மக்களின் தேர்வு இதுவா? அதுவா? - உண்மை நிலையை உணர்த்தும் ஒரு தேர்தல் குட்டிக்கதை! #MyVikatan

தமிழக வாக்காளர்களின் இந்த மனநிலையை, அரசியல் புனைவாக வழங்கப்பட்டுவரும் ஒரு குட்டிக்கதை தெளிவாகப் பிரதிபலிக்கும்!
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
- அகன் சரவணன்
"யுத்தம் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல். அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத யுத்தம்" என்பது அரசியலின் பாலபாடம் என்று கூறுவர். "சேவை" என்னும் தளத்திலிருந்து, "தொழில்" என்னும் தளத்திற்கு இயல்பான முறையில், காலத்திற்கேற்ப மடைமாற்றம் அடைந்திருக்கும் இன்றைய இந்திய அரசியலை அரிஸ்டாட்டிலின் பார்வை கொண்டு நிச்சயமாய் நாம் அளவிட இயலாது.

சாமானியர்கள் அதிகம் வாக்களிக்கும் இந்தியத் தேர்தல்களில், அதிலும் திருமங்கலம் ஃபார்முலாவை அரியதெரு கொடையாக உலகிற்கே அள்ளி வழங்கிய தமிழகத் தேர்தல்களில், வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் "வைட்டமின் ப" பெரும்பங்கு வகிப்பதை நாம் மறுத்துவிட முடியாது.
கொடுப்பதால் வாங்குகிறோம் மற்றும் வாங்குவதால் கொடுக்கிறோம் என்ற இருதரப்பு வாதங்களுமே முற்றிலும் அறமற்றவை. அரசுகளின் தவறான பல்வேறு அணுகுமுறைகளால், இன்று அடிப்படைப் பொருட்களின் விலை வானளவு உயர்ந்து நிற்கின்றது. ஒவ்வொரு சாமானியனுக்கும் பணம் என்னும் இடையீட்டுக் கருவியின் தேவையைக் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்ததில் ஆண்டவர்கள் மற்றும் ஆள்பவர்களின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையாகாது!

உதிரிக் கட்சிகளுக்கும், புதிதாக உதித்த கட்சிகளுக்கும் அளிக்கும் தங்களின் வாக்கு, பயன் ஏதுவுமின்றி வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில், அன்றைய களத்தில் இருக்கும் முதன்மையான இரண்டு தீமைகளில் குறைவான தீமையைக் கண்டறிந்து வாக்களிப்பதே சாலச்சிறந்த முடிவாகக் காலந்தோறும் பெரும்பாலான வாக்காளர்களால் கைக்கொள்ளப்படுகிறது. பணம் பெற்று வாக்களிக்கும் கடைநிலை வாக்காளர்கள், பணத்தை முற்றிலும் தவிர்த்து வாக்களிக்க விரும்பும் நடுநிலை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இருக்கும் இன்றைய தேர்வு இது அல்லது அது என்பதாகவே இருக்கிறது!
தமிழக வாக்காளர்களின் இந்த மனநிலையை, அரசியல் புனைவாக வழங்கப்பட்டுவரும் ஒரு குட்டிக்கதை தெளிவாகப் பிரதிபலிக்கும்!

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தானாம். அவன் தன் குடிமக்களிடம் ஒரு மூட்டை நெல் கொடுத்து, ஒரு மூட்டை அரிசி கேட்டுக் கட்டாயப்படுத்துவானாம். நெல்லைப் பிரித்து எடுக்கும் போது பாதி மூட்டை உமியாகப் போய் விடுவதால், மக்கள் கைக்காசுப் போட்டுப் பாதி மூட்டை அரிசி வாங்கி, ஒரு மூட்டை அரிசியாக அரசனிடம் கொடுப்பார்களாம். அரசவையில் பரிசு கொடுப்பது போலக் கொடுத்து, பின்னர் தன் வீரர்களை மாறுவேடத்தில் அனுப்பி அவற்றைக் கவர்ந்து கொள்வானாம்.
அரசு கஜானா செல்வத்தை மக்கள் நலத்திட்டங்கள் எனும் பெயரில் தன் வாரிசுகளின் பெயர்களுக்கு மாற்றிவிடுவானாம். வெளிநாடுகளிலிருந்து பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தம் குடிமக்களிடம் அதிக விலைக்கு விற்பானாம். இத்தகைய செயல்பாடுகளால் அவனை மோசமான அரசன் என்று மக்கள் தூற்றினார்களாம். ஒரு நாள் மரணப்படுக்கைக்குச் சென்ற அரசன், அடுத்து அரசனாக இருக்கும் தன் மகனிடம் "எனக்கு மக்களிடம் எப்படியாவது நல்ல பெயர் கிடைக்கச் செய்ய வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் இறந்து விட்டானாம்.

அடுத்து அரசனான மகன் போதுமான திறமையற்றவன். தனது தந்தையின் இறுதிக்கால விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவன் பெரிதாக அக்கறை காட்டவில்லை. தனது விருப்பம் போல அவன் ஆட்சி செய்யத் தொடங்கினானாம். இந்த அரசன் மக்களிடம் ஒரு மூட்டை உமி மட்டும் கொடுத்து, ஒரு மூட்டை அரிசி கேட்டானாம். மக்கள் முழு மூட்டை அரிசியும் காசு போட்டு வாங்கிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இந்த அரசனது வீரர்கள் மக்கள் பணத்தை வரி எனும் பெயரில் நேரடியாகவே கொள்ளை அடித்தார்களாம்.
அரசு கஜானாவிலிருந்த செல்வத்தை எடுத்து நாட்டின் பெரிய பணக்காரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தானாம். உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மிக மிக அதிக விலைக்கு விற்கப்பட்டனவாம். இவற்றையெல்லாம் பார்த்த மக்கள் "இவனை விட இவன் தந்தை சிறந்தவன் என்றும், மகனை விடத் தந்தை நல்லவன்" என்றும் கூற ஆரம்பித்தார்களாம்.

இவ்வாறு தந்தையின் கடைசி ஆசையை எந்தவித முயற்சியும் செய்யாமலேயே மகன் நிறைவேற்றினானாம். இந்தக் கதையில் வரும் தந்தை-மகன் போலவே இன்றைய இரு பிரதானக் கட்சிகளையும் மக்கள் நோக்குகின்றனர். யார் தந்தை?, யார் மகன்? என்பது அவரவர் சிந்தனைக்கே! மோசமான நிர்வாகம் என்று முந்தைய தேர்தலில் மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அடுத்த ஆட்சியுடன் ஒப்பிடப்பட்டு மக்களால் திறனாய்வு செய்யப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளால், தற்போதைய ஆட்சியைவிட முந்தைய ஆட்சி பரவாயில்லை அல்லது மோசம் என்ற முடிவு தமிழக மக்கள் தலையில் வலிந்து திணிக்கப்படுகிறது. "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்" என்பார் மாவோ. அதுபோலவே மக்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும் ஆட்சி நிர்வாக முறைகளே பெரும்பாலும் தீர்மானித்து விடுகின்றன.

தேர்தல் என்னும் விருந்தில் மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத் திறனே மக்களை முடிவு எடுக்கச் செய்யும் முதன்மை உணவுப்பொருளாக இருக்கின்றது. தேர்தல் அறிக்கைகள், பிரசாரங்கள், கவர்ச்சி அறிவிப்புகள், விளம்பரங்கள், கருத்து திணிப்புகள் போன்றவை விருந்தைச் சுவைக்கச் செய்யும் துணை உணவுகளே. ஆனால் தேர்தலை ரசித்துக் கொண்டே சிந்திக்கும் மக்களின் மனதில், "அரசனை விட,அவனது மகன் என்றாவது சிறப்பான ஆட்சியைத் தந்துவிட மாட்டானா?" என்ற ஏக்கம் மட்டும் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது!
இதுபோல நீங்களும் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை பின் வருமாறு.
கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;
தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ
உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.