Published:Updated:

காங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தியைத் தவிர வேறு தலைவர்களே இல்லையா?! - ஓர் அலசல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

தலைமையை ஏற்க மறுத்த பிறகும் ராகுல் காந்தியைத் தொடர்ந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதற்கான காரணம் என்ன... நேரு குடும்பத்தினரல்லாத வேறு ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வாய்ப்பில்லையா?!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்து கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட சோனியா காந்தி தற்போது வரை அந்தப் பதவியில் நீடிக்கிறார். கட்சியின் தலைமையை ஏற்கச் சொல்லி, பலமுறை ராகுலிடம் பலரும் கேட்டுப் பார்த்து அவர் தீர்க்கமாக மறுத்துவருகிறார். தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பது குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திலும் தலைவர் குறித்த பிரச்னையை அதிருப்தி தலைவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பேசிய சோனியா காந்தி, ``நான்தான் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர். நான் வெளிப்படையாகப் பேசுவதை எப்போதும் பாராட்டிவந்திருக்கிறேன். யாரும் ஊடகங்கள் வழியாக என்னுடன் பேசத் தேவையில்லை. இங்கே நாம் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விவாதிக்கலாம். இந்த நான்கு சுவர்களுக்கு வெளியே பேசக்கூடியது, காரிய கமிட்டி கூட்டத்தில் எல்லோரும் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவைப் பற்றித்தான் இருக்க வேண்டும்” எனக் கடுகடுத்திருக்கிறார்.

ராகுல் காந்தி போராட்டம்
ராகுல் காந்தி போராட்டம்

ராகுல் தலைமையை ஏற்க மறுத்த பிறகும் அவரைத் தொடர்ந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதற்கான காரணம் என்ன? முந்தைய காலங்களில் நேரு குடும்பங்களைச் சேராத பலரும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று நடத்தியிருக்கிறார்கள். அப்படி இப்போது வேறு ஒருவரைத் தலைவராக்க முயலாதது ஏன்?

பிரியங்கா காந்தியை தலைமையாக முன்னிறுத்துகிறதா காங்கிரஸ்? - பாஜக-வை வீழ்த்த புதிய மூவ்?

மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் பேசினோம். ``நேரு குடும்பம் தியாகம் செய்த, சிறைக்குக்குச் சென்ற, காங்கிரஸை வளர்த்த குடும்பம் என்பது ஒரு காலத்தில் அந்தக் கட்சிக்கு பலமாக இருந்தது. அதனால் கட்சியும் வளர்ந்தது. ஆனால், இப்போது அதுவே அந்தக் கட்சிக்குப் பலவீனமாகிவிட்டது. இடைக்காலத்தில் வேறு சிலர் கட்சியின் பொறுப்புக்கு வந்தபோது அந்தக் கட்சி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. சோனியா காந்தி இத்தாலி நாட்டினர், கிறித்தவர். அப்படிப்பட்டவர் `இந்து தேசமான இந்தியாவுக்குத் தலைவராக வேண்டுமா?’ என பா.ஜ.க-வினர் சோனியா காந்தி குறித்து விமர்சித்துவருகிறார்கள். அவர்கள் செய்யும் இந்த மதத் துவேஷ, வகுப்புவாதப் பிரசாரங்கள் பல இடங்களில் எடுபடுகின்றன. அதனால்தான் இந்தியாவில் பா.ஜ.க வெற்றிபெறுகிறது என நான் சொல்வேன். இதை வெளிப்படையாக இல்லாமல் வீட்டுக்கு வீடு சென்று கிறித்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்துவருகிறார்கள். காங்கிரஸை ஒருங்கிணைக்க நேரு குடும்பம் நிச்சயம் தேவை. அந்த இடத்தில் ராகுல் காந்தியை வைத்துப் பார்க்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

பிரியன்
பிரியன்

சோனியா மீதான எந்த விமர்சனத்தையும் ராகுல் காந்தி மீது வைக்க முடியாது. பா.ஜ.க-வின் திட்டங்கள், செயல்பாடுகள் என அனைத்துக்கு எதிராகவும் ராகுல் மிகத் தீவிரமாக எதிர்வினையாற்றிவருகிறார். இளைஞராகவும் இருப்பதால் ராகுல் மட்டுமே பா.ஜ.க-வுக்கு எதிராக, காங்கிரஸை ஒருங்கிணைக்கும் ஒரே தலைவர் என அக்கட்சியின் தொண்டர்கள் நம்புகிறார்கள். அதில் தவறும் இல்லை” என விளக்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுலைவிட்டால் காங்கிரஸை வழிநடத்த வேறு தலைவர்களே இல்லையா என அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லஷ்மி ராமச்சந்திரனிடம் கேட்டோம்... ``இந்தியா முழுவதும் ஒப்புக்கொள்பவராகவும், கட்சித் தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாகவும் இருப்பவர்தான் தேசியக் கட்சிகளுக்குத் தலைவராக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருக்க முடியாது. மாநிலங்களில் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் அந்தந்த மாநிலத் தொண்டர்களுக்கு மட்டுமே அதிகம் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் மாநிலத் தலைவர்கள் தேசிய காங்கிரஸ் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தேசியத் தலைவராகும் அளவுக்கு வளரவில்லை என்றுதான் சொல்வேன். தலைவர் என்பவர் தானாக வளர வேண்டும். காமராசர் அப்படித்தான் தலைவரானார். இப்போது இருக்கும் சூழல் அப்படியான தலைவர்கள் வளர்வதற்கு ஏதுவாக இல்லை. அதேவேளையில் கட்சியில் ஆளுமைகளே இல்லையென்று சொல்லிவிடவும் முடியாது.

லஷ்மி ராமச்சந்திரன்
லஷ்மி ராமச்சந்திரன்

பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவில் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிக்குத் தலைவராக ராகுல் காந்தி போன்ற ஒருவரால்தான் முடியும் என்கிறேன். எதிர்காலத்தில் இந்தச் சூழல் மாறலாம். ஆனால், இப்போதைக்கு ராகுல் காந்தி மட்டுமே பொருத்தமாக இருப்பார்” என பதிலளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு