கீழ் தண்டிக்கப்பட்டால், மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எம்.பி பதவியிலிருந்து தகுதியிழப்பார்கள்” என்றார் காங்கிரஸ் கட்சியின் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா.
பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்ற வார்த்தையை மட்டும்தான் மோடி பயன்படுத்தவில்லை. மற்றபடி, பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்பதுபோல்தான் அவர் கேட்டிருக்கிறார். பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த காலக்கெடு நிறைவடைந்த பிறகு, கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகள் தேர்தல் விதிகளை மீறுவது சகஜம். ஆனால், நாட்டின் பிரதமரே அந்த விதிமீறலைச் செய்திருக்கிறார்...பிரதமரே இப்படிச் செய்யலாமா என்று கொந்தளிக்கின்றன எதிர்க்கட்சிகள்.!