Published:Updated:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் மெத்தனமா?! - சர்ச்சையும் அமைச்சரின் விளக்கமும்

அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சில கோரிக்கைகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் மெத்தனமா?! - சர்ச்சையும் அமைச்சரின் விளக்கமும்

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சில கோரிக்கைகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

Published:Updated:
அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் ஆசிரியர்களுக்கும் அமைச்சருக்கும் இடையே பனிப்போர் நடப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

நம்மிடம் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர், ``தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனங்கள் அவ்வளவாக நடைபெறவே இல்லை. பல பள்ளிகளில், ஒரேயோர் ஆசிரியரே பணியாற்றிவரும் கொடுமையும் நடந்துவருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஆசிரியர்கள் மட்டுமின்றி, மற்ற அரசுத்துறை அதிகாரிகளின் ஏக்கமும்கூட. ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் இதைத் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது வாடிக்கை. நடைமுறைக்குச் சாத்தியப்படுவது சிரமம் என்றாலும், குறைந்தபட்சம் அதைப் பேசவாவது செய்கிறார்களே என்று மனதைத் தேற்றிக்கொண்டிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், திடீரென பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியது எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டுவிட்டது. அதுபற்றி அன்பில் மகேஸ் ஒரு வார்த்தைக்கூடப் பேசாதது, எல்லோரும் சேர்ந்துகொண்டுதான் செய்துள்ளனர் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனினும், முதல்வர் ஸ்டாலின் இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை பொறுமை காத்துவருகிறோம்.

அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ்
அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ்

இந்தச் சூழ்நிலையில், தனியார் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டதுபோல, அரசுப் பள்ளிகளிலும் ஜூன் ஒன்றாம் தேதி முதலே மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என அமைச்சரை வலியுறுத்தினோம். ஆனால், அதை அமைச்சர் அன்பில் மகேஸ் நிராகரித்துவிட்டார். தற்போது ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகுதான் புதிய மாணவர் சேர்க்கையே தொடங்கப்படவிருக்கிறது. இப்படியிருந்தால் எப்படித் தனியார் பள்ளிகளுடன் போட்டிபோட முடியும்... கொரோனாவுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் 16 லட்சம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்திருப்பதாக அரசு பெருமைப்பட்டுக்கொள்கிறது. அது நீடிக்க வேண்டுமென்றால், தனியார் பள்ளிகளுடன் சேர்ந்தே மாணவர் சேர்க்கையைத் தொடங்கியிருக்க வேண்டும். இனி, புதிய மாணவர் சேர்க்கை குறைந்தால் அதற்குக் காரணம் அமைச்சர் அன்பில் மகேஸ் மட்டுமே” என்றனர்.

மறுபுறம், ``10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. அதேபோல், 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ம் தேதியும், 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ம் தேதியும் வெளியாகின்றன. விடைத்தாள் திருத்தும் பணியிலும் சில இடர்ப்பாடுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் சந்திக்கிறார்கள். அவற்றை நிவர்த்தி செய்துதர, அவ்வப்போது கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறார்கள். எனினும், அமைச்சர் கண்டுகொள்வதே இல்லை” என்றனர்.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு
ப்ளஸ் டூ பொதுத்தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறனிடம் கேட்டபோது, “ஜூன் 2-ம் தேதி போராட்டம் நடைபெற்றது உண்மைதான். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பழைய கோரிக்கைகளை வைத்துத்தான் போராட்டம் நடந்தது. ஜூன் 1-ம் தேதி முதல் புதிய மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அமைச்சர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஜூன் 13-ல் பள்ளிகள் திறந்த பின்னர்தான் புதிய மாணவர் சேர்க்கையும் நடைபெற வேண்டும் என்று கறாராகச் சொல்லிவிட்டார். இது ஒருவகையில் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், பெரிய அளவில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” என்றார் உறுதியாக.

பி.கே.இளமாறன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
பி.கே.இளமாறன், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் விளக்கம் கேட்டோம். "நான் ஒப்புக்கொள்ளவில்லை என்பதெல்லாம் இல்லை. இது நார்மலான புராசஸ்தான். விண்ணப்பங்கள் கொடுக்கத் தொடங்கியிருப்பது உங்களுக்கேகூடத் தெரிந்திருக்கலாம். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம். எல்லோரும் பள்ளியில் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும் என்று சர்குலர் மூலம் சொல்லியிருக்கிறோம். விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து கொடுத்துவிட்டு, ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்பட்டதும் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பெற்றோர் விருப்பத்துடன் இருப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது. மற்றபடி, எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை" என்றார் தெளிவாக.