Published:Updated:

`திமுக, அதிமுக-வுக்கு டஃப் கொடுக்க முடியாது!’ -முருகனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் மாநில பாஜக?

எல்.முருகன்
எல்.முருகன்

`தமிழிசை விட்டுச்சென்ற இடத்தை இவரால் நிரப்பமுடியாது, நாம் என்னதான் பட்டியலினச் சமூகத்தவரைத் தலைவராக்கினாலும், அந்த சமூகத்தவர்களின் ஆதரவை நாம் பெற முடியாது.'

``தமிழிசை இடத்தை இவரால் நிரப்பமுடியாது. இதே நிலை தொடர்ந்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறமுடியாது. பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகனை மாற்றுங்கள்" என டெல்லி வட்டாரத்தை நாடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர். இவர்கள் முருகனை மாற்றத் துடிக்க என்ன காரணம் என்று கமலாலயம் வட்டாரத்தில் விசாரித்தோம்.

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராகக் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். அதனால், காலியான தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் அடுத்து அமரப்போவது யார் என்ற கேள்வி பல மாதங்களாக நீடித்து வந்த நிலையில், கட்சியில் உள்ள பல சீனியர் பெயர்களும் நாள்தோறும் அடிப்பட்டுக்கொண்டே இருந்தன. இந்தப் பட்டியலில் இடம் பெறாத ஒருவரான தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த எல்.முருகனை மாநில தலைவராக பா.ஜ.க தலைமை அறிவித்தது.

பட்டியலின சமூகத்திலிருந்து வழக்கறிஞர் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டதைத் தமிழக பிரதிநிதிகள் பலரும் விரும்பவில்லை. சிறுபான்மையின காவலனாக தி.மு.க தன்னை காட்டிக் கொண்டு வந்ததைத் தகர்த்தெறிந்து தாங்களும் சிறுபான்மையின மக்களின் சகிதமானவர்கள் என்றும், தி.மு.க தன்னை சிறுபான்மையின காவலனாகக் காட்டிக் கொண்டு வந்தாலும் எங்கே எங்கள் கட்சியைப் போலத் தாழ்த்தப்பட்ட ஒருவரைக் கட்சித் தலைவராக்க முடியுமா? என இறுமாப்புக் கொண்டது பா.ஜ.க. அதே நேரத்தில், எல்.முருகனுக்குப் பதவி கொடுத்து வெளியில் அழகு பார்த்தாலும் உள்ளுக்குள் குமுறித் தீர்த்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இதில்தான் பல்வேறு சச்சரவுகள் எழுதத்தொடங்கியிருப்பதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

கமலாலயம்
கமலாலயம்

இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். ``பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரான எல்.முருகன் இன்று வரையிலும் தன்னை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகவே நினைத்துக்கொண்டு செயல்படுகிறார். கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என யார் போன் அடித்தாலும் எடுப்பதில்லை. இவருக்கு முன்பு தமிழிசை இருந்தபோது கட்சியை எப்படி வழிநடத்தினார். கட்சிக்குள் எத்தனை அணிகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தினந்தோறும் பம்பரமாகச் சுழன்றதோடு நாள்தோறும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கும் டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், முருகனுக்குப் பத்திரிகையாளர்கள் போன் அடித்தால் கூட பேசுவதே கிடையாது. அதேபோலத்தான் கட்சி நிர்வாகிகளிடம் நடந்து கொண்டிருக்கிறார். இப்படி இருந்தால் கட்சியை எப்படிப் பலப்படுத்தமுடியும் நீங்களே சொல்லுங்கள். இவரின் செயல்பாடுகள் மற்றும் தலைவராக அறிவிக்கப்பட்ட வருத்தத்தைத் தென் மாவட்டம் மற்றும் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கொண்ட ஒரு பட்டாளமே தற்போது டெல்லி தலைவர்களை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.

எல்.முருகன்
எல்.முருகன்

அதில் எல்.முருகனுக்கெதிராக கொடி பிடித்து டெல்லிவரை தந்தியடித்துள்ள அவர்கள், தமிழிசை விட்டுச்சென்ற இடத்தை இவரால் நிரப்பமுடியாது என்றும், நாம் என்னதான் பட்டியலினச் சமூகத்தவரைத் தலைவராக்கினாலும், அந்த சமூகத்தவர்களின் ஆதரவை நாம் பெற முடியாது. இவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியைப் பெறமுடியாது. ஆகவே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தலைவரை மாற்ற வேண்டும்'' எனக் கூறி வருகிறார்களாம்.

தமிழிசை
தமிழிசை

ஆனால், பா.ஜ.க தலைமையோ, தற்போதைய நிலையில் எல்.முருகனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால், அது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். இப்போதைக்கு இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் தமிழக தலைவர்கள் விடாப்பிடி காட்டி வருவதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.

இதுகுறித்து பா.ஜ.க மாநிலபொதுச்செயாலாளர் கே.எஸ்.நரேந்திரனிடம் பேசினோம். ``தி.மு.க, அ.தி.மு.க- வைப்போல் எங்களது கட்சியில் தனித்தனி கோஷ்டிகள் எதுவும் கிடையாது. பதவியேற்ற பிறகு கொரோனா விவகாரம் வந்ததால்தான் மாநிலத் தலைவர், நிர்வாகிகளைச் சந்திக்கவில்லையே தவிர நீங்கள் சொல்வதுபோல் எந்த பிரச்னையும் கிடையாது.

கே.எஸ் நரேந்திரன்
கே.எஸ் நரேந்திரன்

எல்.முருகன் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் அரவணைத்துத்தான் செல்கிறார். தமிழக நிர்வாகிகள் சொல்வதை அப்படியே டெல்லி தலைமை கேட்கமாட்டார்கள். முழுமையாக விசாரித்துத்தான் செயல்படுவார்கள். மற்ற கட்சிகளைப்போல பா.ஜ.க இல்லை. ஒரு சிலர் பேசுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்லமுடியாது" என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு