Published:Updated:

திரிபுரா: திரிணாமுல் காங்கிரஸுக்குச் செல்லும் 9 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்? - கவிழ்கிறதா பா.ஜ.க அரசு?!

மோடி - மம்தா, திரிபுரா அரசியல்
மோடி - மம்தா, திரிபுரா அரசியல்

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாக, திரிபுரா அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் திரிபுராவில் முகாமிட்டிருக்கின்றனர். இந்தப் பரபரப்பின் பின்னணியில் இருப்பது யார்... என்ன நடக்கிறது அங்கே?

1998-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் திரிபுராவை ஆட்சி செய்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மாணிக் சர்க்கார். 2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்குத் தாவிய 30-க்கும் மேற்பட்டோருக்கு சீட் வழங்கியது அந்தக் கட்சி. இதன் மூலம் பலம் வாய்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஓரம்கட்டி, அங்கு ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவிட 1.3 சதவிகித வாக்குகள் மட்டுமே பா.ஜ.க அதிகம் பெற்றிருந்தாலும், 60 தொகுதிகளில், 36 தொகுதிகளைக் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கட்சியால் 16 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதனால், பிப்லப் குமார் தலைமையில் அங்கு ஆட்சியமைத்தது பா.ஜ.க.

பா.ஜ.க கொடி
பா.ஜ.க கொடி
Vikatan

இந்தநிலையில், திரிபுராவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப் ராய் பர்மான் தலைமையில் ஒன்பது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சமீபத்தில் டெல்லி சென்றதாகவும், அங்கு தேசியத் தலைவர்களைச் சந்தித்து பிப்லப் குமாரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கோரிக்கைவிடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் திரிபுராவில் முகாமிட்டு, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களை நேரில் சந்தித்துவருகின்றனர். இதனால் திரிபுரா அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்கு முன்பாகவே, மற்றொரு பரபரப்பான தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லி சென்ற ஒன்பது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. `இது வெறும் வதந்திதான்' என்று பா.ஜ.க-வினர் சொல்லிவந்தாலும், திரிபுராவில் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருவது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

பின்னணி என்ன?

திரிபுரா பா.ஜ.க அரசில் 2018 முதல் 2019 வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் சுதீப் ராய் பர்மான். `பர்மான் கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்' எனச் சொல்லி, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் பிப்லப் குமார். இதனால் அதிருப்தியில் இருந்துவந்தார் சுதீப் ராய் பர்மான். சுதீப் ராய் பர்மான் பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாக காங்கிரஸிலும், திரிணாமுல் காங்கிரஸிலும் இயங்கிவந்தவர். 2013 திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற இவர், பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இவரோடு சேர்ந்து ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவினர். 2017-ல் ஐந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துக்கொண்டு, பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார் இவர்.

44 மாதங்களாக பா.ஜ.க-வில் இருந்துவிட்டு, தற்போது மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கும் முகுல் ராய்க்கு நெருக்கமானவர் சுதீப் ராய் பர்மான். இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் சந்திப்புக்குப் பின்னர்தான், சுதீப் ராய் பர்மான் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒன்பது பேரை அழைத்துக்கொண்டு டெல்லி சென்றதாகத் தெரிகிறது.

முகுல் ராய், சுதீப் ராய் பர்மான்
முகுல் ராய், சுதீப் ராய் பர்மான்

இந்தச் சம்பவத்தால் திரிபுரா பா.ஜ.க-வில் கலகம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கலகத்தை சரிக்கட்ட, தேசியத் தலைமை சில முக்கிய பா.ஜ.க தலைவர்களைத் திரிபுராவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது. பா.ஜ.க-வின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், வடகிழக்கு மாநிலங்களின் அமைப்புச் செயலாளர் அஜய் ஜம்வால், திரிபுரா பா.ஜ.க-வின் பொறுப்பாளர் பனிந்த்ரநாத் ஷர்மா ஆகியோர் இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

உட்கட்சி விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு, ``கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை'' என்பதைத்தான் திரிபுரா பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாகத் தெரிவித்துவந்தனர். இந்தநிலையில், இது தொடர்பாகப் பேசிய திரிபுரா பா.ஜ.க தலைவர் மாணிக் சாஹா, ``எந்த எம்.எல்.ஏ-வும் கட்சியின்மீது கோபமாக இல்லை. கட்சியைப் பலப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலோசனைக் கூட்டங்கள். குடும்பம் என்றிருந்தால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதுபோலத்தான் கட்சியிலும். பிரச்னைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்களோடுதான் இருக்கின்றனர்'' என்றார்.

ஒன்பது அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில், பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், ``கட்சிக்குள் பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால், நாங்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸில் இணையப்போகிறோம் என்பதெல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள். கட்சி மேலிடத்திடம் எங்களது பிரச்னையைக் கொண்டு சென்றிருக்கிறோம். இனி கட்சி மேலிடம் அதைப் பார்த்துக்கொள்ளும்'' என்று கூறியிருக்கிறார்.

தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, சுதீப் ராய் பர்மானுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடமளிப்பதாகக் கூறப்பட்டதாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மம்தா பானர்ஜி - அமித் ஷா
மம்தா பானர்ஜி - அமித் ஷா
2024 நாடாளுமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை வீழ்த்த பி.கே-வோடு இணைந்து மம்தாவும் சரத் பவாரும் திட்டமா?

திரிபுரா பா.ஜ.க-வில் நிகழ்ந்துவரும் சம்பவங்களை அடுத்து, அங்கு பா.ஜ.க அரசு கவிழுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள் சிலர், ``திரிணாமுல் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்குச் சென்ற சிலர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கு வந்துவிட்டனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு செயல்பட்டுவரும் மம்தா, திரிபுராவிலும் பா.ஜ.க-வுக்குச் சென்ற தனது கட்சி ஆட்களை மீட்டெடுக்க நினைத்திருக்கலாம். மேற்கு வங்கம் தவிர்த்து வெளி மாநிலங்களிலும் தனக்கு பலம் இருப்பதைக் காட்டுவதற்கான யோசனை மம்தாவிடம் நிச்சயமாக இருக்கும். அதன் முதல்படியாக இது இருக்கலாம்.

2013 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஆனால், 2016-ல் ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். 2018 தேர்தலில், இவர்களைக்கொண்டு சில இடங்களிலாவது ஜெயிக்கலாம் என்று நினைத்தது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே அந்த ஆறு பேரையும் தன் வசம் இழுத்துக்கொண்டது பா.ஜ.க. இதன் காரணமாக, 2018 திரிபுரா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு 0.3 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தற்போது மீண்டும் திரிபுராவில் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களை திரிணாமுல் பக்கம் இழுக்க, முகுல் ராய் மூலம் மம்தா காய்நகர்த்துவதாகத் தெரிகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, சுதீப் ராய் பர்மான் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸில் இணைய வாய்ப்பிருக்கிறது. மற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கட்சி மேலிடம் பேசிச் சரிசெய்துவிட்டதாகவே தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, அங்கு பா.ஜ.க அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை'' என்கிறார்கள் தெளிவாக.

அடுத்த கட்டுரைக்கு