Published:Updated:

அடிக்கடி ரெய்டு... ஆனால், நடவடிக்கை மட்டும் இல்லை! - பரபரப்பை இழக்கிறதா `ரெய்டு’ அரசியல்?

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவ்வப்போது நடத்துகிற ரெய்டு அரசியலுக்கு என்ன முக்கியத்தும் இருக்கிறது?

அடிக்கடி ரெய்டு... ஆனால், நடவடிக்கை மட்டும் இல்லை! - பரபரப்பை இழக்கிறதா `ரெய்டு’ அரசியல்?

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவ்வப்போது நடத்துகிற ரெய்டு அரசியலுக்கு என்ன முக்கியத்தும் இருக்கிறது?

Published:Updated:
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்

கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியின்போது, முதல்வர் உட்பட அ.தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பல ஊழல் குற்றச்சாட்டுகளை தி.மு.க கிளப்பியது. உள்ளாட்சித்துறை பிளீச்சிங் பவுடர் வாங்கியது முதல் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்விட்டது வரை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகார்களை தி.மு.க அடுக்கியது. ``ஊழல்களின் கதாநாயகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலின், எடப்பாடி
ஸ்டாலின், எடப்பாடி

ஊழல் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கோரி மாநிலம் முழுவதும் தி.மு.க போராட்டம் நடத்தியது. “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அன்றைய சட்டமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிவந்தார். அவர் சொன்னதுபோலவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டு படலம் தொடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்தான் முதல் ரெய்டு நடைபெற்றது. ‘லஞ்ச ஒழிப்பு போலீஸ்’ எனப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உட்பட 20 இடங்களில் சோதனை நடத்தினர். அடுத்ததாக, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதையடுத்து, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, அக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர், டிசம்பர் மாதம் தங்கமணி, ஜனவரி மாதம் கே.பி.அன்பழகன் என மாதம் ஒருவர் எனக் கணக்கிட்டதுபோல, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடைபெற்றது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தபோது பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும், அது பற்றிப் பெரிதாக விவாதிக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, பெரிய அளவுக்கு பரபரப்பு இல்லை. சோதனைகள் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் முன்னாள் அமைச்சர்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இது பற்றி தி.மு.க-வினரிடம் கேட்டால், “ஊழல் வழக்கில் யாரையும் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 1996-ல் ஜெயலலிதா மீதும், பல அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், யாரையும் உடனே கைது செய்யவில்லை. ஜெயலலிதாவை கைதுசெய்ததுகூட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான். ஒருவரைக் கைதுசெய்ய சட்ட நடைமுறைகள் இருக்கின்றன” என்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களைச் சட்டப்படி உறுதிசெய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றே மக்கள் பார்க்கிறார்கள்.

தங்கமணி
தங்கமணி

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தும்போதெல்லாம், “அ.தி.மு.க-வை மிரட்டுவதற்கான ஒரு கருவியாக லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையை தி.மு.க அரசு கையாளுகிறது” என்ற விமர்சனம் பொதுவெளியில் வைக்கப்படுகிறது. ஆனாலும், இந்த ரெய்டு அரசியலை தி.மு.க அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது.

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது புதிய ஊழல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, அவர்களின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, கிராமங்களிலுள்ள தெரு விளக்குகள், எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட்டன. அந்தத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்து, தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப் பணிகளை வேலுமணி வழங்கியதாகவும், அதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் எஸ்.பி.வேலுமணி மீது புகார் சொல்லப்படுகிறது

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சக்கரணை கிராமத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு மாறாக, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சி.விஜயபாஸ்கர் சான்று வழங்கினார் என்பது குற்றச்சாட்டு. அது தொடர்பாக, சி.விஜயபாஸ்கர் உட்பட ஏழு பேர்மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். புதுக்கோட்டை, திருவள்ளூர் உட்பட13 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தொடர்ச்சியாக ரெய்டு மட்டும் நடக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், இந்தச் சோதனைகளால் முன்புபோல இப்போது பரபரப்பு காணப்படவில்லை. அ.தி.மு.க-வை அச்சுறுத்துவதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.