Published:Updated:

'புதின் - ஜி ஜின்பிங் சந்திப்பு; உக்ரைன் வந்த ஜப்பான் பிரதமர்' - அடுத்த கட்டத்துக்கு நகர்கிறதா போர்?

புதின் - ஜின்பிங் சந்திப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். மறுபுறம் உக்ரைனுக்கு ஜப்பான் பிரதமர் சென்றிருக்கிறார். இதையடுத்து, போர் அடுத்தகட்டத்துக்கு நகர்கிறதா என்ற கேள்வியெழுகிறது.

Published:Updated:

'புதின் - ஜி ஜின்பிங் சந்திப்பு; உக்ரைன் வந்த ஜப்பான் பிரதமர்' - அடுத்த கட்டத்துக்கு நகர்கிறதா போர்?

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். மறுபுறம் உக்ரைனுக்கு ஜப்பான் பிரதமர் சென்றிருக்கிறார். இதையடுத்து, போர் அடுத்தகட்டத்துக்கு நகர்கிறதா என்ற கேள்வியெழுகிறது.

புதின் - ஜின்பிங் சந்திப்பு

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோ படையில் இணைய முயற்சி மேற்கொண்டது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.

உக்ரைன் பாக்முட் நகரம்
உக்ரைன் பாக்முட் நகரம்

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் இரண்டு நாடுகளுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்துவருகிறது. கடந்த மாதம் உக்ரைனுக்குத் திடீரென பயணம் மேற்கொண்ட அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில், சீன அதிபராக மூன்றாவது முறையாகப் பதவியேற்ற ஜி ஜின்பிங், ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக இருவரும் எழுதியிருக்கும் கட்டுரையில் அமெரிக்காவுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார்கள்.

ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங்

இதையடுத்து, இந்தப் போரில் சீனாவின் நிலைப்பாடு மாறுவதாக அச்சம் தெரிவித்துவருகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இதற்கிடையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கடந்த 21-ம் தேதி திடீரென உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் போர் நிலவரம் குறித்தும், இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஜப்பான், ஜி7 நாடுகள் உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜெலன்ஸ்கியிடம், ஃபுமியோ கிஷிடா உறுதியளித்தார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா

அந்த நேரத்தில் ஜப்பான் கடல்மீது ஏழு மணி நேரத்துக்கும் மேலாக ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்கள் (Tupolev Tu-95MS) பறந்தன. இந்த விமானங்கள் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. தனது அணு ஆயுத வலிமையை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்யா பறக்கச் செய்தது. இது குறித்து அந்த நாடு, "இது சர்வதேச சட்டத்துக்குக் கடுமையான இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது" என தெரிவித்திருக்கிறது.

இது சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குக்குள் உக்ரைன் மீதான தனது தாக்குதலை, ரஷ்யா மேலும் தீவிரப்படுத்திருக்கிறது. ஒரே இரவில் சில நகரங்களில் ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. இதில் அந்த நாட்டில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டது.

உக்ரைன் பாக்முட் நகரம்
உக்ரைன் பாக்முட் நகரம்

இதில் ஒருவர் இறந்திருக்கிறார். மேலும் 25 பேர் காயமடைந்திருக்கிறார்கள். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று பட்டப்பகலில் ஏவுகணையால் தாக்கப்பட்டபோது வெடித்த பாதுகாப்பு கேமரா வீடியோவை ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும் அவர், "சாதாரண மக்களும் குழந்தைகளும் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. இது உக்ரைனிலோ அல்லது உலகில் வேறு எங்குமோ இன்னொரு நாள் நடக்கக் கூடாது. ரஷ்ய பயங்கரவாதத்தை விரைவாக தோற்கடிக்கவும் உயிர்களைப் பாதுகாக்கவும் உலகுக்கு அதிக ஒற்றுமையும் உறுதியும் தேவை.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

ஒவ்வொரு முறையும் மாஸ்கோவில் 'சமாதானம்' என்ற வார்த்தையை யாராவது கேட்க முயலும்போது, ​​குற்றவியல் தாக்குதல்களுக்கு மற்றோர் உத்தரவு வழங்கப்படுகிறது" என தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் பாக்முட் பகுதியில் தற்காப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிற உக்ரேனிய படைகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

இதேபோல் அந்த நாட்டின் தலைநகருக்கு தெற்கில் இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டு தங்குமிடங்கள் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். வடக்கு உக்ரைன் தலைநகரம் முழுவதும் சைரன்கள் ஒலித்தன.

இதற்கிடையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் - ரஷ்யா அதிபர் புதின் சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீனா, `இந்த உறவு இரு தரப்பு நோக்கத்துக்கு அப்பாற்பட்டது. உலகளாவிய நிலப்பரப்பு, மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கான முக்கியமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது’ என்ற கருத்தை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

சீனா அதிபர் ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
சீனா அதிபர் ஜின்பிங் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ட்விட்டர்

மேலும் ஜி ஜின்பிங், "இப்போது 100 ஆண்டுகளில் நடக்காத மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. நாங்கள் ஒன்றாக இருக்கும்போது, ​​இந்த மாற்றங்களைச் செயல்படுத்துகிறோம்" என்று புதினிடம் தெரிவித்தார். அதற்கு புதின், "நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறினார். பின்னர் ஜி ஜின்பிங், "அன்புள்ள நண்பரே, தயவுசெய்து உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்" என்றார் எனத் தெரிவித்திருக்கிறது.

உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேறுமாறு சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வெள்ளை மாளிகை வலியுறுத்தியது. ஆனால், அவர் நட்பு பாராட்டிவிட்டு வந்திருக்கிறார். இதனால் ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணத்தையும் விமர்சித்தது அமெரிக்கா. இதையடுத்து, சர்வதேச அரசியல் நோக்கர்கள், உக்ரைன் போர் வரும் காலங்களில் மேலும் உக்கிரமடைய வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.